கதை: இவர் ‘எனக்கு வேணும்!’
-சுருதி – அவுஸ்திரேலியா
பூப்புனித நீராட்டுவிழாவுக்குச் சென்றிருந்தோம். வழக்கம்போல அலங்கார மேடை, கண்ணைப் பறிக்கும் சோடனைகள். சினிமாப்பாடல்கள் காதைப் பிழந்தன. வட்ட வடிவ மேசையும் கதிரைகளும் போட்டிருந்தார்கள். அதற்கு வடிவான சட்டைகளும் போட்டிருந்தார்கள். நானும் மனைவியும் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம். சற்று நேரத்தில் ஒரு முதியவர், அவரின் மனைவி, மகள், மருமகன், இரண்டு பிள்ளைகள் வந்து அருகே அமர்ந்தார்கள். முதியவருக்கு எழுபதிற்கு மேல் இருக்கும். கதைக்காமல் எல்லாவற்றையும் நோட்ட மிட்டபடி இருந்தார்.
மேசையில் சிவப்புக்கலரில் ஹகோலாவும்’, மஞ்சள் கலரில் ஹபன்ராவும்’, நீர்ப்போத்தலும் இருந்தன. மேசைக்கு இன்னமும் சோட்டீற்ஸ் வரவில்லை. முதியவர் பொக்கற்றுக்குள்ளிருந்து ஒரு சீலைப்பையை உருவி எடுத்து, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு கையை உள்நுழைத்து எதோ ஹதிரிபோஷா’ போன்ற ஒன்றை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். அவர் தனக்கான உணவை எடுத்து வந்திருக்கின்றார். அவர் உணவை முகத்தில் பூசி விளையாட, மனைவி துடைத்துவிட்டபடி இருந்தார். உணவு பிடிக்கவில்லை என அவரது முகச்சுழிப்பு சொல்லியது. அதுவரையும் சோடனைகளிலும் மின்விளக்குகளிலும் லயித்திருந்த குழந்தைகளின் கண்கள் மேசைக்குத் திரும்பின.
“ஐய் சிவப்புக்கலர்…. ஐய் மஞ்சள் கலர்…” “சிவப்பு எனக்கு வேணும்!” என்றாள் குட்டிப்பெண். “எனக்கு மஞ்சள்!” என்றான் பையன். குளிர்பானங்களின் தீங்குகள் பற்றி பிள்ளைகளுக்கு ஒரு குட்டிப் பிரசங்கம் செய்தார் அவர்களின் அம்மா. மகன் கொஞ்சம் சொல்வழி கேட்டான். குட்டிப்பெண்ணோ அந்த இடத்தைப் போர்க்கள மாக்கினாள்.
“எனக்கு வேணும்… எனக்கு வேணும்”
“பிள்ளைகளுக்கு என்ன வயது?” அருகிலிருந்த குழந்தைகளின் அப்பாவிடம் கேட்டேன். “பையனுக்குப் பத்து. பெண்ணுக்கு இரண்டு” சொல்லிவிட்டு தனது மொபைல்போனில் மூழ்கினார் அவர்.
குட்டிப்பெண் பெண் தன் ஆடையினைக் குலைத்தும், தலைமயிரைக் குழப்பியும் அட்டகாசம் போட்டாள். அம்மம்மா தண்ணீர்ப்போத்தலைத் திறந்து ஒரு பிளாஸ்ரிக் கப்பினுள் நிரம்ப ஊற்றி தன் கணவருக்குக் கொடுத்தார். பின்னர் பேரப்பிள்ளைகளுக்கு தண்ணீர் குடியுங்கள் எனப் போத்தலை நீட்டினார். தண்ணீர்ப் போத்தலைக் கண்டதும் பெண்குழந்தையின் அழுகுரலின் உரப்பு இன்னும் கூடியது. “வாருங்கோ வெளியிலை போய் ஊஞ்சல் விளையாடுவோம்” அப்பா குட்டிப்பெண்ணைத் தூக்க, அம்மாவும் பையனும் பின்னாலே போனார்கள்.
எனது மனைவி குசினிக்குள் பலகாரங்கள் பொதி செய்யப் போவதாக சொல்லிச் சென்றார். மேசையைச் சுற்றி இப்பொழுது முதிய தம்பதியினரும் நானும் மாத்திரம் இருந்தோம்.
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஹகோக்’ போத்தலை மெதுவாகத் திறந்து பிளாஸ்ரிக் கப்பின் விளிம்புவரை ஊற்றினேன். மூடியை எடுத்துப் போத்தலை மூடும்போது திடீரென எனது கையை முதியவர் பிடித்தார். தன்னிடம் போத்தலைத் தரும்படி ஜாடை காட்டினார். இந்தக் காட்சியைக் கண்டுவிட்ட அவரின் மனைவி பதறிப் போனார்.
“உங்களுக்குக் கூடாது எண்டல்லே டொக்ரர் சொன்னவர்” அவரிடமிருந்து போத்தலைப் பறித்து, கப்பின் கால்வாசிப்பகுதிக்குக் கீழாக நிரப்பினார். அது முதியவரின் வாய்க்கு ஒரு மிடறு போலாகியது.சிற்றுண்டி வந்தது.
பூப்புனித விழா ஆரம்பமாகியது.
முதியவரின் மகள் பிள்ளைகளை உள்ளே அழைத்து வருவதும் போவதுமாக இருந்தாள். குழந்தைகள் இப்பொழுது ஹகலரை’ மறந்துவிட்டனர். அல்லது ஊஞ்சல் ஆடும்போது மீண்டும் குட்டிப்பிரசங்கம் நடந்திருக்கலாம். என்னுடைய மனைவியும் வந்துவிட்டார்.
பூப்புனித நீராட்டுவிழா ஒன்றும் கலியாணவீட்டைப் போல நேரத்தைக் கொன்றுவிடும் சமாச்சாரம் அல்ல. சட்டுப்புட்டென எல்லாமே நடந்து கொண்டிருந்தன.
திடீரென முதியவர் ஹகோக்’ போத்தலை எடுத்தார். திறந்து கப்பிற்குள் நிறைஞ்சு வழியும் வரை நிரப்பினார். நான் பயந்து போனேன். பக்கத்தில் அவரது மனைவியைக் காணவில்லை. நான் மனைவிக்கு நடந்த கூத்துக்களைப் பற்றிச் சொன்னேன். பாட்டுச் சத்தத்தில் நாங்கள் கதைத்தது முதியவருக்குக் கேட்டிருக்காது. அவர் கண்களை மூடி, கோக்கின் சுகானுபவத்தில் திளைத்தார். வாயை சப்புக் கொட்டினார். திரும்பவும் கப்பிற்குள் ஊற்றக் கொண்டுபோனவர் ஏதோ சுடலை ஞானம் வந்த கணக்கில் ஊற்றுவதை நிறுத்தினார். கப்பிற்குள் ஓடித்திரிந்த இரண்டொரு துளியையும் வாயில் வைத்துத் தட்டி உறுஞ்சினார். கையினால் வாயைத் துடைத்துவிட்டார். எல்லாம் சரி. மேடையை நோக்கினார். அங்கே மேடையில் ஆரத்தி எடுப்பவர்களின் வரிசையில் அவரது மனைவி கடைசியாக நின்றுகொண்டிருந்தார்.
அவர் ஆரத்தி எடுத்து முடித்த பின்னர், தட்டுக்குள் இருந்த பூக்களை எடுத்தார். மனதிற்குள் ஏதோ நினைத்தபடி ஒருபுறம் தூக்கி எறிந்தார். அப்படியே எல்லாத் திசைகளிலும் தூக்கித் தூக்கி எறிந்தார். கடைசியாக பூக்களுடன் பின்புறம் திரும்பினர். பூப்பெய்திய பெண்ணின் நண்பி ஒருத்தி ஆரத்தி எடுத்த தட்டுகளை வாங்கி வைப்பதற்காக அங்கே நின்றாள். அவளுக்கும் ஒரு எறி. ஆவேச கோலத்தில் நாவூறு கழிக்கின்றாரோ? அல்லது தன்னுடைய கணவர் கோக் குடித்ததை அங்கிருந்து பார்த்துவிட்டாரோ?
மளமளவென்று மேடையை விட்டுக் கீழ் இறங்கி எம்மை நோக்கி வந்தார். கோக் போத்தலை முறைத்துப் பார்த்தார். ஒரு கப்பினுள் தாராளமாக அதை நிரப்பினார். போத்தல் காலியானது. மடக்கு மடக்கு என்று குடித்தார். நாங்கள் விறைத்தபடி அவரைப் பார்த்தோம். “அவருக்குத் தான் கூடாது. எனக்குப் பிரச்சினை இல்லை.”
“அவருக்கு நீரிழிவு போல” நான் மனைவிக்குச் சொன்னேன். அவரின் காதுக்குக் கேட்டுவிட்டது.
“இவருக்கு நீரிழிவும் இல்ல. ஒண்டும் இல்லை. டொக்ரர் குடிக்கக்கூடாது எண்டு சொல்லியிருக்கிறார்.” இந்தக் கூத்துக்களை மகளும் மருமகனும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு தங்கள் குழந்தைகளை மேய்ப்பதற்கே நேரம் போதவில்லை.
ஹகோக்’ போத்தலைப் பார்த்த குட்டிப்பெண், அது வெறுமையாக இருப்பது கண்டு ஏங்கிப் போனாள். உதடுகள் துடிக்க, கண்களில் கண்ணீர் விளிப்பு கட்டியது. விம்மல் பெரிதாக ஓவென்று அழுத் தொடங்கினாள். ஒன்றும் புரியாத தாய், மீண்டும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினார். “குழந்தைகளுக்குக் கூடாது, எங்களுக்குக் கூடாது, முதியவர்களுக்கும் கூடாது. அப்படியெண்டா இந்தக் குளிர்பானங்களை யார் தான் குடிப்பது? எப்பதான் குடிப்பது?” அந்த முதிய பெண்மணியைப் பார்த்துக் கேட்டேன்.
“குடியுங்கோ… ஆர் வேண்டாமெண்டது! அளவா குறைவா குடியுங்கோ. என்ரை இவர் குடிச்ச மாதிரி…”
வந்ததற்கு முதியவர் வாய் திறந்து கதைத்து நான் பார்க்கவில்லை. முதன் முறையாக அப்பொழுது புன்னகை செய்தார்.
“அவருக்கும் கொஞ்சம் குடுங்கோ…”
“நோ… நான் குடுக்கமாட்டன். அவர் குடிச்சது காணும்.” முதியவருக்கு ஒரு திருப்தி. தான் களவாகக் குடித்ததை ஒருவரும் காணவில்லை என நினைத்தார்.
“பாத்தியளே! உங்களுக்காக பரிதாபப்படவும் இஞ்சை ஒருத்தர் இருக்கிறார்.” கணவரைத் தட்டிச் சொல்லிவிட்டு சிரித்தார்.“நான் இவரிலை சரியான கவனம். இவர் எனக்கு வேணும்” சொல்லிவிட்டு அவரின் மொட்டந்தலையைத் தடவினார் அந்தப் பெண்மணி. “இவர் எனக்கு வேணும்”
1,252 total views, 2 views today