ஆகாயம் இல்லா நிலவுகள்
(சர்வதேச விதவைகள் தினம் . ஜூன் 23)
ரஞ்ஜனி சுப்ரமணியம். இலங்கை
“விதவை” என்பது வடமொழிச் சொல்; தமிழ்மொழியில் “கைம்பெண்” என்று எழுதினால் ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம். தமிழ் வஞ்சிக்காது வாழ வைக்கும்”
இது கலைஞர் கருணாநிதியின் கூற்று. ஆனால் சொல்லில் வைக்கப்படும் பொட்டு விதவைகளின் வாழ்வை மலர வைக்குமா என்றால் இல்லை என்பதே இன்றும் பதிலாக உள்ளது.
விதவை என்னும் சொல்லைக் கேட்கும் போதெல்லாம் ஒரு பெண்மணி ஞாபகத்தில் வருவார். பால் போல வெள்ளை நிறம். மங்கலம் பொங்கும் மென்னகை பூத்த முகம். ஆனால் அந்த முகத்தில் குங்குமம் இல்லை. கண்களின் ஆழத்தில் கவலைகள் ஏதும் ஒளிந்து இருக்கின்றனவா என்று நான் கவனிப்பதுண்டு. காணாது ஒளிக்கும் கலையில் அவர் வல்லவர்.
அவரது கணவர் சிங்களப் பிரதேசத்தில் புகையிரத நிலைய அதிபராக இருந்த போது ,1958 ம் ஆண்டு இனக்கலவரத்தில் அடித்துக் கொல்லப்பட்டதாக அறிந்தேன். திருமணமாகி தனது முதலாவது குழந்தையை அப்போது கருவில் சுமந்திருந்தாராம். அவரது மனநிலையும் வாழ்வும் எவ்வாறு இருந்திருக்கும், தன் பெண்குழந்தையை ஒழுங்காக வளர்க்க எத்தனை துயரங்களைச் சுமந்திருப்பார். தன் குழந்தையின் மகிழ்ச்சிக்காக தன் கவலைகளை மறைத்திருப்பார். உணர்வுகளை உறைநிலையில் வைத்திருந்து இருப்பார் என்று எண்ணிப் பார்த்து மனம் கலங்கியதுண்டு.
அதன் பின்னரான இலங்கையின் வரலாறு உற்பத்தியில் தன்னிறைவை அடையாத போதும், அண்மைய மூன்று நான்கு தசாப்தங்களாகத் தொடர்ந்த இனவன்முறை, யுத்தம் என்பவற்றின்
மூலம் பல்லாயிரக் கணக்கான விதவைகளை வடக்கிலும் தெற்கிலும் உற்பத்தியாக்கி சாதனை படைத்துள்ளது.
2009 இறுதி யுத்தத்தின் பின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டும் 89000 தமிழ்ப் பெண்கள் விதவைகளாக இருந்தனர் என்கிறது, 2010-ம் ஆண்டின் புள்ளி விபரம். அதில் 12,000 பேர் நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள்; 8000 பேர் குறைந்தது மூன்று பிள்ளைகளை உடையவர்கள் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. (தேடலில் மாறுபட்ட தரவுகளும் கிடைக்கின்றன).
அது போலவே பெரும்பான்மை இனத்திலிருந்தும் இராணுவத்தினரின் மனைவிமார்கள் அதிகளவில் விதவைகளாகி உள்ளனர்.
உலகெங்கினும் 250 மில்லியனுக்கும் அதிகமான விதவைகள் உள்ளனர் . மொத்த விதவைகளில் மூன்றில் ஒரு பங்கினர் சீனா மற்றும் இந்தியாவில் வாழ்கின்றனர்; ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் வாழும் விதவைகள் அதிக வன்முறைகளையும் பாரபட்சங்களையும் சந்திக்கின்றனர்; விதவைகளில் பத்தில் ஒருவர் அதீத வறுமையில் வாடுகின்றனர் எனவும் அறியக் கிடைக்கிறது.
எனினும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் விதவைகள் பொருளாதார மற்றும் கலாசார நிலைமைகள் சார்ந்து தனிமை அடைவதில்லை.
வளர்முக நாடுகளில் வாழும் விதவைகள் வறுமை, உடல்உள ரீதியான வன்முறை, சமுக இழிவு பாரபட்சம் மற்றும் மருத்துவரீதியான பல பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.
இவர்களுடைய நிலைமைக்கு முக்கிய காரணங்களாக வேலையின்மை, கல்வி மற்றும் பொருளாதார பலமின்மை ; ஓய்வூதியம் , அரச உதவிகள் மற்றும் முன்னேற்றத் திட்டங்களை அடையும் வழி அறியாமை , பரம்பரைச் சொத்துகளை உரிமை கோரும் சட்டங்களை அறிந்திராமை மற்றும் உறவினரின் பாராமுகம் என்பன முக்கிய காரணங்கள் ஆகின்றன.
வேலை அல்லது நிவாரண உதவிகள் நாடிச் செல்கையில் பாலியல் லஞ்சம் கோரும் மனச்சாட்சியைத் தொலைத்த மனிதர்களும் உண்டு.
பலர் மத்தியகிழக்கு நாடுகளிலோ அன்றி தாயகத்திலோ குறைந்த வேதனத்தில் அதிக உழைப்பினைக் கொடுக்கும் நிலையில் அல்லல் படுகின்றனர். கணவனை இழந்த மனவலியுடன் ஏனைய பிரச்சனைகளின் தாக்கம் ஆகியவற்றால் பலர் உடல் உளநலப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். வேறு வழியின்றி விபச்சாரம், தற்கொலை எனும் முடிவுகளை நாடுவோரும் உள்ளனர். கல்வியில் பின்தங்கும் இவர்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
விதவைகளின் நிலை பற்றிய சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஆண்டு தோறும் ஜூன் மாதம் 23 ம் திகதி ‘சர்வதேச விதவைகள்’ தினம் அனுசரிக்கப் படுகிறது. லூம்பா அறக்கட்டளை நிறுவுனரின் முன்மொழிவுக்கு அமைய 2011ம் ஆண்டில் இருந்து ஐ.நா.சபையினால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப் படுகின்றது.
உலகெங்கும் விதவைகள் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்கள் , பாதுகாப்பின்மை, பாகுபாடு,களங்கம், தீங்கு விளைவிக்கும் பாரம்பரிய நடைமுறைகள் ஆகிய அவல நிலைகளை நினைவு கூரும் விதமாகவும், அவர்களுக்கான முன்னேற்றம் அடிப்படை உரிமைகள் ஏனைய நலன்களை முன்னுரைக்கும் முகமாகவும் இத்தினம் முக்கியத்துவம் பெறுகிறது.
இலங்கையின் வடகிழக்கைப் பொறுத்தவரை இயற்கை மரணங்கள், தற்கொலை, விபத்துகள் என்பன தவிர்த்து இறுதி யுத்தத்தினாலும், வலிந்து காணாமல் ஆக்கப் பட்டோராலும் பல்லாயிரம் பேர் விதவைகள் ஆக்கப் பட்டார்கள். பெண்களை குடும்பத் தலைவிகளாகக் கொண்ட இவர்களது தலையாய பிரச்சனையாக இனம் காணப்படுவது வாழ்வாதாரத்துக்கான வழிகள் இல்லை என்பதே. கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் பெண்களுக்கான வேலையின்மை அதிகமாக இருக்கும் மாவட்டங்களாகவும் இனம் காணப்பட்டு உள்ளன.
சமூக விமர்சனங்களுக்கு அஞ்சியும், தமது குழந்தைகளை எண்ணியும், காணாமல் ஆக்கப்பட்ட கணவரை நினைத்தும்
மறுமணம் என்பதும் பலருக்கு இயலாததாகவே உள்ளது.
கணவரை இழந்த, குழந்தைகள் இல்லாத பெண்கள் மறுமணம் புரியும் போது தெளிவான முடிவினை எடுக்க முடியும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மனைவிமாரின் உணர்வுநிலை மிகவும் சிக்கலானது.
தான் கணவரை இழந்தவளா இல்லையா ? ; நீண்டகாலக் காத்திருப்பின் பின்னும் மறுமணம் புரியலாமா வேண்டாமா ?;
அழகாக ஆடைஅணிந்தால் சமூகம் தூற்றுமா? எத்தனை காலம் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது ? நிலைமாறி களங்கம் சுமப்பேனா? எனும் பலவித மனப் போராட்டங்களும் , காணாமல் ஆக்கப்பட்ட கணவரைத் தேடும் புறப் போராட்டங்களுமாக அவர்களது நிலையை எண்ணிப் பார்க்கவே மனது கனக்கிறது.
இவ்வாறானவர்கள் மறுமணம் புரிந்தாலும் காணாமல் போன முன்னாள் கணவரின் நினைவுகளை முற்றாக மறக்க முடியாத பரிதவிப்பு ஆயுள் முழுமையும் தொடரும். மறுமணம் புரியும் ஆண்கள் தம் முன்னாள் மனைவியை நினைவு கூர்வதையும் போற்றுவதையும் சகஜமாக ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் மறுமணம் புரியும் பெண்கள் தமது உணர்வுகளை அவ்வாறு வெளிக்காட்ட ஆண்களின் மேலாதிக்க மனநிலை அனுமதிப்பதில்லை. பாலினம் சார்ந்த சம்பிரதாய சமனின்மை இங்கும் தொடர்கிறது .
அரச உதவித் திட்டங்களும் ,வங்கிக் கடன்களும், புலம்பெயர் தமிழர்களின் உதவிகளும் நிலைமையை சீராக்கப் போதுமானவையாக இல்லை. காணாமல் ஆக்கப்பட்ட கணவரின் மரணச்சான்றிதழ் இல்லாத பட்சத்தில் கிடைக்கும் உதவித் தொகை, மரணம் உறுதிப்படுத்தப் பட்டவர்களுக்கு கிடைப்பதை விட
மிகவும் சிறியது . கால்நடை வளர்ப்பு, கைவினைப் பொருட்கள், மண்பாண்டம், பனம்பொருள் சிறுதொழில்கள், அம்மாச்சி உணவகம் ஆகியவை விதவைகளுக்கான சில தொழில் வாய்ப்புகளை உருவாக்குகின்றன. கைத்தொழில் முயற்சிகளில் போதிய அறிவின்மை, அதன் மூலமான வருமானப் பெருக்கத்தைப் பெறுவதில் தடையாக உள்ளது.
இவை தவிர தனிமனிதராக நாம் என்ன செய்யலாம் ? வறுமையில் வாழும் ஒரு விதவைக்கு அல்லது உறவுக்கு பொருளாதார உதவி; அவரது குழந்தையின் கல்வியை மேம்படுத்த வழிவகை; விதவைகளுக்கான பொதுநிதிகளுக்கு பங்களிப்பு , நிதி சேகரிப்பில் உதவுதல்; அரச மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் பயனுள்ள கருத்தரங்குகளுக்கு விதவைகளை வழிகாட்டல்; அதுவும் இயலாதவர்கள் தம்மால் இயன்ற மன ஆறுதலையும் பக்க பலத்தையும் அவர்களுக்கு அளித்தல் என்பன சிறுதீர்வாக அமையும்.
சென்ற நூற்றாண்டை விட இன்று விதவைகள் நம் சமூகத்தினரால் ஏற்றுக் கொள்ளப் பட்டவர்களாகவே வாழ்கின்றனர். விதவைகளின் துயரைப் புரிந்து கொள்வோம். சமூகத்தில் சம உரிமை உள்ளவர்களாக வாழ வைப்போம்.
1,065 total views, 3 views today