ட்ராகூலா கதைகள் உண்மைதானா?


ஒரு காலத்தில் நீல நிற கண்களை கண்டு மக்கள் அஞ்சினார்கள்!

பிரியா இராமநாதன்-இலங்கை

உருமேனிய மொழியில் ” ட்ராகூல் ” என்பதன் அர்த்தம் ரத்த வெறி பிடித்த சாத்தான் என்பதாம் . ஆம் .. பதினைந்தாம் நூற்றாண்டில் கிழக்கு ஐரோப்பாவில் மக்களை சித்திரவதை செய்த ஒரு கொடுங்கோல் பிரபுவுக்கு மக்கள் “ ட்ராகூலா” என பெயர் வைக்க , பின்னாளில் உலகெங்கிலும் இந்தப் பெயர் பரவி புகழ் பெற்றுவிட்டது என்பதே உண்மை . மத்தியகாலத்தில் இடைக்கால வாலாச்சியா என அழைக்கப்பட்ட (இன்றைய) ருமேனியாவில் ஆட்சியாளராக இருந்த “விளாட் டெப்ஸ் “ என்பவரே அவரது கொடுங்கோல் ஆட்சியின் காரணமாக மக்களால் “விளாட் ஐஐஐ டிராகுலா” என அழைக்கப்பட்டார் எனவும் ,விளாட் டெப்ஸின் மரணத்திற்குப் பிறகு, அவர் ஒரு காட்டேரியாக மாறியதாக மக்களிடையே ஒரு புராணக்கதை தோன்றியதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் . ஜெர்மனியில் 1828இல் உருவாக்கப்பட்ட ட்ராகூலா நாடகத்திற்கு பின் , 1897 ஆம் ஆண்டு “டிசயஅ ளவழமநச” என்பவரது கற்பனை கலந்து எழுதப்பட்ட “ட்ராகூலா” புத்தகமானது உலகப் புகழ் பெற்றதுடன் , இன்றுவரையில் அந்த புத்தகத்தின் அடிப்படையில்தான் ட்ராகூலா திரைப்படங்களே எடுக்கப்படுகின்றன .

ட்ராகூலா எவ்வாறு தோற்றமளிக்கும் என்பது எழுத்தாளர்களது கற்பனை மட்டுமேயாகும் . வெளிறிப்போன முகம் , “ஜில்” என்ற குளிர்ந்த தேகம் , நீண்ட கருப்பு அங்கி , கூர்மையான கோரை பற்கள் , கதவுகள் தாழிட்டிருந்தால்கூட சாவித் துவாரம் வழியாக அறைக்குள் புகுந்துவிடுவது போன்ற அட்டை போன்ற உடல், நீல நிற விழிகள் (இதனால்தான் ஒரு காலத்தில் நீல நிற கண்களை கண்டு மக்கள் அஞ்சினார்களாம் ) போன்றவையே ட்ராகூலாக்களின் அடையாளமாக புத்தகங்களில் எழுதப்பட்டதுடன் திரைப்படங்களும் இயக்கப்பட்டது. ஏன் மக்கள் மனதில் உண்மையிலேயே ட்ராகூலா இருப்பதாகவும் , அது இந்தமாதிரியான தோற்றத்தில்தான் இருப்பதாகவும் பதியவைக்கப்பட்டது!

பழங்காலத்திலிருந்தே இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்கள், காட்டேரிகள் பற்றிய புராணக்கதைகள் உள்ளன. அப்படிதான் டிராகுலா மற்றும் வாம்பயர் மூடநம்பிக்கை இடைக்காலத்தில் செழித்து வளர்ந்த (மூட )நம்பிக்கைகளும் ஓன்று . குறிப்பாக பிளேக் நோய் ஐரோப்பாவின் பல பாகங்களிலும் மிக வேகமாக பரவியபோது , இந்நோயின் தாக்கத்தினால் பலருக்கும் வாயில் இரத்தக்கறையுடன் கூடிய புண்கள் ஏற்பட்டது . இப் புண்ணானது டிராகுலா கடித்ததின் அறிகுறி என்கிற தவறான கருத்து பாமரர்களிடம் பரவியிருந்தது . அதுமட்டுமன்றி சூரிய ஒளியின் தாக்கத்தினால் சாதாரணமாக ஏற்பட்ட தோல் அழற்சி நோய்கூட டிராகுலா நம்பிக்கையுடன் தொடர்புபடுத்தப்பட்டது .

ஒருவர் இறந்துபோன பிறகுதான் ட்ராகூலாவாக உருவாகமுடியும் கதைகளின்படி . நாம்கூட திரைப்படங்களில் பார்த்திருப்போம் சூரிய வெளிச்சத்திற்கு மட்டும் ட்ராகூலா அஞ்சி ஒடுங்கி ஓடுவதுபோல !

ஆம் ட்ராகூலாவிற்கு சூரிய வெளிச்சம் ஆகவே ஆகாது . விடிவதற்குள் மனித இரையை தேடிப்பிடித்து கடித்து ரத்தத்தினை குடித்துவிட்டு கல்லறை பெட்டிக்குள் சென்று படுத்துக்கொள்ளும் . சரி ,செத்தும் இப்படி ட்ராகூலாவாய் வந்து நிற்கும் இந்த உடலை எப்படித்தான் அழிப்பதாம் ? முதலில் அது எந்த கல்லறைக்குள் இருக்கிறது என்பதை இடுகாட்டுக்கு சென்று தேடி கண்டுபிடித்தாகவேண்டும் . 19 நூற்றாண்டில் பாதிரியார்களின் உதவியுடன் ஒவ்வொரு கல்லறையாக தேடி கண்டுபிடிப்பார்களாம்!!!??? . கண்டுபிடித்தவுடன் உடனே தலையை வெட்டி எடுத்து கால்களுக்கு நடுவில் வைத்துவிட்டால் அது திரும்பவும் எழுந்து வராது என நம்பினார்களாம் சிலர் .

அதுசரி கல்லறையில் இருப்பது ட்ராகூலாதான் என்பதை எப்படி தெரிந்துகொள்வது ? ஆம் ட்ராகூலா என்றால் அது எலும்புக்கூடாக மாறியிராதாம். ஊசியால் குத்தினால் ரத்தம் வருமாம் . ரத்த ஓட்டத்தினை நிறுத்த அதன் இருதயத்தினை பிய்த்தெடுத்து கொதிக்கும் எண்ணையில் அல்லது நெருப்பில் போட்டு அழித்துவிடுவார்களாம். அல்லது மரத்தால் செய்யப்பட்ட பெரிய ஆணி போன்ற சிலுவையை அதன் இதயத்திற்குள் செலுத்திவிடுவதுண்டாம் . அப்படியானால் ட்ராகூலா கதைகள் உண்மைதானா என்றால் , நிச்சயமாக இல்லை . ஆனால் உலகெங்கிலும் மக்கள் ட்ராகூலாவை நம்ப விரும்பினார்கள் என்பதே யதார்த்தம் .

பல வருடங்களுக்குமுன் நியூயோர்க் நகரில் ” வாம்பயர் சோதனை ஆராச்சி மையம் ” ஓன்று நடாத்திய ஆராச்சியில் பெண்களிடையே எடுக்கப்பட்ட ஓர் விசித்திரமான கருத்துக்கணிப்பில் எழுபது சதவீதம் பெண்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் வாம்பயறுடன் குறிப்பாக ட்ராகூலாவுடன் உடலுறவு வைத்துக்கொள்ள ஆசை என்று குறிப்பிட்டிருந்தனராம் . எல்லாம் அக்காலகட்டத்தில் வெளியான அதிகப்படியான ட்ராகூலா திரைப்படங்களின் பாதிப்பே என்று அந்த ஆராச்சியின் தலைமை வைத்தியர் “ஸ்டிபன் கேப்லான்” கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

706 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *