நெஞ்சமெலாம் நிறைந்த கொழும்பு கம்பன் கழகத்து நிருத்த உற்சவம் 2023.

கலைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி பிரணவன்.
(இயக்குநர் தேஜஸ்வராலயா கலைக்கூடம்.கொழும்பு.)

நல வாழ்வில் மன மேம்பாட்டை வழங்கி உள ஆரோக்கியத்தை நிலைத்திருக்கச் செய்யும் ஆற்றல் கலைகளுக்கு இருந்தாலும் பரதமானது அதிலுமொரு படி மேலாக நடனமாடுபவரை மட்டுமன்றி பார்ப்பவர்களுக்கும் பலமடங்கான மனவளச் சக்தியை வழங்கும். “அபிநய தர்ப்பணத்தில்” “நாட்டியக்கலையானது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பயனையும் வழங்குகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

இத்தகு சிறப்புகள் பொதிந்ததாய் பரதத்தின் மூலம் நல வாழ்விற்கான மேம்பாட்டை வழங்கும் பெருங் கைங்கரியத்தை கொழும்பு கம்பன் கழகத்தார் கடந்த 04-05-2023 தொடக்கம் 07-05-2023 வரையான நான்கு நாட்களும் நன்கு வழங்கியிருந்தனர்” நிருத்தோற்சவம் ” என்ற நல்லதாம் நாமந்தனில் ஆடல் ஆகுதி ஒன்றை கலை வேகத் தமிழ்த்தாகம் விடாயடங்க குடித்த திருப்தி போல் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஆற்றுகையாய் வளர்த்தனர் கொழும்பு கம்பன் கழகத்தார். அகில இலங்கை கம்பன் கழக நிறுவுனரான போற்றுதற்குரிய கம்பவாரதி இ.ஜெயராஜ் ஐயா அவர்களின் அர்ப்பணிப்பான கைங்கரியங்களின் பேறாக இந்த நிருத்தோற்சவம் நடைபெற்றமையே அதன் சிறப்பிற்கு அணி செய்யும் காரணமாகும்

04-05-2023 ம் தினம் நிருத்தோற்சவ முதலாம் நாள் நிகழ்ச்சி ஆரம்பமானது. நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய அறங்காவலரும் தொழிலதிபருமான திரு. மு.ஸ்ரீ காந்தா அவர்கள் தம்பதி சொரூபமாக மங்கல விளக்கேற்றி வைக்க செல்வி. அம்ரிதா கேதீஸ்வரன் கடவுள் வாழ்த்திசைக்க கொழும்புக் கம்பன் கழகத்தின் பெருந்தலைவர் மாண்புமிகு ஜெ. விஸ்வநாதன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள்.

நிருத்தோற்சவத்தில் கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய மாணவர்களின் “சகுந்தலை” நாட்டிய நாடகம் இனிதே ஆற்றுகை செய்யப்பட்டது. பரத கலா வித்தகர் ஸ்ரீ மதி ஷாலினி வாகீஸ்வரன் அவர்களின் நட்டுவாங்கத்தில் மிகவும் தத்துரூபமாக சகுந்தலையின் பிறப்பினை பாடசாலை மாணவியர் அழகாக சித்தரித்திருந்தனர். நாட்டிய நாடகத்திற்கான இசையைகுரல் வழியாக திருமதி நிவாஷினி சக்திவேல், திருமதி தாரணி ராஜ்குமார் வழங்கியிருந்தனர். அதனைத்தொடர்ந்து நாட்டியக்கலைமணி ஸ்ரீமதி தயானந்தி விமலச்சந்திரன் அவர்களின் நர்த்தன நிர்ணயா நாட்டியப்பள்ளி மாணவர்கள் வழங்கிய “ஆடல் ஆகுதி” இடம்பெற்றது. இதற்கான இசைவடிவத்தை திரு அ. ஆரூரன் அவர்கள் வழங்கியிருந்தார்.

05-05-2023 இரண்டாம் நாள் நிருத்தோற்சவத்தில் கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் போஷகர் திருமதி யமுனா கணேசலிங்கம் அவர்கள் மங்கல விளக்கேற்றி வைக்க திருமதி நிவாஷினி சக்திவேல் கடவுள் வாழ்த்திசைக்க சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி பு.ஆதவன் அவர்கள் தலைமையுரை ஆற்றி ஆரம்பித்து வைத்தார்கள். நர்த்தன கலைமணி ஸ்ரீ மதி லக்ஷ்மி ஸ்ரீகரன் அவர்களின் நெறியாள்கையில் நுண்கலைக்கோயில் மாணவர்களின் பரத ஆற்றுகை “சமகம்” மிகச்சிறப்பாக அறுவடை செய்யப்பட்டது பின்னணிக் குரலாக திரு. வை. கணேசலிங்கம் அவர்கள் இசைத்திருந்தார்கள் சமகத்தில் திழைத்த பார்வையாளர்கள் பரதச்சுவையிலே தோய்ந்திருந்தனர் என்பதை சபையிலே பார்க்க முடிந்தது. தொடர்ந்து நாட்டியபூரண கலாநிதி ஸ்ரீமதி நிர்மலா ஜோன் அவர்களின் நிர்மலாஞ்சலி பரத நாட்டிய கலையக மாணவர்கள் “சப்த சுவர பரதம்” ஆடல்தனை அரங்கேற்றினர்.ஆடலசைவுகளிற்கு திரு அ. ஆரூரன் அவர்கள் குரலிசை வழங்கினார்.

06-05-2023 மூன்றாம் நாள் நிருத்தோற்சவத்திலே சட்டத்தரணி திருமதி ஜெயந்தி வினோதன் அவர்கள் மங்கல விளக்கேற்றி வைக்க செல்வி தில்ஷா கிருஷ்ணகுமார் கடவுள் வாழ்த்திசைக்க மேல் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு சசி மகேந்திரன் அவர்கள் தலைமையுரைதனை அழகு செய்து ஆரம்பித்து வைத்தனர்
“ஞானம் ஓர் வடிவாகி” என்ற பரத ஆற்றுகையை கலாசூரி திவ்யா சுஜேன் அவர்களின் அபிநயஷேத்ரா நடனப்பள்ளி மாணவர்கள் ஆடலை அழகு செய்தனர். அசைவுகளுக்கான இசையை ஒலியாக ஓங்கச் செய்தார் செல்வி வைஷாலி யோகராஜன்.

தொடர்ந்து கலைமாணி ஸ்ரீ மதி சிவானந்தி ஹரிதர்சன் அவர்களது நிர்த்தனா நடனப்பள்ளி மாணவர்கள் வழங்கிய “நர்த்தன சங்கமம் ” ஆடலானது அழகாக மரபுகளை தமதாக்கிய வடிவ நிலையிலேயே மேடை யேற்றப்பட்டது இவ் எழிலான நடனத்திற்கு குரலிசையை திரு அ.ஆரூரன் வழங்கியிருந்தார்

07-05-2023 நிருதோற்சவத்தின் நிறைவு நாள் நீர் கொழும்பு இந்து இளைஞர் மன்ற தலைவர் திரு. பொ. ஜெயராமன் தம்பதியினரும் மேற்படி மன்றத்தின் பொருளாளர் திரு. மு. ஏகாம்பரம் தம்பதியினரும் இனிதே பெரிதுவிக்குமாறு மங்கல விளக்கேற்றி சிறப்பித்தனர். இன்னமுத கடவுள் வாழ்த்தை செல்வி. வைஷாலி யோகராஜன் இசைத்திருந்தார். தலைமையுரைதனை பேராசிரியர் அங்குரன் தத்தா – இயக்குனர், சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் இந்திய உயர் ஸ்தானிகராலயம் கொழும்பு அவர்கள் ஆரம்பம் செய்து வைத்தார்.நிருதோற்சவ காலங்களிலே நடன ஆற்றுகைகளை வழங்கிச் சிறப்பித்த ஆசிரியர்களை கௌரவித்து பாராட்டுக்களை வழங்கியிருந்தது கொழும்பு கம்பன் கழகம்

நிறைவு நாளான நிருத்த உற்சவத்திலே தண்டமிழ் தாய் தவயோக மெய்ஞ்ஞான திருவரங்காக நான்குநாட்களும் தோய்ந்த கலைச்சுகானுபவத்திலே அரங்கு மூழ்கிக்கிடந்தது. சங்கத்தமிழர் சால்பிலே காதலும் போரும் எங்ஙனமான பாடுபொருளாக இருந்ததுவோ அதுவாகவும் அதற்குமப்பால் பக்திச்சுவைததும்ப மீனாட்சி திருக்கல்யாணம் வரை நிறைவுதந்து நிறைத்தெம் மனங்களெல்லாம் திருப்தியை வழங்கியது. கம்பன்கழக ஆடல்அரங்கெனலாம்.””தமிழ் இனியது”” என்ற நாட்டியநாடகத்தினை நாட்டியக்கலைமணி ஸ்ரீமதி பவானி குகப்பிரியா அவர்களுடைய தியாகராஜர் கலைக்கோயில் மாணவர்கள் வழங்கியிருந்தார்கள்.
நிறைவாக “:மீனாட்சி திருக்கல்யாண ” நாட்டியநாடகத்தினை
நாட்டியகலாமந்திர் கலாசூரி ஆச்சார்யா கலாசாகர ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரன் அவர்களுடைய நெறியாள்கையில் அற்புதமாக படைத்திருந்தார். அணிசெய் கலைஞர்களின் பங்கு அபரிமிதமானது. அற்புதமான இசையுடனும் அழகொளிரும் ஆடலுடனும் தத்ரூப நாடகவெளிப்பாட்டிலும் ஏன் முத்தமிழிலும் தோய நிருத்தோற்சவம் இனிதே நடந்தேறியது. பலரின் உழைப்புகள் இங்கே ஒருகுடைக்கீழ் கம்பதேசத்து கலையரங்காகியது. அதை ஆக்கிய கொழும்பு கம்பன் கழக நிறுவுனர் போற்றற்கினிய கம்பவாரிதி ஐயா அவர்களை வாழ்த்தி இதுபோல இன்னும் பலநூறு நிருத்தோற்சவங்களை ஆற்ற வேண்டிப்பணிகிறோம்

1,172 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *