பூந்திலட்டும், புத்தகங்களும்.
- மாதவி
தீபாவளி மலிவு விற்பனைக் காலத்தில் ஒரு குறித்த விலைகளுக்கு மேல் கொள்வனவு செய்பவர்களுக்கு தமிழ் நாட்டில் போத்தீஸ் புடவைக்கடையில் லட்டு பெட்டிகளை இலவசமாக வழங்குவார்கள்.
வாடிக்கையாளர்கள் வரிசைகட்டி நின்று அவர்கள் வாங்கிய சேலைகளின் பெறுமதிக்கு ஏற்ப பெட்டி, பெட்டியாக லட்டுகளை அடுக்கிச் செல்வார்கள்.
பூந்திலட்டு யாருக்குத்தான் விருப்பமில்லை. எனவே வரிசை கட்டி நின்றுதான் ஆகவேண்டும். இன்றைய வாழ்வில் உணவினை மட்டும்தான் கைத்தொலைபேசியில் நக்கி நக்கி உண்ண முடியாது. மற்ற எதுவானாலும், பார்க்கலாம், வாசிக்கலாம். புத்தகக் கடைக்கு கூட இப்போது பலர் செல்வது குறைவு, ‘புத்தகத்தை எங்கு வைப்பது, அங்கு அறை எல்லாம் தாத்தா பாட்டிமார் அள்ளிக்கட்டி வச்சிருக்கிறார்கள். அவர்கள் கட்டையில் போனால்த்தான் அந்த புத்தக கட்டுகளை விட்டு வீசலாம்’. இந்த மன நிலையில் பலர் உலகில் உலாவும் போது போத்தீஸில் ஒரு அதிசயம்!.
கடந்த ஆனிமாதம் அந்த கடைக்கு நான் சென்ற போது முன்பு தீபாவளி தள்ளுபடிக்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள் லட்டுக்கு வரிசைகட்டி நின்ற இடத்தில் இப்போதும் வரிசை நீண்டு இருக்க, ‘என்ன் ஆனி மாதத்திலும் லட்டு கொடுக்கிறார்களா..’ என எட்டிப்பார்த்தேன்.
அங்கே ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கொள்வனவு செய்தவர்களது பணத்திற்கு ஏற்ப புத்தகங்களை அன்பளிப்பு செய்துகொண்டு இருந்தார்கள். 1000 ரூபாய் வரை ஒரு தொகுதி புத்தகங்கள், 2000 கு மேல், 5000 கு மேல், 15000 கு மேல் இப்படி பல தொகுதி புத்தகங்கள் தரவரிசையில் இருந்தன. 15000 ரூபாய்க்கு மேல் வாங்கியவர் 1000 ரூபாய்க்குள் வாங்கியவர் தொகுதியிலும் புத்தகங்களை அவரவர் விருப்புக்கேற்ப பெற்றுச் சென்றனர்.
நான் அங்குள்ள முகாமையாளர்களை அணுகி “பார்க்க சந்தோஷமாக உள்ளது; லட்டுக்கு எப்படி வரிசைகட்டி நின்று வேண்டினார்களோ, அதேபோல் புத்தகத்திற்கும் நிற்கிறார்கள், பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது; தமிழ் நாட்டில் வாசிப்புத் தன்மை குறையவில்லை” என்றேன்.
அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் “லட்டு; அதில் ஒரு லட்டும் வீண்போயிராது, உடனே பெட்டி உடைக்கப்பட்டு முடிந்திருக்கும். ஆனால் புத்தகம் எடுப்பவர்கள் எல்லோரும் அதனை படிக்க மாட்டார்கள், எங்கோ ஒரு சிலர் படிப்பார்கள். அந்த ஒரு சிலரால் தமிழ் வாழ்ந்தாலும் மகிழ்ச்சியே” என்றார்.
மேலும் அவர் தொடர்ந்தார் “அது மட்டுமல்ல் பங்குனி மாதம் பனங்கொட்டை, துளசிச்செடி கன்று, மாங்கன்று என பலவற்றை கொடுத்தோம். பனைமரம் வளர்க்கவும் நாம்தான் முதன்முதலில் கொடுத்தோம்” என்றார். நான் அவரை இடைநிறுத்தி, “நீங்கள் பிறப்பதற்கு முன்பே இலங்கையில் யாழ்ப்பாணத்தில், மில்க்வைற் சவர்க்கார தொழிற்சாலை அதிபர் அமரர் கனகராசா அவர்கள் இவ்வாறு கொடுத்து உள்ளார். மில்க்வைற் சோப் மேலுறைகளைக் கொடுத்து தென்னம்பிள்ளை, மாங்கன்று, பனங்கொட்டை, இப்படி பலவற்றை மக்கள் பெற்றுச் சென்றனர். என்ன இன்று போல் பெரிதாக மக்களிடம் சேர்க்க ஊடகமோ, யுரியூப் சனல்களோ அன்று இருக்கவில்லை. அன்றும் சமூக சேவைகள் சிறப்பாகவே நம் தாய்மண்ணில் நடந்தது” என்றேன்.
“புத்தகங்கள் வழங்குவது மிகவும் மகிழ்ச்சி! புகைப்படம் எடுக்கலாமா?” என்றேன். “தாராளமாக எடுங்கள், உங்கள் புத்தகங்களையும் எடுத்துச் செல்லுங்கள்!”என்றார். எடுத்தேன், மகிழ்ந்தேன். விமானத்தில் வரும் போது சிலவற்றை படித்தேன். இல்லையெனில் அங்கு புத்தகம் எடுத்தவர்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான் என்றாகி இருப்பேன்.
நீங்கள் நம்புகின்றீர்களா? பொன்னியின் செல்வன் படம் வந்திராவிட்டால்.., கல்கியின் பொன்னியின் செல்வனை தேடித் தேடி படித்திருப்பீர்களா?, சரி படிக்காவிட்டாலும் ஒரளவு என்றாலும் அந்தக் கதை தெரிந்துதான் இருக்குமா?. புத்தகங்களை கையில் வைத்து வாசிக்கும் காலம் அருகி வருவதனால் புத்தகம் வாங்குபவர்கள் மற்றும் வாசிப்பவர்களைக் கண்டால் ஆச்சரியம் எழுகின்றது.
977 total views, 2 views today