இராவணனின் பிள்ளைப் பாசம்!

-இரா.சம்பந்தன். கனடா
மகனே கள நிலவரம் எப்படி இருக்கின்றது. ஒன்றையும் எனக்கு மறைக்காமல் சொல் என்று மகன் இந்திர சித்திடம் கேட்டான் இராவணன். அப்பா உன்னால் வீரமாக வளர்க்கப்பட்டவன் நான். என்னிடம் வலிமை மிக்க சிவனின் ஆயுதங்கள் இருக்கின்றன. அவற்றைப் பாவித்தும் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை.

உண்மை இது தான். இதுவரை செத்துப் போனவர்கள் போகட்டும். மீதமுள்ளவர்களையும் எங்களையும் நாம் காப்பாற்றிக் கொள்வோம். சீதையை விட்டுவிடு. இதை அவர்களுக்க நான் பயந்து சொல்ல வில்லை. உன்மீது எனக்கு இருக்கும் அன்பினாலே சொல்கிறேன் என்றான் இந்திரசித்து.

ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசைதான் அச்
சீதைபால் விடுதி ஆயின் அனையவர் சீற்றம் தீர்வர்
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்மேல்
காதலால் உரைத்தேன் என்றான் உலகு எலாம் கலக்கி வென்றான்.

(இராமாயணம் – யுத்த காணடம் – இந்திரசித்து வதைப்படலம்)

இராவணனுக்கு கோபம் வந்து விட்டது. போரிலே செத்துப் போனவர்கள் எல்லாம் இந்தப் போரை வென்று தருவார்கள் என்று நம்பியோ இன்னும் போராட நிற்பவர்கள் கூட வெற்றி பெற்றுத் திரும்புவார்கள் என்று நினைத்தோ நீ இருக்கின்றாய் அவர்களை வென்று வருவாய் என்று கருதியோ நான் இந்தப் போரைத் தொடங்கவில்லை. என் வீரத்தை நம்பித் தான் இந்தப் பகையை ஏற்றுக் கொண்டேன். நீ போ. நான் பார்த்துக் கொள்கின்றேன் என்றான் இராவணன்.

முன்னையோர் இறந்தார் எல்லாம் இப்பகை முடிப்பர் என்றும்,
பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்றனர் பெயர்வர் என்றும்,
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால்
என்னையே நோக்கி யான் இந்த நெடும்பகை தேடிக் கொண்டேன்.

(இராமாயணம் – யுத்த காணடம் – இந்திரசித்து வதைப்படலம்)

இல்லை அப்பா நீ வீட்டிலே இரு. நான் சண்டைக்குப் போகின்றேன் என்று சொல்லிக் களத்துக்குப் போன இந்திரசித்துக் கடுமையாகப் போராடி இறுதியில் இறந்தும் போனான். மகன் இறந்துவிட்டான் என்ற தகவல் கிடைத்ததும் துடித்துப் போனான் இராவணன்.

போர்க் களத்துக்கு வந்து தலை அறுக்கப்பட்ட மகனின் உடலைக் கட்டிப்பிடித்துக் கதறினான். மகனே உன் அப்பன் வீரனடா. இந்திரன் உலகத்தை போரிலே கைப்பற்றியவனடா. எதையெல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்று மனம் எண்ணியதோ அதையெல்லாம் தடையின்றி வீரத்தினாலே முடித்துக் கொண்ட உன் அப்பன் ஒரு பெண்ணிலே ஆசைப்பட்டு அதன் காரணமாக உன்னைப் பறிகொடுத்துவிட்டு நிற்கின்றேனே.

எனக்கு நீ செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை எல்லாம் ஏங்கி ஏங்கி உனக்கு நான் செய்ய வேண்டியதாகப் போய்விட்டதே. என்னைவிட பாக்கியசாலிகள் உலகத்தில் வேறு யார் இருக்கின்றார்கள் என்று அழுதான் இராவணன்.

சினத்தொடும் கொற்றம் முற்றி இந்திரன் செல்வம் மேவி
நினைத்தது முடித்து நின்றேன் நேரிழை ஒருத்தி நீரால்
எனக்கு நீ செய்யத் தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி
உனக்கு நான் செய்வது ஆனேன் என்னின் யார் உலகத்து உள்ளார்.

(இராமாயணம் – யுத்த காணடம் – இந்திரசித்து வதைப்படலம்)

தம்பிமார்கள் மனைவி மந்திரிகள் என்று யார் கெஞ்சியும் சீதையை சிறை விடாத இராவணன் மகன் இறந்த போது தான் முதன் முதலாக ஒரு பெண்ணுக்காக உன்னை இழந்துவிட்டேன் மகனே என்று வெளிப்படையாக சொல்லி அழுதான்.

994 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *