எப்போதும் “ஊடகம்” பொது மக்களின் கைகளுக்குச் சென்றுவிடக்கூடாது!
விக்கி.விக்னேஷ் இலங்கை.
மத துறவிகளுக்கும் தனியுரிமை உண்டு என்று சொல்லி அவர்களது பாலியல் சேட்டையை ஆமோதிக்கும் வகையில் புரட்சி செய்வதை எல்லாம் எவ்விதமான மன நிலையாகக் கருதுவதோ தெரியவில்லை. அனைத்து மனிதர்களுக்கும் தனியுரிமை உண்டு.
மத குருமாராக இருந்தாலும் அவர்கள் துறவிகள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் (இந்துவோ பௌத்தமோ என்னவோ) அவர்கள் பாலியல் சேட்டைகளையும் தவிர்க்கத்தான் வேண்டும்.அதிலும் நாட்டம் செல்கிறது என்றால் துறவு நிலையைத் துறக்க வேண்டும். துறைவிகளின் இந்த இரட்டை வேடம் இந்து பௌத்த மதங்களில் மட்டுமில்லை. எல்லா மதங்களின் பெயரிலும் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.
அவுஸ்திரேலிய கத்தோலிக்க திருச்சபையில் இடம்பெற்ற விவகாரம் ஒரு உதாரணம்…
இப்படியானவர்களைப் பிடித்துக் கொடுப்பது பிழையில்லை.ஆனால் குற்றவாளியாகவே இருந்தாலும், அவர்களுக்கும் உரிமைகள் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.அவர்கள் முறையாக நடத்தப்பட வேண்டும். பிடித்துக் கொடுத்து ஆதாரங்களை வசப்படுத்திக் கொள்வதோடு நின்றிருக்க வேண்டும்.பிடித்துக் கொடுத்தவரைக்கும் காணொளியாக வெளியிட்டிருக்கலாம்.
மீத அந்தரங்கத்தையும் பகிரங்கப்படுத்தியதும், அந்தப் பெண்களை இழிவுபடுத்தி நிர்வாணப்படுத்திப் படம் பிடிப்பதெல்லாம் அத்துமீறல். ஒருவேளை அந்தப்பெண்கள் அச்சுறுத்தப்பட்டு அங்கு வரவழைக்கப்பட்டவர்களாக இருந்தால்? இந்த வெளிப் படுத்தலுக்குப் பின்னர் அவர்களுக்கு எப்படி நியாயம் வழங்க முடியும்?
எந்தவொரு பெண்ணுக்கும் அந்த துறவியை மயக்கி உடலுறவு கொள்ள வேண்டும் என்ற தேவை இருக்கும் என நான் கருதவில்லை.
இங்குதான் ஒரு விடயம் பறைசாற்றப்படுகிறது. எப்போதும் “ஊடகம்” பொது மக்களின் கைகளுக்குச் சென்றுவிடக்கூடாது என்பதுதான் அது. பொதுமக்கள் உணர்வுகளோடு ஒன்றித்து வாழ்பவர்கள். வெளியிடும் போது எதனைத் தவிர்க்க வேண்டும், அது எந்தளவுக்கு இன்னொருவர் உரிமையைப் பாதிக்கிறது போன்ற எதனையும் அந்த நிகழ் களத்தில் இருக்கும் யாருக்கும் புரிவதில்லை.
ஆனால் ஊடகங்கள் நியாயமாக, தர்மமாக நடந்துகொள்ளும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்திருந்தால் அவர்கள் ஏன் இந்த பணிகளை அவர்கள் கைகளில் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்? இது ஊடக கட்டுப்பாடு அல்ல, ஊடக ஒழுக்கம். எனவேதான் சமூக ஊடகங்கள் ஒருபக்கம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகப் பார்க்கப்பட்டாலும், இன்னொரு பக்கம் மாபெரும் ஆபத்து என்றும் சொல்லப்படுகிறது. அது ஒரு வரைமுறைக்குள் கொண்டு செல்லப்பட வேண்டுமா இல்லையா என்பதில் எனக்கும் இன்னும் தெளிவில்லை. ஆனால் சமூக ஊடகத்தை ஒழுக்கத்தோடு கையாளும் இயலுமை, தெளிவு எல்லோரிடமும் இல்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
742 total views, 3 views today