கவுணாவத்தை ஆடும் காக்கைதீவு இராலும்!


-மாதவி

எத்தனை நாட்களிற்குத்தான் கற்பில் சிறந்தவள் கண்ணகியா!, மாதவியா! என்று பட்டி மன்றம் நடத்துவது.

நான் கிடாய்க்குட்டி, நான் பிறந்த நாள் முதல் எனக்கு கொண்டாட்டம் தான். மறியாடு பசியில் கத்த,எனக்கு பசி அடங்கியபின்னும், தீத்தோ தீத்தென்று உணவு தீத்துவார்கள். சொந்தப்பிள்ளைக்கோ ஒருவாய் கையில் அள்ளி தீத்திவிட வக்கில்லை, ‘உனக்கு எல்லாம் கை இருக்கு தானே எடுத்து ஊட்ட வேண்டுமோ!’ என்று பிள்ளைக்குப் பேச்சு.
கிடாய் நான் மொள மொள என வளர்ந்து, மாப்பிளை போல வந்திட்டேன். கேட்காமலே எனக்கு மறைவாக வைத்து சாராயமும் பருக்குவினம். குஷி என்றால் அப்படி ஒரு குஷி தான். எந்த மறியாட்டையும் மறிக்கவிடமாட்டினம். மாப்பிள்ளை போல வளர்ந்திட்டேன், இளமையின் சுகம் சுத்தமாய் எதுவும் இல்லை.

பண்ணையைச்சுற்றி யாழ்ப்பாணத்தில் இரால் வளர்ப்பு. இன்று என்மீதுதான் கரிசனை. எம் மூதாதையர் வாழ்ந்த இலங்கையினுடைய அரசே எம்மை கைவிட எங்கோ இருந்து வந்த சீனாக்காரன் அக்கறை கொண்டு எம் இனம் அதுதான் ‘இரால்’ தங்கள் நாட்டு சனத்தொகையை மிஞ்சும் வண்ணம் வளர வேண்டுமென எம்மை தத்தெடுத்து வளர்க்கிறான். அதனை பெரிது படுத்த அடிக்கடி எம்மைச் சந்திக்கவும் வாறான். நாம் பெருகவேண்டும் என்று எல்லாச் சுகங்களையும் தேடி ஓடித்திரியாதபடி குறுகிய இடத்தில் கிடைக்கும் வண்ணம் பார்த்துப் பார்த்து வளர்க்கிறான்.

நல்ல காலம் ஒரு கிடாவாக பிறக்கவில்லை என்ற ஒரு வித பெருமிதம் வேறு இராலுக்கு. கிடாவுக்கு மரியாதை தலைக்கு மேல் போக மாலை போட்டு அழைத்து கோவிலுக்கு கூட்டி போகினம். விடிய எதோ வேள்வியாம்!. இரவு முழுவதும் ஒரு நாளும் நெருங்க விடாத பல மறியாடுகளை கண்ணுக்கு முன்னே சுயம்வரம் போல வலம் வர வைத்தினம். சுகம் அப்பதான் முதல் முதலாக கிடைச்சுது. அந்த சுகத்துக்காக உசிரையே விடலாம் என்று மகிழ்ந்த நேரம், இருவர் தலையை இழுத்து, பிடிக்க ஓரே வெட்டில் உண்மையா உசிரே போய்டுது.

இரால் நமக்கு என்ன ஓரே குஷி என்று சுருண்டு, திரண்டு வளர்ந்து விட்டோம் என்று எண்ணும் வேளை, எமக்கு மேலே வலை ஒன்று வந்து விழுந்தது. அவ்வளவுதான், எங்கட குஷி குடும்பமே துடிக்க துடிக்க, கடலுக்கு மேல் மூச்சுவிட ஏலாது மாண்டோம். ஏலம் காக்கைதீவில் நடந்தது.

என்ன மனிசரின்ர ஆவிதான் பேசுமோ! இப்ப நாமும் ஆவி தானே. நாமும் பேசுவோம். கடலில் இருந்து வந்தாலும், தரையில் இருந்து வந்தாலும் இப்ப பேசலாம்.

கிடாய் வெட்டி ஒரு பந்தியே நடக்குது. இன்னொரு பக்கம் ஒருவர் இருந்து எம்மை பொரிச்சு வெளுத்து வாங்குகிறார். எங்கட வாசம் சுப்பராம். தமிழன் தமிழ் தமிழ் என்று சாவான். சந்தோஷம் வந்தால் ‘சுப்பர்’ என்றுதான் சொல்லுவான்.

அப்பதான் திருமண வீட்டுக்கு அவர்களுக்கு நெருங்கிய ஒரு பட்டிமன்ற நடுவர் வந்தார். இப்ப கிடா என்ன இரால் என்ன, ஆவி என்றால் இனி இருவரும் ஒன்றுதானே. என்றாலும் பழசை 8 நாட்கள் மறக்க மாட்டோமாம். யார் சொன்னது. இப்ப வந்த மனிதனின் ஆவி ஒன்று சொன்னது. உண்மைதான் ஆவி என்றால் இப்ப எல்லாம் ஆவி தானே. எனவே எமக்கும் அது பொருந்தும்.

எனவே இப்போ பட்டி மன்ற தலைவரிடம் சென்று, இரால் “என்னைக் கொன்று உண்பது பாவமா!” எனக் கேட்டது. முற்பிறப்பில கிடாயும் சும்மா விடுவதாய் இல்லை. அதுவும் “என்னைக் கொன்றதும் பாவம் அல்லவா!” எனக்கேட்டது.
பட்டிமன்ற நடுவர் சிறிது யோசித்து விட்டு, ஒரு கையில் ஒர் பிடி ஆட்டிறைச்சியை எடுத்து சோற்றோடு பிரட்டி அடித்துவிட்டு, மறு வாய்க்கு இரால் பொரியலை கொஞ்சம் எடுத்து புரட்டி கடித்துவிட்டு அந்த சுவையுடன் தீர்ப்பு சொன்னார்.

“இராலை கொன்றதுதான் பாவம்”
என்றார். ஆடு கோபத்தோடு “இது என்ன தீர்ப்பு!” என்றது. “ஒரு ஆடு உயிரைக் கொடுத்ததில் நாலு பந்தியில் நாற்பது பேர் சாப்பிடுகிறார்கள்.
40 குட்டி இரால்கள் நீ எல்லாம் உசிரை கொடுத்தும் ஒருத்தன் வயிறுதான் நிறையுது. ஒரு ஆடு சாகலாம், பல பேர் உண்ணுவினம். அதனால் இரால்தான் பாவம், பல இரால்கள் சாகவேண்டும் ஒரு ஆள் உண்பதற்கு.
என் தீர்ப்புக்கு இதுவே காரணம்” என்றார்.
“யாரடா உப்படி தீர்ப்பு சொன்ன பட்டிமன்ற நடுவர்?”
என ஆட்டின் ஆவி ஆக்கிரோஷமாய் கத்த, பக்கத்தில இப்பதான் வந்த புது ஆவி சொன்னது, “அவர் பட்டிமன்ற நடுவர் மட்டும் இல்லை, அவன் என்ர சிறந்த மாணவன். எக்கனமிக்ஸில் அவன் மாநிலத்தில தங்கப்பதக்கம் எடுத்தவன்” என்றது.
ஆவியாய் வந்தாலும் நம்மட குரோதங்கள் கொஞ்சம் ஆற நாட்கள் போகுமாக்கும். “எட்டு நாள், எட்டு நாள்’”பக்கத்தில் நின்ற ஆவி போட்டுக் கொடுத்தது.
தீர்ப்பைக் கேட்ட பக்கத்தில் நின்ற ஒரு ஆவி தனக்குள் “ஒரு உயிர் பெரிய உடம்பு என்றால் பாவமில்லை அப்படி என்றால் நான் பாவமில்லை” என்றபடி முணு முணுத்துக்கொண்டு சென்றது. அது இன்னும் எட்டு நாட்களுக்கு தன்னை யானை என்று நினைவு வைத்துக்கொள்ளும்.

1,029 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *