வடுக்களும் வலிகளும்.

  • சர்மிலா வினோதினி-இலங்கை

மறந்துவிடச் சொல்கிறீர்கள்
மன்னித்து சேர்ந்து புரிந்து வாழச் சொல்கிறீர்கள்
மன்னித்துக் கொள்ளுங்கள் முடிந்தால்
மறக்கச் சொல்லித் தாருங்கள்

எவற்றை நான் மறப்பது?
பாழாகிப்போன என் பள்ளிப் பிள்ளைப் பருவத்தையா?
பெட்டகத்தில் பூட்டிவைத்த என் இளமையின்
கனவுகளையா? இழந்துபோன உறவுகளையா?
இல்லையெனில் உருக்குலைந்த என்னூரையா?
இவற்றில் எவற்றை என்னால் மறக்கமுடியும்?

மறந்து போவதற்கும் மன்னித்து வாழ்வதற்கும்
நானொன்றும் மகாத்மாவுமல்ல
பரமாத்மாவுமல்ல
அழித்துவிட்டு வாழ்வதற்கு அவை
என் நினைவுகளும் அல்ல
சிதைத்துவிட்டு கட்டியெழுப்ப அழிந்துபோன
எம்மவர் வீடுகளுமல்ல
காலத்தின் தழும்புகளால் மாறாத
காயமான ஆறாத வடுக்களவை
மன்னித்துக் கொள்ளுங்கள் உங்களால் முடிந்தால்
மறக்கச் சொல்லித்தாருங்கள்

அத்தனையும் இழந்தபின்பும்
இன்றும் எங்கள் சிந்தனைகள் பெரிது
மனதின் செயல்வடிவம் பெரிது
எண்ணற்ற கனவுகளும் வானுயரும் கற்பனையும்
ஒய்யாரமாய் வந்தமர்ந்து ஓலமிட்டு உதைத்தபடி
கனவுகளின் அடியிருப்பை தட்டிக்காட்டி மறைகயிலே
நிசப்த வெளியில் நாம் நிறைவேறா நினைவுகளுடன்

யார் தந்த பாவம் இது?
யார் தந்த சாபமிது?
கரைகடந்த கனவுகளும் கலைந்துபோன கற்பனையும்
கடந்துபோன நாட்களுமாய்
இளையோர் எம்கனவை
இருட்டடிப்புச் செய்தது யார்?

சின்னஞ்சிறு மழலைகளாய் சிறகடித்துப் பறக்கவில்லை
சிறகு விரித்த சிட்டுக்களாய் சாரல்மழை குளிக்கவில்லை
சிந்தையிலே பயம்கொண்டு பொந்துகளில் ஒழிந்திருந்தோம்
வெந்தமணல் புழுதியிலே வெம்பியழுது புரண்டெழுந்தோம்

நட்சத்திர நிலவொளியில் நாங்கள் நிமிர்ந்து வானை பார்த்ததில்லை
ஒன்றிரண்டு சொல்லி அவற்றை எண்ணியதும் நினைவிலில்லை
தூரத்தில் கேட்டசத்தம் காதுகளில் தூது சொல்ல
புதரடிப் புகலிடத்தில் புகுந்துநாம் தஞ்சம் கொண்டோம்

நிமிர்ந்து பார்க்க சக்தியற்று, வடித்த கண்ணீர் துடைக்க மறந்து
மரணபய மனத்தோடு தரையோடு தரையாக புரண்டெழுந்த பொழுதுவரை
மாறாத வடுக்களாய் மனதைவிட்டு மறையவில்லை

மன்னித்துக் கொள்ளுங்கள்
உங்களால் முடிந்தால் மறக்கச் சொல்லித் தாருங்கள்
மறந்துவாழ முயல்கிறேன் சேர்ந்து புரிந்துவாழ முயல்கிறேன்.

1,181 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *