பேரண்ட ஆற்றலின் அலையை கையாள்வது எப்படி
கரிணி – யேர்மனி
அளப்பரிய சக்தியின் அதிர்வலையோடு வெட்டவெளி எட்டு திசைகளிலும் பரந்து, விரிந்து கிடக்கிறது. மழையும் அதன் சாரலும் போல் எங்கும் எங்கெங்கும் சக்தி விழுந்தவண்ணமே இருக்கின்றது. இத்தகைய சக்தியின் சிறு வெளிப்பாடே உலகாய படைப்புகளாக விரிந்துள்ளது எனினும் அதன் பெரும் சக்திநிலை உருவமற்ற அதிர்வாக சுழன்றுகொண்டிருக்கின்றது. இத்தகைய இயற்கையின் சக்தி எப்பொழுதுமே வெறுமையை விரும்புவதில்லை. ஒரு இடம் வெற்றிடமாக இருந்தால் அதை நிரப்புவதே இயற்கை சக்தியின் செயலாக இருக்கிறது.
நேர்மறை, எதிர்மறை என்ற எல்லா நிலையும் இயற்கையில் வீரியமாகவே உள்ளன. இவ்வாறு பரந்துவிரிந்த இயற்கையின் சக்தி எங்கு, எதனில் என்ன வடிவமோ, செயலோ, பொருளோ அதனதன் தன்மைக்கேற்ப அங்கே தன்னை நிறைத்துக் கொள்கிறது. உதாரணமாக சுவரில் வரையப்பட்ட ஒரு குறியீடு, உடலில் வரைந்த ஓவியம், குறிப்பிட்ட வடிவமுள்ள பொருட்கள், நறுமணம், நறுமணமற்ற பொருட்கள், மனிதர், விலங்கு, குணவியல்பு இப்படி எதையும் மிச்சமின்றி இந்த சக்தி நிறைத்துக் கொண்டே இருக்கின்றது. பின் அதனிலிருந்து அதனதன் தன்மைக்கேற்ப சக்தியலைகளை வெளிப்படுத்தி அச்சூழலை அத்தன்மையோடு ஆளுகின்றது.
ஒவ்வொரு பொருளும், வடிவமும் இவ்வாறு சக்தியை பெற்றுக் கொண்டு ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன. ஆற்றலில் பலமானவை தன்னைவிட ஆற்றல் குறைந்தவற்றை உறுஞ்சும். பின் தன் தன்மையை வெளிப்படுத்திக் ;டிருக்கும். மனிதனும் அப்படித்தான். ஆற்றல் மிக்கவர்கள் தம் ஆற்றல் அதிர்வலைகளை பரப்பிக்கொண்டிருப்பார்கள். அமைதி மிக்கவர் அமைதியின் அதிர்வலைகளை பரப்பிக் கொண்டிருப்பார்கள். எந்த சக்தியும் ஒரு இடத்தில் தேங்கிவிட முடியாது வெளிப்பட்டுக்கொண்டிருக்கும், அவ்விடயத்தின் தன்மைகள் மீண்டும் இயற்கையிலிருந்து இந்த இடைவெளிகளை நிரப்பிக் கொண்டிருக்கும்.
ஒரு வீட்டினுள் மிக அதிகப்படியான பொருட்கள் உண்டெனில் அப்பொருட்கள் யாவுமே அதனதன் தன்மைக்கேற்ப வெளியிலிருந்து சக்திகளை உறிஞ்சிக்கொண்டு தம் தன்மைகளை வெளிவிடும். அதிக அடைசல்களில் இருளான தன்மைகள்தான் அதிகம் அவை எதிர்மறை விளைவுகளை தந்துவிடும். உதாரணமாக ஒரு மாட்டினையோ அல்லது ஒரு யானையினையோ உற்றுப் பார்த்தால் அவை படுப்பதற்கு தூய வெட்டவெளியை தெரிவு செய்யும், வெயில் பொழுதில் மட்டும் நிழலில் தங்கும். ஆனால் பூனை, நரி, வெளவால் போன்றவை இருண்ட மறைவான இடங்களைத் தேடும். அது போன்றே ஒவ்வொரு விடயங்களும் இருள்த்தன்மை, ஒளித்தன்மை என்ற வெளிப்பாடுகளோடு தொடர்புடையவை. அதிகப்படியான பொருட்களை அடைசல்களாக வீட்டில் வைத்துள்ளவர்கள் எப்போதும் சக்திநிலை குறைந்து சோர்வாக காணப்படுவார்கள். இவர்களுடைய சக்திகளை இவர்கள் வாழும் சூழல் உறிஞ்சிக்கொண்டு அங்கு தேவையற்ற அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். எனவே அவசியமான பொருட்களை மட்டுமே எம்மோடு வைத்துக் கொள்ளுதல் நலம். புதிதாக ஒன்றை வாங்கும் பொழுது தேவைக்கு அதிகமான பழையதை நீக்கிவிடுதல் நலம்.
உடலில் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம் முற்காலத்திலிருந்தே தொடர்கிறது. மனதுக்கு வீரியம் தரும் வடிவங்களையும், நேர்மறை சக்தியின் குறியீடுகளையும் வரைவார்கள். இன்றுபோல் விகார உருவங்களை அவர்கள் வரைவதில்லை. உதாரணமாக மேல்நோக்கிய முக்கோண வடிவம் மேல்நிலை சக்தி ஆன்ம விழிப்புணர்வு வாழ்வையும், கீழ்நோக்கிய முக்கோண வடிவம் உலகியல் வாழ்வையும் குறிக்கும். இத்தகைய இரு சக்தியின் சமநிலை அறுகோண நட்சத்திரத்தை குறிக்கும். பிரமிட் வடிவம் பேரண்ட ஆற்றலை குவித்து உள்ளே பிரவாகிக்க செய்யும். பேரண்ட ஆற்றல் முடிவிலி என்று அத்தகைய வடிவத்தை நீள் எட்டு வடிவத்தில் சிலர் பச்சை குத்திவிடுவதனால் அடுத்தடுத்த முடிவுகளை எடுக்க முடியாது ஒரே வட்டத்துக்குள் வாழ்வார்கள் என்றும், அவ்வாறு செய்தல் நல்லதல்ல என்று கூறுபவர்களும் உண்டு. வடிவம் பெற பார்த்திருக்கும் இயற்கையின் ஆற்றல் இத்தகைய வடிவங்களில் அதனதன் தன்மையில் வெளிப்படும். வீடுகளில் கூட இன்ன இன்ன பெருட்களை, படங்களை வீட்டில் வைக்க கூடாது வெளியே வீசிவிடுங்கள், இவற்றை வையுங்கள் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். உடமைகள் யாவும் சக்திநிலையில் தொடர்பை உண்டாக்கி பதில் கர்மவினையை ஏற்படுத்தும் என்பதனால் யோகிகள் பொருள் உலகில் எதனையும் தம்மோடு வைத்துக் கொள்வதில்லை.
மிக அதீத சக்தியை வெளிப்படுத்தும் பொருட்கள், வடிவங்களும் உண்டு. உதாரணமாக சாளக்கிராமம் எனப்படும் கல் ஒரு நத்தை படிமக்கல் ஆகும். இது உருவாக பல இலட்சம் வருடங்கள் ஆகும். இதன் உட்பகுதியில் ஒரு சுருள் வடிவம் உண்டு. இதன் வடிவம் பால்வெளியை ஒத்திருக்கும். இயல்பாகவே கருங்கல்லிற்கு ஈர்ப்பு சக்தி அதிகம். இந்த வடிவத்தோடு கூடியமையால் அதீத சக்தியை அது இயற்கையிலிருந்து உள்வாங்கி அதே சுருள் அதிர்வலையோடு வீரியமாக வெளியிடுகிறது. இதன் ஆற்றலில் சிறிதளவேனும் சங்குகளுக்கும் உண்டு. உயிருள்ள சங்குகள் உணர்வோடு நிரம்பியுள்ளதனால் அவை இறந்தபின் அந்த சுழலில் ஆற்றல் இறங்குகின்றது. எனினும் சாளக்கிராம கல்லின் அளவிற்கு அல்ல. இவ்வாறே ஈர்ப்பு சக்தி அதிகம் வாய்ந்த கற்களின் வகைகள் அதிகம் இன்று ஆற்றல் சமநிலை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. காந்தமுனை ஊசி முதற்கொண்டு இடிதாங்கி வரை எத்தனையோ சக்தி ஆற்றுகைக்கு இவ்வாறான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன
இவ்வாறு அதிக சக்தியை வெளிவிடும் பொருட்களை மிக மிக பத்திரமாக கையாளுதல் வேண்டும். ஏனெனில் அத்தகைய பொருட்கள் தம் சூழலில் பெரும் சக்தியை ஊட்டும். உதாரணமாக இவ்வாறான பொருட்களின் நெருக்கத்தில் என்ன மனநிலையோடு அதிர்வலைகளை வெளிப்படுத்துகின்றோமோ அந்த அதிர்வலைகளை இவை மேலும் வீரியமாக்கி நடைமுறைக்கு கொண்டு வந்துவிடும். பக்குவமில்லாத ஒரு மனிதர் எவ்வகையான பழியுணர்ச்சி, பகை, மனக்கவலை, விரக்தி, பயம் போன்ற எதிர்மறை அதிர்வுகளை எண்ணங்கள் மூலம் வெளிப்படுத்தக்கூடும். அவை வாழ்வில் எப்படிப்பட்ட ஆபத்துக்களை வரவழைக்கக் கூடும். எனவேதான் முற்காலத்திலிருந்தே பெரியவர்கள் வழிபாட்டு பொருட்களை கூட படிகத்தாலான லிங்கம் யோகியருக்கு, கல்லாலானது ஆலயத்துக்கு, மங்கல பொருட்கள் போன்ற மென்மையானவை வீட்டிற்கு, சாளக்கிராமம், சுயம்புருவம் போன்றவற்றை தூய்மையற்று, பக்குவமற்று கையாளக் கூடாது என்று பற்பல அறிவுரைகள் கூறினர். மனக்கவலை, குரோதம், பேராசை, பயம் போன்றவையே பெரும் துடக்காகும். இன்பதுன்ப மாயைகளை கடந்த பக்குவப்பட்டவர்களால் தாம் வாழும் சூழலில் இத்தகைய பொருட்களை கவனமாக கையாள முடியும்.
சரி இத்தகைய பொருட்களில் விழும் சக்தி கூட ஏன் இந்தளவு அறிவுநிலை கொண்ட மனிதரில் விழுவதில்லை என்ற கேள்வி எழலாம். இயற்கையின் விதிகளில் தலையாயது என்ன? இடைவெளிகளை நிரப்புவது தானே. ஜடப்பொருட்கள் திணிவு கொண்டிருந்தாலும் அவற்றில் எண்ணங்களின் இடைவெளி உண்டு. மனிதருக்கு அப்படியல்ல. எப்படி ஏற்கனவே கழிவு நீரால் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் நன்னீரை நிரப்ப முடியாதோ. அப்படி அதனுள் நிரப்பினாலும் கூட அந்த நன்னீர் முழுமையான தூய தன்மை கொண்டிருக்காதோ. அது போன்றே மனித மனங்கள் எண்ணங்களின் குப்பைகளால் நிறைந்துள்ளன. உறங்கும் போதும் எண்ணங்கள் உரையாடிக்கொண்டே இருக்கின்றன. அதாவது வேலையில்லாமல் இருக்கும் பொழுதுதான் மனம் பொருந்தாத எண்ணங்களுக்கு இடம் கொடுத்து விடுகிறது. உயர்ந்த இலட்சியத்திலேயே எப்பொழுதும் அதை வைத்திருப்பது என்பது இயலாமல் போய் விடுகிறது. ஆனால் ஒன்றன் பின் ஒன்றாக உயர்ந்த நோக்கங்களிலேயே மனதை செலுத்திக் கொண்டே இருப்போமேயானால் அதற்கு கீழ்மையான எண்ணங்களை ஏற்றுக் கொள்ள அவகாசமில்லாமல் போய் விடும். எனவே கீழான எண்ணங்களில் கலந்து கொள்ளாமல் பாராமுகமாக இருப்பதும் அல்லது அவற்றை இலட்சியம் செய்யாமல் புறக்கணித்து விடுவதும், மேலான இலட்சியத்தில் நாட்டம் கொண்டு உறுதியாக நிற்பதும் மனதை வெல்லுவதற்கு உற்ற இரு உபாயங்களாகும். வைராக்கியம் என்பது இதுதான். தீவிரமாக தீமைகளைத் தள்ளி நன்மைகளை ஏற்றுக் கொள்ளுதல்.
இப்பேரண்ட ஆற்றலில் அளப்பரிய பொக்கிசங்கள் உள்ளன. அத்தகைய பொக்கிசங்களை தேர்வு செய்து ஈர்த்து எம்மை நிரப்ப வேண்டுமெனில் இருக்கின்ற எண்ணக் கழிவுகளை நீக்கி தியானம் மூலம் வெற்றிடத்தை ஏற்படுத்தி எது வேண்டுமோ அதனை எண்ணத்தில் அதிர்வை உண்டாக்க வேண்டும். இப்பேரண்டம் தாய்மையோடு இந்த இடைவெளியை நிரப்பி அத்தகைய அதிர்வோடு எம்மை உருவாக்கும். இதுவே யோகியர் நிலை. அதே போன்றே அதி தீயவர் நிலையும் அவ்வாறே இருள் சக்திகளால் நிரப்பப்படும்.
அன்றாடம் எம் உலகின் பலதரப்பட்ட சூழலில் நடைபெறும் நிகழ்வுகளில் போதைப்பாவனை, களவு, ஒழுக்கக்கேடு போன்ற தீய ஒழுக்கங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் எம் புலன்களுக்கு அகப்படாத இடங்களில் கூட இத்தகையவர்களுக்கு தேவையான இப்பொருட்களும், வாய்ப்புகளும் இலகுவில் அமைந்துவிடும். எந்த மூலையில் இருந்தாலும் தகவல் இத்தகையவர்களை இலகுவில் சென்றடையும் காரணம் இந்த இயற்கையின் சக்தியின் அதிர்வலை இவர்கள் எண்ணங்களின் அதிர்வலைக்கமைய செயற்பட்டுக்கொண்டு அவர்களை அதன் வழியில் இழுத்தும் செல்கிறது. ஆக எண்ணங்களால் அழைப்புக் கொடுக்கும் அத்தனை விடயங்களோடும் இயல்பாகவே தொடர்பு ஏற்பட்டுவிடும். எண்ணங்களின் அதிர்வின் வீரியத்துக்கு ஏற்ப இத்தொடர்பு இணக்கமாகவோ, தாமதமாகவோ இருக்கும்.
இதனிலிருந்து உணர்வது யாதெனில் எம்மோடு இருக்கும் ஒவ்வொரு விடயத்திலும், எமக்குள் இருக்கும் இருப்பு நிலையிலும், நாம் தொடர்புபடும் அத்தனை விடயங்களிலும், எண்ணங்களிலும் அவதானமும், விழிப்புணர்வும் மிகவும் அவசியம்.
1,103 total views, 3 views today