வீடு ஒரு வாழ்நாள் நூலகம்.
திக்குவல்லை கமால் – இலங்கை
கருவறையிலிருந்து வெளிப்பட்டது முதல் கல்லறைக்குச் சென்றடையும்வரை, எங்கோ ஒரு கூரையின் கீழ் ஒவ்வொருவரும் ஒதுங்க வேண்டியிருப்பதை எவராலும் மறுக்க முடியாது.அது தாய்வீடாகவோ தாரத்தின் வீடாகவோ தனது வீடாகவோ இருக்கலாம்.
ஒரு வீட்டின் நிலவுகைக்கு புறம் சார்ந்த காரணிகளுக்கு அப்பால், குடும்ப அங்கத்தவர்களின் அக ஆரோக்கியம் சார்ந்த காரணிகள் மிக முக்கியமானவை.இந்த அகம்சார் காரணிகள் என்றும் நின்று நிலைக்க, அதற்கான போஷாக்கை வழங்க ஒரு வீடு என்றென்றும் ஒரு நூலகமாகவும் குடும்ப அங்கத்தவர் ஒவ்வொருவரும் அதன் வாசகர்களாகவும் மாற வேண்டும்.
கல்வி என்பது குறிப்பிட்ட கால அளவாக வரையறுக்கப் பட்டுள்ளது.ஆரம்பக் கல்வி, இடைநிலை, உயர்தரம் ,பட்டக் கல்வி என்று விரிகிறது.ஒவ்வொரு நிலைக்கேற்ப பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.பரீட்சைகள் நடாத்தப் படுகின்றன.அதனையொட்டி தொழில் வாய்ப்புக்களும் பெறமுடியும்.
ஆனால் இந்த வாசிப்பு என்பது எந்தக் கால எல்லைக்கும் உட்பட்டதல்ல.எல்லாக் காலத்தையும் உள்வாங்கியது.வாழ்நாள் முழுவதும் வாசிப்பதற்கான வாய்ப்பு வீட்டில் மாத்திரமே கிடைக்கமுடியும்.
” நீங்கள் ஒரு வாசகனாகும்போது ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பிக்கிறது”- என்கிறார் தோமஸ் ஜெபர்ஸன். ‘கண்டது கற்கப் பண்டிதனாவான் ‘என்ற பழமொழியையும் ஞாபகமூட்டிக் கொள்வது பொருத்தமானதே.
ஒரு பிள்ளையைப் பொறுத்தமட்டில் வாசிப்பு எப்போது ஆரம்பிக்கிறது ? எங்கிருந்தி ஆரம்பிக்க வேண்டும்? என்பதெல்லாம் இன்றைய வியாக்கியானங்களின்படி வியப்பாக இருக்கலாம்.
ஆம் ; ஒரு தாய் கருவுற்றிருக்கும்போதே வாசிக்க வேண்டும் என்பர்.அந்த வாசிப்பு குழந்தையையும் சென்றடைந்து மூளை விருத்தியை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தையாய் மண்ணில் பிறந்து வளரவேண்டும் என்பதே எல்லாத் தாய்மார்களதும் கனவு.கர்ப்ப காலத்தில் போஷாக்கு, சுகாதார நடவடிக்கைகள் மாத்திரமன்றி நல்ல வாசிப்பும் தேவை என்பது புரிகிறதல்லவா? அதற்கு, ஏலவே வீட்டில் வாசிப்புச் சூழல் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது.
குழந்தை வளரும்போது அதன் வயதனுபவத்திற்கேற்ப சுதந்திரமாக வாசிக்கக்கூடிய சூழலும் வீட்டில் இருக்க வேண்டும்.அதுமாத்திரமன்றி, மூத்த உறுப்பினர்கள் வாசிப்பதை பிள்ளை அவதானிக்கக் கூடயதாகவும் அமைய வேண்டும்.குடும்பப் பொருளாதாரத்தின் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி பத்திரிகை, சஞ்சிகை, புத்தகம் வாங்குவதை வீண் செலவாகப் கருதும் மனோநிலையில் பல பெற்றார்கள் இருக்கின்றனர்.அது ஒரு மூலதனம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
எமது எல்லாப் பாடசாலைகளிலும் நூலகங்கள் காணப்படுவதில்லை.எவ்வாறாயினும் ஆரம்பப் பிரிவு வகுப்புகளில் வாசிப்புச் சூழல் அமையவேண்டுமென்பதை எந்தளவுக்கு சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொண்டு செயற்படுகிறார்கள் என்பது சந்தேகமானதே.
வீட்டிலோ வகுப்பறையிலோ வாசிப்புச் சூழலுக்கு உள்ளாகாத மாணவர்கள், உரத்து வாசித்தல்…வேகமாக வாசித்தல் …உறுப்பமைய வாசித்தல்…சொற்கள் இடம் மாறாமல் வாசித்தல் …போன்ற மொழித்திறன் பரீட்சிப்புகளையே வாசிப்பு என்று எடுத்துக் கொள்ளும் வாய்ப்புண்டு.வீட்டு வாசிப்பு சீராக அமையும்போதே சரியான அர்த்தப்பாடு உறுதியாகும்.
ஒரு பிள்ளை அல்லது எதிர்கால மனிதன், வாசிப்பதனால் எதிர்பாராமலேயே ஏற்படும் அடைவுகள் ஒன்றிரண்டல்ல.பல்வேறு புதிய விடயங்களைத் தெரிந்துகொள்ளல், கல்வி விருத்திக்குத் துணையாதல், நேரத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தல், பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டல், கேள்விகளும் தேடலும் ஏற்படல், மனச்சாந்தி மலர்தல், கற்பனை விருத்தி, நல்லுணர்வு பெறல், கலாசாரப் புரிந்துணர்வு, மனிதாபிமானம் , பன்முகப் பண்பாடறிதல், மனித உறவு மேம்பாடு, உளவிருத்தி, கிரகிப்புத் தன்மை, மொழித்திறன் ,தன்னம்பிக்கை வளர்தல், ஞாபகசக்கி , ஆளுமைப் பண்பு, இப்படி இன்னும் பல.வீட்டு வாசிப்புக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்போது பெருந்தொகையான அடைவுகள் கிடைக்கப் பெறுகின்றன.
வீட்டுத் தோட்டம் ,குடுப்பத்திற்கொரு கைத்தொழில் என்பன போன்று வீட்டுக்கொரு நூலகம் என்ற எண்ணக் கருவை விருத்தியாக்குவதற்காக பன்முகப்பட்ட வேலைத்திட்டம் அவசியமாகிறது.
கல்வி அமைச்சு, கலாசார அமைச்சு,நூலக அபிவிரித்தி சேவைகள் சபை, உள்ளூராட்சி சபைகள் போன்றன மேலும் திட்டமிட்டு உயிர்ப்புடன் செயற்படலாம்.இவ்வகையில் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் முனைப்புடன் இயங்கி வருகின்றன.
கிராம மட்டங்களிலே இயங்கும் சமூக நிறுவனங்கள் மிகவும் பயனுறுதியுள்ள வகையில் இயங்கக்கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளன.தத்தமது கிராமங்களுக்குத் தமது பங்களிப்பை வளங்கும் அரிய சந்தர்ப்பமாக இதனை அமைத்துக் கொள்ளலாம்.தரும நிறுவனங்களும் வழிபாட்டுத் தலங்களும்கூட இதற்கு உதவலாம்.
பெற்றார்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்றவகையில் வீட்டு நூலகங்களையும் சிறுவர் வாசிப்பு ஆர்வத்தையும் எவ்வாறு வளர்க்கலாம் என்பதற்கு சில ஆலோசனைகள் வருமாறு.
ழூ பிள்ளைகளுக்கான அன்பளிப்புக்களை நூல்களாக வழங்குதல்.
ழூ பிள்ளைகள் தமக்கிடையிலான அன்பளிப்புக்களை நூல்களாக வழங்க வழிகாட்டல்.
ழூ வாசிப்புச் சாதனங்களைப் பரவலாக்கல்.
ழூ வாசிப்புக் கென்று நேரம் ஓதுக்கல்.
ழூ வாசித்த விடயம் பற்றிக் கலந்துரையாடல்.
ழூ நூலகம் – புத்தகக் காட்சி – நூல் வெளியீடுகளுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்லல்.
ழூ வீட்டு நூலக நூல்களுக்கு தொடர் இலக்கமிட்டுப் பதிந்துவரல்.
ழூ நண்பர்களுடன் பரஸ்பரம் புத்தகப் பரிமாற்றம் செய்தல்.
ழூ வாசித்த நூலில் குறைந்தது ஒரு வசனத்தையாவது பதிந்துவரல்.
ழூ பத்திரிகை நறுக்குகளால் ஒட்டுப் புத்தகம் தயாரித்தல்.
இன்று வாசிப்பு என்பது அச்சிடப்பட்ட பத்திரிகை, சஞ்சிகை, புத்தகம் என்ற எல்லைக்குள் மட்டுப்படுத் தப்பட்டதாக இல்லை.இலத்திரனியல் சாதனங்கள், இறுவட்டு, ஈ புக்ஸ், இணையம் என்பனவும் வாசிப்பில் செல்வாக்குச்செலுத்த ஆரம்பித்துள்ளன. அவற்றைத்தவிர்ப்பது ஆரோக்கியமானதல்ல.காலத்தின் தேவையாகி விட்டது.சாதகத் தன்மையுடனும் பகுத்தறிவுடனும் அவற்றைப் பயன்படுத்த இளைய சந்ததிக்கு வழிகாட்டப்பட வேண்டும்.
நல்லதொரு வீடு பல்கலைக் கழகம், வீடே கோயில் என்றெல்லாம் சொல்வார்கள்.
அதேபோன்று நல்லதொரு வீடு நல்லதொரு நூலகமாகவும் அமைய வேண்டுமென்ற கருத்தை நிறுவி உறுதிப்படுத்துவோம்.
1,311 total views, 4 views today