1965 இல் எமது நவிக்கேஷன்
- மாதவி
நேராகப் போங்கள் ஒரு முயல் படம் போட்ட மதில் வரும், பின் இடதுபக்கம் பாருங்கள் மதில் தூணில் நந்தி (மாடு) ஒன்று இருக்கும், அடுத்த, மதில் தூணில் யானை இருக்கும்.
இவை இரண்டுக்கும் இடையால் போகும் ஒழுங்கையால் போக, மரத்தடியில், ஒரு வயிரவர் சூலம் இருக்கும், ஒரு கூப்பிடுதூரம் கடக்க வலது பக்கம் பாடசாலை. மாமரத்தில் ஒரு தண்டவாளத்துண்டு மணி அடிக்க மரத்தில் தொங்கும், எதிர்த்தாப்போல் ஒரு வாசிகசாலை இருக்கும். மேலே சரஸ்வதி சிலை இருக்கும். அவ்விடத்தில் கேட்டால் நவசிவாயவாத்தியார் வீட்டை காட்டுவினம்.
சில சமயம் நவசிவாயா வாத்தியாரே நான்தான், என்று தன் வீட்டிற்கு கூட்டிப்போவார்.
அவருடைய வீட்டு படலைக்கு நேரே, மாடுரோஞ்சிக் கல்லும், சிறு கேணியும் இருக்கும். பொழிப்பாக கவனிக்கவும், மீண்டும் வருகில் உதவும்.
திருப்பிவரும் போது, வாத்தியார் பேரன் தெருவரைக்கும் கொண்டு வந்துவிடுவான். தெரு மூலையில் இருக்கும் கடையில் 10 சததிற்கு தோடம்பழ இனிப்பு வாங்கி கொடுக்கவும், சைக்கிள் வளையத்தை உருட்டிக்கொண்டு அவன் பறப்பான். கல் தடுக்கி சில நேரம் விழுவான். முழங்காலில் இரத்தம் சொட்டும், கவலையே படாதீர்கள், மண்ணைக் கையில் எடுத்து முழங்காலில் தடவிக்கொண்டு மீண்டும் பறப்பான்.இதுதான் 1965 இல் எமது நவிக்கேஷன். குறிதப்பாது.
1,239 total views, 3 views today