வாழ்க்கை ஒரு செவ்வகம்
அவன் வீடு கட்டி முடியவும் பெட்டை சாமத்தியப்படவும் சரியா இருக்கும்!
- Dr.T. கோபிசங்கர்- யாழ்ப்பாணம்
“ உங்களுக்கு என்ன விசரே பிள்ளைகள் எல்லாம் வளந்திட்டுது “ எண்ட பதில் அரும்பாமலே பல ஆசை இரவுகளை கருக்கி விட்டிடுது இப்ப பலருக்கு. அட ஐஞ்சு அறையோட இருக்கிற இந்தக் காலத்தில இப்படி எண்டால் அந்தக்காலத்தில ஒரே அறையில எட்டுப் பத்தெண்டு பெத்தது எப்பிடி எண்டு எனக்குத் தெரியேல்லை. “ அவள் கெட்டிக்காரி எண்டு கன பிள்ளை பெத்த அம்மாமாரை பாத்துச் சனங்கள் சொன்னது எந்தக் கெட்டித் தனத்துக்கு எண்டு அப்ப விளங்கேல்லை.
ஊரில கலியாணம் பேசேக்க சீதனமா கட்டாயமா வீடு மற்றது எல்லாம் நஒவசய. சீதனமா வீடு எண்டோன்ன ஏதோ சொத்துக் கிடைச்சிட்டு எண்டு ஆசைப்படக்கூடாது. எழுதிற வீட்டுக்கு சீவிய உரித்து வைச்சுத் தான் எழுதுவினம். அதை விக்கவும் ஏலாது ( அடகு) வைக்கவும் ஏலாது. SJ சூரியான்டை dialog மாதிரி “ இருக்கு ஆனா இல்லை”. ஆனபடியா சீதனவீட்டை போய் இருந்த படி பிறகு எல்லாரும் தங்களுக்கெண்டு ஒரு வீடு கட்டிப் போறது தான் வழமை.
யாழ்ப்பாணத்தில கலியாணம் கட்டிற ஆம்பிளைகள் எல்லாரும் வீட்டோட மாப்பிளைமார் தான். மாப்பிளைக்கு வேலை கிடைச்சோன்னயே ஊரில கலியாணம் சரிவந்திடும். பத்து வயசு வித்தியாசத்தோட பதினெட்டில ஒரு மனிசியைக் கட்டிவைப்பினம். கட்டிறாக்கள் எல்லாம் வீட்டோடை மாப்பிளை எண்ட படியால் மாமியார் மருமோள் சண்டை ஊரில குறைவு. கட்டின மனிசி கலியாணத்துக்குப் பிறகு தான் தன்டை அம்மாவைக் கேட்டு கேட்டு எல்லாத்தையும் பழகும் ஆனாலும் அடுத்த வருசமே பிள்ளை பிறந்திடும்.
வீட்டை சீதனமா வாங்கி வாற மாப்பிளைமார் சீதன வீட்டில ஒரு அறைக்குள்ளயே இருந்தபடி தான் குடும்பம் நடந்துவினம். ஆனாலும் பத்துக்கு மேல பிள்ளைப் பெத்துடுவினம். பெரும்பாலும் வெளியூரில வேலை செய்யிற மாப்பிளை வந்து நிக்கேக்க ஒரு நாள் பங்கு இறைச்சி, ஒரு நாள் கூழ் எண்டு மாமி கவனிப்பா. புருசன் கேட்டா மட்டும் பேசிற மாமி மருமோனுக்கு தீபாவளிக்கெண்டு வளக்கிற வெள்ளடியனை வெள்ளி செவ்வாய் கூடப் பாக்காம ஆவணியிலயே அடிச்சுக் குடுப்பா. மாப்பிள்ளை ஊரை விட்டு போய் நிக்கிறவர் போற இடத்தில மேஞ்சாலும் எண்டு பயத்தில மாமியார் இங்க வரேக்க சாப்பாடு போட்டு வடிவாக் கவனிச்சு அனுப்புவா.
மகள் பெத்து விட்டாலும் பேரப்பள்ளை மாரை வளக்கிறது அம்மம்மாவும், தாத்தாவும்,சித்தி மாரும் தான். பேரப்பிள்ளை பாசம் இருந்தாலும் எல்லாமே தன்டை பிள்ளைக்காகத் தான் அம்மா செய்வா. மருமோன் வந்து நிண்டா இண்டைக்கு நீ என்னோட படு எண்டு குஞ்சுகளை கூப்பிட்டு மாமியார் வழி சமைச்சுக் குடுப்பா. காலமை மகள் வேளைக்கே எழும்பி விழுந்து விழுந்து “ அவரை” கவனிக்க அம்மா சந்தோசப்படுவா.
அம்மம்மாவோட வளரிற பேரப் பிள்ளைகளுக்கு அம்மாவழி உறவுகள் நல்லதாகவும் அப்பா வழி எல்லாம் வெத்தாகவுமே காட்டப்படுறதால அநேமா அம்மாவழி உறவுகள் பலமாக இருக்கிறது தவிர்க்க முடியாததாகிவிடும். அதோட வாற மூத்த மருமோனுக்கு எல்லாம் நீங்க தான் எண்டு தூக்கித் தலப்பா கட்டி மச்சாள், மச்சான் மாரைக் கரை சேக்கிற பொறுப்பை குடுத்திடுவினம். மகன் அங்காலயே மினக்கடிறதால தான் சம்மந்திமார் முறுகல் வாறது. அப்ப ஒரு காலத்தில அக்கா செத்தாலோ வருத்தமாப் போனாலோ தங்கச்சி இலவச இணைப்பாக் கிடைக்கும் எண்டு தேடிக் கட்டினாக்களும் இருக்கினம்.
பிள்ளைகளை பெத்து, வளர்த்து காசை செலவளிச்சாலும் அதுக்குள்ளேயும் கொஞ்சம் கொஞ்சமா மிச்சம் பிடிச்சு தங்களுக்கு எண்டு ஒரு வீட்டைக் கட்டுவினம் வாங்கின சீதனக் காணியில. எல்லா ஆம்பிளைகளுக்கும் வீடு எண்டது ஒரு வாழ் நாள் சாதனை. அப்பாமார் ஒரு நாளும் அலட்டிறேல்லை ஆனாலும் அவைக்கு பெருமை எண்டால் உழைச்சு கட்டின வீடு தான். அந்தக் கட்டின வீட்டை இருந்து கட்டையில போறது தான் கனவு. ஆம்பிளை குடும்பத்தைப் பத்தி ஒண்டும் கதைக்காதவன் ஆனா ஊரெல்லாம் வீட்டைப் பத்தி மட்டும் கொஞ்சம் கூட்டிச் சொல்லுவான். அவன் வீடு கட்டி முடியவும் பெட்டை சாமத்தியப்படவும் சரியா இருக்கும்.
சாமத்தியப்பட்ட பிள்ளையை சாட்டி வீடு மாறிப் போறவன் தன்டை வீடு எண்டு நாலைஞ்சு வருசம் தென்னை மாவெண்டு நட மகள் கலியாணம் கட்டி வர திருப்பியும் தனி அறை வாழக்கைக்கு தள்ளப்படுவான். இப்பிடி மகன், புருசன் அப்பா எண்ட முக்கோண வாழ்க்கை வட்டம் ஒரு செவ்வக அறைக்குள்ளயே தொடங்கி அதுக்குள்ளயே முடிஞ்சடும்.
சின்னனில வீட்டை இருக்கிற ஒரு extra அறையும் பொம்பிளைப்பிள்ளை, குமர்ப்பிள்ளை, வளந்த பிள்ளை எண்ட பேரில பொம்பிளைகளுக்கே குடுபடும். பெடியளுக்கு privacy என்னவோ கக்கூஸில மட்டுந்தான். கிணத்தடீலயே குளிச்சிட்டு உடுப்பு மாத்தீட்டு அந்த ஒண்டையே அண்டைக்கு முழுக்கப் போட்டு திருப்பியும் இரவு கொடீல இருக்கிற சாரத்தை மாத்தி, தோய்க்கிற பஞ்சீல ரெண்டாம் நாத்தும் அதே உடுப்பை போட்டுக்கொண்டு திரிவாங்கள் ஆனாலும் சாரத்தை மட்டும் தோய்ப்பாங்கள்.
நானும் கட்டினாப் பிறகு ஒருநாள் கடைக்குப் போக மனிசி என்னைப்பாத்து “ அப்பா முதல் நாள் நாங்கள் சந்திக்கேக்க நீங்க போட்டிருந்த பிரவுண் ரீசேட் மாதிரி ஒண்டு வாங்குவமே” எண்டு பத்து வருசத்துக்கு முன்னை நடந்ததைச் சொல்ல, எனக்கு வலு சந்தோசம், என்டை மனிசி அப்பவே என்னை வடிவாத்தான் கவனிச்சிருக்கெண்டு. ஆனாலும் சந்தோசம் தொடங்கமுதலே “ நான் என்ன போட்டிருந்தனான் ஞாபகம் இருக்கோ” எண்ட விடை தெரியாத கேள்ளவியைக் கேட்டு அண்டைக்கும் மனிசி என்னை முட்டாள் ஆக்கிச்சுது. வருசம் முழுக்க ரெண்டு உடுப்பை போடிற எங்களையும் நேரத்திக்கு ரெண்டு உடுப்பு போடிற உங்களையும் ஒப்பிட்டு ஞாபகம் இருக்கா எண்ட கேள்ளவி very biased எண்டு நான் மனிசிக்குச் சொல்ல, “உப்பிடித்தான் உம்மடை கதை எல்லாம் நல்லா சாட்டுச் சொல்லிறீர் “ எண்டு மனிசி பார்க்க நான் அமைதியானேன். பெடியளுக்கு சாப்பிடவும், இரவில படிச்சிட்டுப் படுக்கிறதுக்கும் தான் வீடு. வீட்டில இடமில்லாததால தான் பெடியள் எல்லாரும் ஒழுங்கை முடக்கு, உடைஞ்ச மதில் எண்டு தஞ்சமடைஞ்சு குறூப்பாச் சேந்து அதையே ஆக்கிரமிச்சு இருப்பாங்கள். அதில மட்டும் தான் அவங்கடை சண்டித்தனம். இதை விளங்காம அப்ப பெடியளை எல்லாம் ஊர் மேயுறாங்கள் எண்டு சொன்னது பிழை எண்டு நெக்கிறன்.
குடும்ப வாழ்க்கை இப்பிடி அறையில தொடங்கி அறைக்குள்ளேயே முடிஞ்சிடும். இதால ஒரு நல்லது கெட்ட தாவது அறையைத்தாண்டி வீட்டில நடக்கட்டும் எண்டு தான் எல்லாத்திலேம் வீடு எண்டு சேர்க்கை வாறது எண்டு நெக்கிறன். அதோட நல்லது கெட்டது எல்லாம் வீட்டை வைச்சுத் தான் செய்யிறது வழமை . கலியாண வீடு, சாமத்திய வீடு, செத்த வீடு , பூசை வீடு எண்டு. ஆனாலும் இளங்கோ கேக்கிற “சின்னவீடு எண்டு அதுக்கும் வீட்டை சேத்தது ஏன்“ எண்ட கேள்விக்கு விடை இல்லை.
784 total views, 2 views today