எங்கடை ஆச்சி
இப்பத்தே பெடிபெட்டையள் கனபேருக்கு ஈச்சம் பழம்!
இப்படி ஒரு பழங்கள் இருக்கெண்ட சங்கதியே தெரியாது.
இப்பதான் கிட்டத்திலை ஈச்சம் பழக் காலம் முடிஞ்சது .ஈச்சம் பழக் காலம் எண்டதுந்தான் எங்கட கடக்கரை வழியை கடக்கரை பனந்தோட்டம் வழியை உந்த ஈச்ச மரப் பத்தைகள் நிறைய நிண்டது ஞாபகம் வருகுது . உப்பிடி உந்த ஈச்ச மரம் உப்புக்காத்து வீசிற களர் நிலத்திலைதான் நல்லாமதாளிச்சு வளரும் எண்டதை “களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன” (பெரும் 130) பெரும்பாணாற்றுப் படை சொல்லுது எண்டு ஆச்சி சொல்லுறவ . உந்த ஈச்சம் காயள் பங்குனி சித்திரை மாசத்திலை காச்சு நல்ல சிவப்பு சிவப்பு மணியள் மாதிரி பொளிச்சுப் பொளிச்சு எண்டு வெய்யிலிலை மினுங்கும் . உப்பிடி உந்தக் காயள் சிவப்புச் சிவப்பா இருக்கிறதை அகநானூறு “செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின்” (அகம் 21ஃ20 ) எண்டு சொல்லுது எண்டு அப்பு சொல்லுறவர் . அதுமாதிரி உந்த ஈச்சம் காயள் குலை குலையா இருக்கிறதைப் பாக்க நல்ல வடிவா இருக்கும் . உப்பிடி உந்த ஈச்சங்காயள் குலை குலையா இருக்கிறதை “கற்றை ஈந்தின் முற்று குலை அன்ன” (நற் 174ஃ1) எண்டு நற்றிணை சொல்லுது எண்டுவா ஆச்சி .
நாங்கள் முந்தி சின்னப் பெடியளா இருக்கேக்கை உந்த ஈச்சம் குலையளை வெட்டியந்து உப்புத்தண்ணி தெளிச்சு வைக்கல் பட்டறையுக்கை வைப்பம் இல்லாட்டில் சாக்குக்கை மூடிக் கட்டி வைப்பம் . ரெண்டு மூண்டு நாளிலை நல்ல கன்னங்கரேல் எண்ட பழங்கள் வந்திருக்கும் . உப்பிடி உந்த ஈச்சம் பழங்கள் கறுப்பா நல்ல சதைப்பிடிப்பா இருக்கிறதை “கரும் களி ஈந்தின் வெண் புற களரி” ( நற் 126ஃ2 ) எண்டு நற்றிணை சொல்லுது எண்டுவார் அப்பு . எங்கட ஆக்கள் சங்க காலத்திலை உந்த ஈச்சம் பழத்தை திண்டிருக்கிறாங்கள் எண்ட விஷயம் உதிலை இருந்து விளங்குது எண்டுவா ஆச்சி.
முந்தி நாங்கள் எங்கிகினேக்கையும் கொஞ்சம் காயள் முத்தட்டும் எண்டு பாத்து வைச்சுப்போட்டு வருவம் . பேந்து ரெண்டு மூண்டு நாட்கள் கழிச்சுப் போனம் எண்டால் ஆரும் அதுகளை வெட்டிக்கொண்டு போயிருப்பாங்கள். உதால நாங்கள் சில வேளை ஆவேசத்திலை ஆரும் வந்த வெட்டினாலும் எண்டு போட்டு கொஞ்சம் முத்தாத குலையளை வெட்டியந்து வைக்கல் பட்டறையுக்கை வைப்பம். பேந்து ரெண்டு மூண்டு நாட்கள் கழிச்சுப் பாத்தால் அதுகள் பழுக்காம சுருங்கி காஞ்சுபோன ஆட்டுப்புளுக்கை மாதிரி வந்திருக்கும் . பேந்தென்ன அள்ளிக்கொண்டே அடிவளவுக்கை கொட்ட வேண்டியதுதான் .முந்தி ஈச்சம் பழம் விக்கிறதை சிலர் தொழிலாச் செய்தவை . முக்கியமா பெண்டுகள்தான் செய்தவை அவை பள்ளிக்க வாசல்களிலை இல்லாட்டில் கோயில் வாசல்களிலை இல்லாட்டில் சாந்தி வழியை இருந்து விப்பினம். அப்பெல்லாம் ஒரு சுண்டு ஈச்சம்பழம் அம்பெசாம்.
சித்திரை வரியப்பிறப்பு அண்டைக்குத்தான் எங்கட வாரிவளவுப் பிள்ளையார்கோயில் தேர்த்திருவிழா நடக்கும் . முத்லநாள் இரவு தேரைச் சோடிக்கேக்கை நாங்கள் நொங்கு, இளநி, வாழை, கமுகு, கரும்பு, உதுகளோடை உந்த ஈச்சம் பழக்குலையளையும் தேரில கட்டிச் சோடிப்பம் . உந்த ஈச்சம் பழத்திலை பொட்டாசியம், கால்சியம், பொஸ்பரஸ் இருக்கிறதாலை எலும்புத் தேய்மானத்துக்கு நல்லம் .அதோடை கண் பார்வைக்கு நல்லம் . கண் புரை வந்தால் ஈச்சம் பழம் திண்டால டக்கெண்டு மாறும். பிள்ளைத்தாச்சியள் திண்டினம் எண்டால் வயித்திலை உள்ள குழந்தையளுக்கு பலவிதத்திலும் நல்லம் .அதோட நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு தாம்பத்திய உறவில ஆர்வம் இல்லாத ஆம்பிளையளுக்கு , மலட்டு தன்மை உள்ள ஆம்பிளையளுக்கு நல்லம் எண்டு எங்கட பரியாரி துரைப்பெடி சொல்லுறவர் எண்டு அப்பு சொல்லுவார் . நான் நினைக்கிறன் எங்கடை அப்பு ஆக்கள் அந்தக்காலத்திலை உந்த ஈச்சம் பழங்களை நல்லாத் திண்ட படியாலைதான் நல்ல உசாரான ஆம்பிளையளா இருந்தவை ஆச்சிமாரும் அவையுக்கை அடங்கிக்கிடக்கிறதே தங்கடை பொழுதெண்டு இருந்தவை .
முந்தி நாங்கள் காஞ்ச ஈச்ச மர இலைகளை வெட்டித் தடியளை எடுத்து பட்டம் கட்டிறனாங்கள் . சில இடங்களிலை கூடை எல்லாம் பின்னிறவை . எங்கட சில ஆக்கள் வேலிக் கதியாலை மாடாடுகள் காந்தாமல் இருக்க எண்டு போட்டு உந்த ஈச்சம் ஓலையளை வெட்டியந்து வேலிக்கு வைச்சுக் கட்டுவினம் . உப்பிடிக் கட்டேக்கை கவனமா இருக்க வேணும் ஈச்சம் இலை நுனியிலை இருக்கிற முள்ளுக் குத்திச்சுது எண்டால் அந்த இடம் காச்சுப்போகும். சில நேரம் ஈச்சம் குலை வெட்டப் போற ஆக்களுக்கும் உந்த ஈச்சம் முள்ளுக் குத்தி கைவழியை காயள் வரும்.
இப்ப எங்கடை கனசனம் நாகரீகம் எண்ட பெயரிலை உந்த ஈச்சம் பழம் மாதிரிப் பழங்களைத் தின்னிறதை விட்டுப்போட்டு அதுகும் உந்த வெளிநாட்டுக்காசு வந்த பிறகு கண்ட கறுமம் பிடிச்ச பழங்களையும் வாங்கித் திண்டு காசையும் கரியாக்கி நோய்காவியளாகவும் வந்திட்டிதுகள் .பேந்து டாக்குத்தர்மாருக்கு கொண்டு போய் காசைக்கொட்டுங்கள். இப்பத்தே பெடிபெட்டையள் கனபேருக்கு உப்படியான பழங்கள் இருக்கெண்ட சங்கதியே தெரியாது. உண்ணாண எங்கடை பாரம்பரியப் பழங்களை தின்னிறதாலை காசு கன வழியளிலை மிச்சமாகும் எண்டதோடை வாதை வருத்தம் இல்லாமலும் சீவிக்கலாம் கண்டியளோ. எண்டபடியாலை அதுகளின்ரை உற்பத்தியளை அதுகளின்ரை பாவனையளை என்னவிதப்பட்டும் நாங்கள் ஊக்குவிக்க வேணும் கண்டியளோ.
1,033 total views, 6 views today