கூத்தப்பெரியோனின் அமுத விழா
கூத்தப் பெரியோன் பேராசிரியர் சி.மௌனகுருவைப் பாராட்டிக் கௌரவிக்கும் அமுதவிழா கடந்த மாதம் வெள்ளிக்கிழமை (09-06.2023) மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார முன்னாள் பீடாதிபதி பாலசுகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்,அமுத உரையினை நிகழ்த்திய யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த பேராசிரியர்.அ. சண்முகதாஸ் அவர்கள் தனக்கும் பேராசிரியர் மௌனகுருவுக்கும், இடையிலான தொடர்பு,மௌனகுரு எவ்வாறு கூத்துக் கலையின் நாயனாக பரிணமித்தார் என்பதை பற்றியும் ஓர் சிறப்பான உரை நிகழ்த்தினார்.அமுதம் பகிரும் உரையினை பேராசிரியர் சி.மௌனகுரு நிகழ்த்தினார்.
தாயதி பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு அமுதவிழாவில் வெளியீடு செய்யப்பட்ட “இராவணேசன் – அரங்காடியோர் அனுபவங்கள்” நூலின் முதல் பிரதியினை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப் புரவலர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி அவர்கள் பெற்றுக் கொண்டார். நூல் அறிமுகவுரையினை மகுடம் சஞ்சிகை ஆசிரியர் மகுடம் வி.மைக்கல் கொலின் அவர்கள் நிகழ்த்தினார்.
இந் நிகழ்வில்சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. க.மோகனதாசன் தயாரிப்பில் கூத்து வடிவத்தை உள்வாங்கி
சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வரவேற்பு நடனம் கூத்தப்பெரியோனின் புகழ்பாடியது மிகச் சிறப்பு.
பேராசிரியர் பாலசுகுமாரின் கிழக்கிசை பாடல்கள் மற்றும் பேராசிரியர் சி.மௌனகுருவும் மாலினி பரராஜசிங்கமும் இணைந்து வழங்கிய “அடங்க மறுத்தவள் ஆடும் கூத்து” புதிய பல தளங்களை திறந்து விட்டது.
கலாநிதி சு.சிவரெத்தினம் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவு பெற்ற நிகழ்வின் இறுதியில் அமுதவிழா நாயகன் பேராசிரியர் சி.மௌனகுரு பல்வேறு பிரமுகர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவப்படுத்தப்பட்டார்.
1,179 total views, 3 views today