யாழ்ப்பாண “கதலி”

சர்வதேச சந்தையில்

பி.பார்த்தீபன்- யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தின் விவசாய உற்பத்திகளில் பிரதானமானது வாழைப்பழம். அதிலும் கதலி வாழைப்பழத்துக்கு தனியான ஒரு கிராக்கி உள்ளது. அதன் சுவை தென்னிலங்கை வரை புகழ்பெற்றிருந்தது என்பது இப்போது பழைய கதையாகிவிட்டது. கடந்த மாதத்திலிருந்து யாழ்ப்பாணக் கதவிப் பழத்தின் புகழ் சர்வதேச மயமாகிவிட்டது. ஆம்! முதல் முறையாக யாழ்ப்பாணத்திலிருந்து கதலி வாழைப்பழம் டுபாய்க்கு ஏற்றுமதியாகின்றது.

யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரையில் இது முக்கியமான ஒரு விடயம். ஆவர்களுடைய நீண்ட கால கனவு நனவாகியிருக்கின்றது. யாழ்ப்பாணத்தின் பிரதான உற்பத்திப் பொருளான வாழைப்பழம் சுத்திகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, சீப்பு – சீப்பாக வெட்டப்படு, பெட்டிகளில் மொதி செய்யப்பட்டு டுபாய்க்கு செல்லத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் “புளி வாழை” என்று சொல்லப்படும் யாழ்ப்பாண கதலி வாழைப்பழம் முதல் முறையாக சர்வதேச சந்தைக்குச் சென்றிருக்கின்றது.

தென்னிலங்கை வரை பிரபலமான யாழ்ப்பாண வாழைப்பழம் இப்போது சர்வதேச சந்தையிலும் பிரசித்தமாகிவிட்டது. யாழ்ப்பாண கதலி வாழைப்பழத்தை இப்போது டுபாயிலுள்ள சுப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கமுடியும் என்பது யாழ்ப்பாண வாழைச் செய்கையாளர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு வெற்றிச் செய்தி. இது முதலாவது கட்டம்தான். இது வெற்றியளித்தால், மேலும் சில நாடுகளுக்கும் கதலி வாழைப்பழம் செல்லலாம்.

நிலாவரையில் பதப்படுத்தல்

நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் இருந்து டுபாய்க்கு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் திட்டம் மே 3 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நிலாவரை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வாழைக்குலை பதப்படுத்தல் நிலையத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாண அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் பணிப்பாளர், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கோப்பாய், உடுவில், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட வாழைக்குலைகளே இவ்வாறு முதற்கட்டமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோப்பாய், நீர்வேலி, உரும்பிராய், தெல்லிப்பளை போன்ற பகுதிகள் வாழைச் செய்கைக்கு பெயர் போனவை. கொள்முதல் செய்யப்படும் கதலி வாழைக்குலைகள் நிலாவரையில் உள்ள வாழைக்குலை பதப்படுத்தும் நிலையத்தில் பதப்படுத்தப்பட்டு, பெட்டிகளில் அடைக்கப்பட்டு அங்கிருந்து நேரடியாக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு டுபாய்க்கு கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

ஒவ்வொரு வாரமும் 10 ஆயிரம் கிலோ

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 10,000 கிலோகிராம் வாழைப்பழத்தை வாரந்தோறும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முதலாவது கட்டம். இதன் அடுத்த கட்டமாக ஏற்றுமதித் தொகை அதிகரிக்கப்படலாம். முதலாவது கட்டம் எந்தளவுக்கு சிறப்பாக – வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது – அதற்கான வரவேற்பு எவ்வாறுள்ளது என்பதைப் பொறுத்து அடுத்த கட்டங்கள் அமையும். டுபாய் தவிர்ந்த வேறு சில நாடுகளிலும் வாழைப்பழங்களுக்கான சந்தைவாய்ப்புள்ளது.

வாராந்தம் பத்தாயிரம் கிலோவை வழங்குவது என்பது யாழ்ப்பாண வாழைக்குலைச் செய்கையாளர்களைப் பொறுத்தவரையில் கடினமான ஒரு பணியல்ல. வெளிநாட்டு சந்தை வாய்ப்பின் மூலமாக அதிக வருவாய் கிடைக்கின்றது என்பதால் அவர்கள் அதிகளவு உற்சாகத்துடனும் ஈடுபாட்டுடன் உற்பத்தி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன. இதனால் உற்பத்தியின் அளவும், தரமும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

இந்த ஏற்றுமதித் திட்டத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று – இது நூறு வீதம் இயற்கை விவசாய முறையில் செய்யப்படுகின்றது. இரசாயண உரங்கள் எதுவும் பயன்படுத்தப்படாமல் செய்கை பண்ணப்பட்ட வாழைப்பழங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில், பெரும்பாலான விவசாயிகள் இயற்கை உரங்களைத்தான் பயன்படுத்துகின்றார்கள் என்பதால் இது அவர்களுக்குப் பிரச்சினையல்ல.

முக்கியமான மைல் கல்

இந்த ஏற்றுமதித் திட்டம் தொடர்பாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரத்திடம் கருத்துக் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்;. “விவசாய உற்பத்திகளை நவீன மயமாக்குவதன் மூலமாக பெருக்கிக்கொள்வதும், அவற்றுக்கு பெறுமதி சேர்ப்பதும் அவற்றை உலக சந்தைக்கு அறிமுகப்படுத்துவதும் ஒரு முக்கியமான செயற்பாடாகும். வடமாகாணத்தில் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் நீண்டகாலமாகச் செயற்படுத்தப்பட்டு வந்தாலும், இப்போதுதான் அது முக்கியமான மைல் கல்லை எட்டியிருக்கின்றது.

எங்களுடைய யாழ்ப்பாணத்துக்கே உரித்தான கதலி வாழைப்பழம் இப்போது ஏற்றுமதிப் பொருளாக மாறியிருக்கின்றது. விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலமாக இதனைச் செயற்படுத்தி யிருக்கின்றார்கள். இந்தத் திட்டம் முன்மொழியப்பட்ட காலப்பகுதியில் நான் விவசாய அமைச்சின் செயலாளராக இருந்தேன். எங்களுடைய நீண்டகால எதிர்பார்ப்பு ஒன்று இதன் மூலமாக நிறைவேறியிருக்கின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

மேலும் திட்டங்கள் பரிசீலனையில்…

எங்களுடைய யாழ்ப்பாண வாழைப்பழ உற்பத்தியாளர்களின் கதலி வாழைப்பழங்கள் இப்போது உலக சந்தைக்குச் செல்கின்றது. இது மட்டுமன்றி இது போன்ற வேறு சிலவற்றையும் இந்தத் திட்டத்தின் கீழ் செயற்படுத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம். அதற்கான பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருக் கின்றன. குறிப்பாக, இங்குள்ள எங்களுடைய பழச் செய்கையை மேம்படுத்துவது, பழச்சாறு உற்பத்தி போன்ற பலவற்றை ஊக்குவித்து அவற்றை வெளிநாட்டுச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான செயற்திட்டங்களை முன்மொழிந்துள்ளோம். எங்களுடைய விவசாயிகள் இதன் மூலமாக நன்மையடைய முடியும்.

இந்தத் திட்டம் இலங்கையில் இப்போது இரண்டு இடங்களில் செயற்படுத்தப்படுகின்றது. ஒன்று – இராஜாங்கனையில். இரண்டாவதாக இப்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருப்பது. யாழ்ப்பாணத்தில் செயற்படுத்தப்படும் திட்டத்தின் விஷேட அம்சம் என்னவென்றால், இந்த உற்பத்திகள் அனைத்தும் நூறு வீதம் இயற்கை விவசாயத்தின் மூலமாக விளைவிக்கப்படுகின்றது என்பதுதான். அதனால், அதற்கு நிறைவான ஒரு சந்தைவாய்ப்பு ஏற்படும் என்று நான் நம்புகின்றேன்.”

இவ்வாறு யாழ்ப்பாண அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

செய்கையாளர்கள் உற்சாகத்தில்

இதன்மூலமாக எமது விவசாயிகள் அதிகளவுக்கு வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. அண்மைக்காலம் வரையில் வாழைச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் போதிய வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலை இருந்தது. கதலி வாழை கிலோ 100 ரூபாவுக்குள்தான் விற்பனையாகியது. உற்பத்தியாளர்கள் கடைகளுக்கு கொடுக்கும் போது அதனையும் விட குறைந்த விலைக்குத்தான் கொடுத்தார்கள். இதனால் போதிய வருமானத்தை வருமானத்தை அவர்களால் பெற முடியவில்லை.

இப்போது வருமானம் உறுதிப்படுத்தப்படுவதால், இந்த முயற்சியில் மேலும் பலர் இறங்குவதற்கான வாய்ப்புள்ளது. இது வேலைவாய்ப்பை அதிகரிக்கும் அந்நியச் செலாவணி வருமானமும் இதன்மூலமாக அதிகரிக்கும். பதப்படுத்தல் – பொதியிடல் – ஏற்றுமதிச் செற்பாடு என்பதற்றின் மூலம் மேலும் ஒரு தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கின்றது. இந்த அனுபவம் யாழ்ப்பாண மக்களுக்கு புதிதானதாக இருந்தாலும், மேலும் விடயங்களில் இந்த அனுபவம் அவர்களுக்கு உதவலாம்.

ஏற்கனவே சீனாவிலிருந்தும் வாழைப்பழத்துக்கான கேள்வி இருந்தது. இராஜாங்கனையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த நவம்பர் மாதத்திலிருந்து டுபாய்க்கும் இராஜாங்கனையிலிருந்து வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலையில் இந்தத் திட்டத்தின் மூலமாக 250 வாழைச் செய்கையாளா்கள் பயன்பெறுகின்றாh்கள். இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த ஏற்றுமதித் தொகையை வாராந்தம் 22,000 கிலோவாக அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகத் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவ்வாறாயின் சுமார் 750 விவசாயகக் குடும்பங்கள் இதன் மூலமாக நேரடியாகப் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பொருளாதாரத்துக்கு இது பெரும் பலமாக அமையும் என நம்பலாம்

770 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *