விழி சொல்லும் கதைகளை விட மனம் சொல்லும் கதைகள் உணர்வு பூர்வமாக இருக்கும்.
-கௌசி.யேர்மனி
ஏறாவூரிலே நான் வாழந்த அந்தத் தெரு. நடக்கப் பழக்க மில்லாமல் ஓடியே சென்ற சாலை ஓரங்கள்
காரணமில்லாமல் மனம் சிலரைத் தேடும். முன்னமே ஒட்டி உறவாடி விட்டுச் சென்றவர்களின் நினைவுகள் மனதுக்குள் தவியாய் தவித்து ஊசலாடும். இது உறவுக்கு மட்டுமா? இல்லை ஊருக்கும் தான் அது பொருந்தும். விழி சொல்லும் கதைகளை விட மனம் சொல்லும் கதைகள் உணர்வு பூர்வமாக இருக்கும். புலம்பெயர்ந்து பிறப்பில் இருந்தவர்களைத் தொலைத்து யாரோ ஊர் பேர் தெரியாத மனிதர்கள் எல்லாம் எம்மோடு ஒட்டி உறவாடுகின்ற போது ஏதோ கனவுகள் போல பழைய ஊர் ஞாபகங்கள் நிழலாடிக் கொண்டேயிருக்கும். இது வெளியில் தெரியாது மனதுக்குள் இருக்கும் ஒரு ஏக்கம். இது அனைவருக்கும் தான் இருக்கின்றது. இந்த மனநோய் இல்லாத புலம்பெயர்ந்த மக்கள் யாருமேயில்லை. கடமைக்காகவும் இருப்பை வலுப்படுத்தவும் ஓடிஓடி உழைத்து ஓய்ந்த பின் தவிப்புக்கு மருந்து தேடப் பிறந்தகம் நோக்கிப் பறக்கின்றவர்கள் அங்கு எதிர்பார்ப்பதெல்லாம் அன்பு, பாசம், அமைதி, அந்தப் பிள்ளைப் பிராயத்து நினைவுகளை மட்டுN. வானத்தில் பறந்து சென்று மகிழ்ச்சி கண்டாலும் திரும்பவும் வானத்தில் பறந்து திரும்பவும் வாழும் நாட்டில் கால் பதிக்கவே வேண்டும்.
என்னுடைய என்னையே நானறியேன் என்னும் நாவலிலே முக்கிய கதாபாத்திரம் பேசுவதை இங்கு பதிவு செய்கின்றேன்
அந்தக் காற்றைச் சுவாசிப்பேன். என் தாய் மணலில் புரண்டு எழுவேன், அந்தச் சூரியனின் கதிர்களை என் வெற்று உடம்பினால் உடைப்பேன். கால்களால் இலங்கை மண்ணைத் தட்டித்தட்டி ஒத்தடம் கொடுப்பேன், உறவினர் மனதுக்குள் நுழைந்து திரும்புவேன், தியேட்டருக்குள் சென்று சினிமா பார்த்து மூட்டைப்பூச்சிகளுக்கு இரத்ததானம் வழங்குவேன், பள்ளிவாசலிலே நாரிசாசோறு உண்பேன், பொடிமெனிக்கா வீட்டில் பாற்சோறும் கட்டச்சம்பலும் உண்பேன், விகாரையிலே தாமரைப்பூ வைத்து வணங்குவேன், கோயில் குளத்திலே மூழ்கி எழுவேன், சின்னத்தம்பிப் படத்து பிரபுபோல் ஏரியிலே குளிப்பேன், அநாதைப்பிள்ளைகளைப் பார்த்து நம்பிக்கை விதைத்து வருவேன், மாமரநிழலிலே ஆறுதலாய் அமர்ந்திருந்து கறுத்தக் கொழும்பான் மாம்பழம் கடித்துத் தின்பேன், பழஞ்சோற்றுக் கஞ்சியிலே ஊறுகாய் சேர்த்தெடுத்து வாசற்கட்டிலே அமர்ந்து காற்று வாங்கி கஞ்சி குடிப்பேன். இப்படி எத்தனையோ ஆசைகள் எனக்குள்ளே இருக்கின்றன. என்று அவர் சொல்வதாக எழுதியிருக்கிறேன்.
ஏறாவூரிலே நான் வாழந்த அந்தத் தெரு. நடக்கப் பழக்க மில்லாமல் ஓடியே சென்ற சாலை ஓரங்கள்
சதங்களை எண்ணிக் கொடுத்து முந்திரியம் பருப்புக்கள் வாங்கிய போது முந்திரிப் பால் சுட்டுக் கறுத்த விரல்களால் பெட்டியைத் திறந்து உம்மா எண்ணிக் கையில் புதைத்த பருப்பை வாயில் போட்டபடி மீண்டும் ஓடிய நினைவுகள். என்னுடைய ஐயாவின் காலைப்பிடித்தால் காலுக்கு மேல் ஏறி நடந்தால் 50 சதம் கிடைக்கும். அந்தச் சதங்களை முன் கடையில் போத்தலுக்குள் இருக்கும் முட்டாசு வாங்கி சுவைத்த காலங்கள் ஊர் நினைவுகளை மீட்டுகின்றன. நாம் கடந்து போன காலங்களில் மறந்து போனவை அதிகம். சிட்டுக்குருவிகளாக பறந்த அந்த நாட்கள் நினைவுக்குள்ளே நிழலாடுகின்றன
பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரன் பாடிய பாடலொன்றில்
கோணேஸ்வரர் கோயில் கொண்ட திருமலையூரில்
இராவணேசன் ஞாபகமும் வருகுது அங்கே
கன்னியா வெந்நீர் ஊற்றும் கலங்கரை ஒளி விளங்கும்
இயற்கை துறைமுகந்தானே என்று பாட அந்தக் கன்னியா வெந்நீர் ஊற்றிலே உள்ள வெப்பத்தின் தன்மையைச் சின்னத்தம்பிப் புலவர் விளக்கும் போது
காதலனைப் பிரிந்தவளின் மனம்போல ஒன்று
கவிபாடிப் பரிசுபெறான் மனம்போல ஒன்று
தீதுபழி கேட்டவன்தன் மனம்போல ஒன்று
செய்தபிழைக் கழுங்குமவன் மனம்போல ஒன்று
நீதிபெற வேழைதுயர் மனம்போல ஒன்று
நிறைபழித்த கற்புடையாள் மனம்போல ஒன்று
காதுமழுக் காறுடையான் மனம்போல ஒன்று
கனலேறு மெழுநீர்கள் உண்டுகன்னி யாயில்.
வெந்நீர் ஸ்நானம் ஆயிற்று.
என்று பாடியுள்ளார். மேலும் சோமசுந்தரப்புலவர் இலங்கை வரலாற்றிலே
“மஞ்சளாவிய மாடங்கள் தோறும்
மயில்கள்போல் மடவார்கணஞ் சூழும்
அஞ்ச ரோருரக பள்ளியின் மீமிசை
அன்ன வன்னக் குழாம் விளையாடும்
துஞ்சு மேதி சுறாக்களை சீறச்
சுறாக்களோடிப் பலாக்கனி கீறி
இஞ்சி வேலியின் மஞ்சளிற் போய் விழும்
ஈழ மண்டல நாடெங்கள் நாடே”
என்று இலங்கை வளத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார். இவ்வாறு எண்ண எண்ண இனிக்கின்ற சொல்லச் சொல்லச் சுவைக்கின்ற இலங்கையின் சிறப்பினை சொல்வதற்கு இக்கட்டுரை போதாது.
இலங்கை பூலோகம் படத்திலே ஒரு புள்ளி. ஆனாலும் அது சந்தித்த நிகழ்வுகளோ பெரும் சாகரம். ரிஷி மூலம் நதி மூலம் பார்க்கக் கூடாது. இதன் குற்றவாளி சுற்றவாளி ஆராய்ந்து கணக்கில் வைக்க எமக்கு இருக்கும் காலங்களோ மிகக் குறைவு. வாழ்ந்து கழித்த நாட்களிலே மனதுக்குள் ஊஞ்சல் ஆடும் நினைவுகளை மனத்துக்குள் சிறை வைத்து, மனக்கண் கொண்டு நோக்குகின்றோம். மகிழ்ந்து இன்பம் அனுபவிப்போம்.
சொற்களை அடுக்கி அடுக்கிக் கட்டி மேய்க்கும் எழுத்தாளனின் கனவுகளும் நினைவுகளும் சரித்திரமாகும்.
1,354 total views, 2 views today