மாவிட்டபுரத்தான் வந்திட்டானோ? – கதை

  • சுருதி.அவுஸ்திரேலியா
    பாலன் வீட்டிற்கு முன்பாகவுள்ள வீதியில், கடந்த இரண்டு நாட்களாக ஒரு கார் நத்தை போல ஊர்ந்து திரிந்தது. சில வேளைகளில் அவன் வீட்டிற்கு நேர் எதிராக, வீதியின் எதிர்ப்புறத்தில் அந்தக் கார் முகாமிட்டிருந்தது.
    பாலன் வேலை முடித்து வீடு வந்து காரைத் தரிப்பிடத்தில் நிற்பாட்டும்போது, எதிர்வீட்டுக்காரன் ஓடி வந்தான்.
    அந்தக் காருக்குள்ளையிருந்து ஒருத்தன் நெடுகலும் உங்கட வீட்டைப் பாத்தபடி இருக்கிறதைக் கண்டனான்” எதிரே நின்ற அந்தக் காரைச் சுற்றிக்காட்டிபடியே பாலனிடம் அவன் சொன்னான்.

இருவரும் அந்தக் கார் நிற்குமிடம் நோக்கிச் சென்றார்கள். காரிற்குள் ஒருவரும் இருக்கவில்லை. அயல்வீட்டுக்காரன் காரைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டான். பின் தன் இரண்டு கைகளையும் கார்க்கண்ணாடி மீது வட்டமாகக் குவித்து உள்ளே உற்று நோக்கினான். இங்கே பார்… கமரா ஒண்டு உன்ர வீட்டை நோக்கியபடி வைக்கப்பட்டிருக்கு… உது பொலிஸ் வாகனம் போலத்தான் கிடக்கு…” தன் சந்தேகத்தைச் சொன்னான் அவன்.
பாலன் பயந்து போய்விட்டான்.
வீட்டுக்குள்ளை மனிசியும் பிறந்த குழந்தையும் இருக்கினம். ஏதாவதெண்டா வீட்டின்ரை கதவைத் தட்டி மனிசியை விசாரிச்சிருக்கலாம் தானே! உதென்ன விசர்த்தனமான வேலை…” பாலன் விசனப்பட்டான். ஏதாவது தேவைப்பட்டா வருவன் தானே!” என்றான் அயல்வீட்டுக்காரன்.

மறுநாள் காலை பாலன் வேலைக்குப் புறப்படும்போதும் அந்தக் கார் நின்றிருந்தது. காலை பதினொரு மணியளவில் பாலனின் மனைவி, பாலனுக்கு ரெலிபோன் செய்தாள். பொலிஸ் ஸ்ரேஷனிலை வந்து சந்திக்கச் சொல்லி ஒரு துண்டு தபால்பெட்டிக்குள்ளை கிடக்கப்பா.”

ஆத்துப்பறந்து அரைநாள் லீவு எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் பாலன். மனைவி கைக்குழந்தையையும் தூக்கிக் கொண்டு தானும் பொலிஷ் ஸ்ரேஷன் வருவேன் என அடம்பிடித்தாள். குழந்தையோடை வந்தா பொலிஸ் ஒண்டும் செய்யான்களப்பா…”

அவுஸ்திரேலியாவிலை உந்த விளையாட்டு ஒண்டும் சரிவராது! என்ன ஏதெண்டு தெரியாமல் ஏன் பயப்படுறீர்? நான் மாத்திரம் போட்டு வாறன்.”
பொலிஸ் ஸ்ரேஷனுக்குப் புறப்பட்டான் பாலன்.
செல்லம்மா எண்டது யார்?” பொலிஸ் ஸ்ரேஷனில் நின்றவன் கேட்டான்.
அவ என்னுடைய அம்மா…”
அம்மா ஏதேனும் பிஸ்னஸ் செய்யிறவாவோ?”
அம்மா கோயிலே கதியெண்டு இருக்கிறவா. பூ மாத்திரம் கோயிலுக்குக் கொண்டுபோய் குடுப்பா…”
உம்முடைய பெயருக்கு ஒரு பார்சல் அவா அனுப்பியிருக்கிறா. எங்களுக்கு சந்தேகமாக் கிடக்கு.” உள்ளே சென்ற அவன் கையிற்கு கிளவ்ஸ் அணிந்து ஒரு பொதியை எடுத்து வந்தான்.
இதைப்பற்றி ஏதாவது தெரியுமா?”
இல்லை சேர்…”

இதின்ரை பெறுமதி என்ன எண்டு தெரியுமா? இண்டையில் விலைக்கு இதை வித்தா, அவுஸ்திரேலியாவிலை பத்து வீடுகள் வாங்கலாம். அறுநூற்றி இருபது கிராம் இருக்கு…” பாலன் அதிர்ச்சியடைந்தான். அந்தப் பார்சலைத் தொடுவதற்கு முயற்சித்தான். தொடாதே!” என்று கத்தினான் பொலிஸ்காரன்.

உதுக்குள்ளை திருநீறுதான் இருக்க வேணும். ஹோலி ஆஷ்…”
அதை நாங்கள் தான் முடிவு செய்யவேணும். சாம்பிள் எடுத்து பகுப்பாய்வு செய்ய அனுப்பியிருக்கிறோம். றிசல்ற் வந்தவுடனை கூப்பிடுவோம். நீர் சொல்லுறமாதிரி ஹோலி ஆஷா இருந்தா குப்பைத்தொட்டிக்கு, பவுடரா இருந்தா எங்களுக்கு.”
பொலிஸ் ஸ்ரேஷனில் இருந்து வீட்டுக்கு வந்த பாலன் அம்மாவிற்கு தொலைபேசி எடுத்தான். மறுமுனையில்,
அட என்ரை குஞ்சு… மாவிட்டபுரத்தான் வந்திட்டானோ? நிறையவா அனுப்பியிருக்கிறன். குழந்தை வளர வளர வைச்சு வைச்சுப் பூசு” என்றார் அம்மா.

1,400 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *