ஆடம்பரத் திருமணங்கள்

பிரியா இராமநாதன் இலங்கை.

ஒருகாலகட்டம்வரையில் ஆடம்பரம் என்பது ஒரு சமூக குற்றமாகவே கருதப்பட்டது. ஆனால் இன்றோ, ஆடம்பரம் யார் மனதையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. தினம், தினம் பல ஆடம்பரத் திருமணங்களை சமூகம் பார்த்துப்பார்த்து, அவை இயல்பான ஒன்றாகிவிட்டது. இதனால்தானோ என்னவோ, இன்று திருமணத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் பலரது (குறிப்பாக மணமகளாக மாறவிருக்கும் பெண்களுக்கு) எண்ணமும் நாமும் ஆடம்பரமாக திருமணம் செய்துகொள்ளவேண்டும் எனும் ஆசை அதன் பின்விளைவுகளை அறியாமலேயே ஏற்பட்டு விடுகின்றது .

திருமண நாளை ஒரு மறக்க முடியாத ஆடம்பரக் கொண்டாட்டமாக மாற்றுவதற்கு, மண்டபம், பிரம்மாண்ட விருந்து, மலைக்க வைக்கும் மேடை அலங்காரம், விலைகூடிய அழைப்பிதழ்கள், உடைகள், நகைகள், கேளிக்கை நிகழ்வுகள் என எதையும் விட்டு வைப்பதில்லை. போதாக்குறைக்கு சம்பந்தமேயில்லாமல் அண்மைக்காலமாக நம்முடைய பாரம்பரிய திருமணங்களுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் வடநாட்டு ஆடை அலங்காரங்கள் உற்பட, சங்கீர், மெகந்தி என பலவகையான மேலதிக கொண்டாட்டங்கள் என்பவற்றையும் குறிப்பிட்டேயாகவேண்டும். இந்த ஒரு நாள் கொண்டாட்டத்திற்கு செய்யும் செலவில் ஒரு சொந்த வீட்டையே வாங்கிவிடமுடியும்!

ஆடம்பர திருமண மோகமானது, நிறைய நடுத்தர குடும்பங்களை மீளா கடனில் தள்ளி,வாழ்க்கையை சுமையாக மாற்றியுள்ளது.வாழ்வில் ஒருமுறை நடக்கும் திருமணம் பலரின் வாழ்வில் பெரும் கடன் சுமையைக் கொண்டு வரும் ஒன்றாக இருக்கிறது என்பது மறுக்கமுடியாத யதார்த்தமாக உள்ளது. ஊர் கூடி,உறவுகள் கூடி மகிழும் கல்யாணம் உறவுகளையும்,நட்பு வட்டாரத்தையும் பலப்படுத்துவதற்கு பதிலாக ஊரின் முன் பணபலத்தை நிரூபிக்கும் விதமாக இருக்கின்றன. திருமணங்கள் உறவுகளின் ஒற்றுமை அடையாளமாக இருந்த காலமெல்லாம் கடந்து வீண் செலவுகளும்,ஆடம்பரமும் காண்பிக்கும் சமூக அந்தஸ்திற்கான அடையாளமாக திசை திருப்பி விட்டன. யானையைப் பார்த்து பூனை போட்டி போட்ட கதையாக பணக்கார சமூகம் செய்யும் விரயம் போல நடுத்தர மக்களும் கல்யாணச் செலவுகள் செய்யும் போது கல்யாணக் கடன்கள் அவர்களை காணாமல் போக வைக்கின்றன.

திருமண செலவுகளைக் கேட்டால் மயக்கமே வரும் அளவிற்கு இருக்கிறது. திருமண மண்டபத்திற்கான நாளொன்றிற்கான வாடகை இன்று பல இலட்சங்களை தாண்டியுள்ளது . அதிலும் நற்சத்திர விடுதிகள் என்றால் சொல்லவே வேண்டாம். மண்டபங்களின் வாடகை, சாப்பாட்டுச் செலவிற்கு நிகராக அதிகரித்து வருகின்றன.

அதேபோல திருமண அழைப்பிதழ்கள் கல்யாண அழைப்பிதழாக இருப்பதற்கு பதில் பணத்தின் பலத்தை திருமண அழைப்பிதழ்கள்களில் காட்டி வருகின்றனர். ஒரு பத்திரிகையின் விலை ரூ 10 என்றாலும் ரூ. 1000 என்றாலும் கல்யாணத்திற்கு வர வேண்டும் என நினைப்பவர்கள் வரத் தான் போகிறார்கள். இதில் எதற்கு வீண் விரயம்? ஒரு நாள் சில மணி நேரங்கள் கட்டிக்கொள்ளும் கல்யாண பட்டுப் புடவைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து அதை மீண்டும் கட்டிக்கொள்ள முடியாமல் பத்திரமாக வீட்டு பீரோவில் தூங்க வைப்பதால் நம் பணமும் தூங்க வைக்கப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். சேலைகள் மட்டுமல்ல ஆண்கள் அணியும் ஆடம்பர ஆடைகளும் அன்று ஒரு நாள் அணிந்த மாதிரி போட்டோவில்தான் பார்க்க முடியுமே தவிர இதர நாட்களில் அணிய முடியாத நிலையில் இருக்கின்றன. எனவே உடைகள் லட்சணமாக இருந்தால் போதும். பல லட்சத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

நம் விருந்தில் உறவினர்களும் ஊரும் வியக்க வேண்டும் என வகைவகையான உணவுகள் மூலம் சுமார் 15மூ உணவு உற்பத்தி, திருமணம் போன்ற விழாக்களில் வீணாகக் கொட்டப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்பெல்லாம் தோழிகளும்,உறவுகளில் உள்ள பெண்களும் தான் மேக்கப் செய்வார்கள்.இன்றோ திருமணங்களுக்கு மேக்கப் ஸ்பெஷலிஸ்ட்களுக்கு கட்டணமாக சில ஆயிரம் தொடங்கி சில லட்சங்கள் வரை வழங்கப்படுகிறது. அதிலும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே பேஷியல் உற்பட அனைத்திற்குமான ஒத்திகைகள் ஆரம்பிக்கப்பட்டு பணம் வாரியிறைக்கபட ஆரம்பித்துவிடும். இது தவிர கல்யாணத்திற்கு வரும் பெண்கள் யார் விரும்பினாலும் அவர்களுக்கு மெகந்தி வைத்துவிட ஒரு மேக்கப் குழுவே களத்தில் இறக்கப்படுகிறது. இதில் pre shooting என்கிற அளப்பரையும் உள்ளடங்கும்.

கடந்த சில ஆண்டுகளில் திருமணங்கள் என்பது மிகப் பெரிய சந்தையாக உருவெடுத்து, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். திருமணங்களுக்கான மேட்ரிமோனியல் இணையதளங்கள் தொடங்கி, மேக்-அப், புகைப்படங்கள் மற்றும் வீடியோ, கேட்டரிங் சேவைகள், மலர் அலங்காரங்கள், விளக்குகள், நகைகள், ஆடைகள் வாங்குவது, இசை நிகழ்ச்சி நடத்துபவர்கள் என திருமண சந்தை 40-50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலானது என ஆய்வுகள் கூறுகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் குறித்து முடிவும், திட்டமிடலையும் செய்து வந்தது மனமக்களின் குடும்ப உறுப்பினர்கள்.ஆனால் இப்போது ஒரு திருமண நிகழ்வை முழுமையாக திட்டமிடுவது என்பது மிகப்பெரிய தொழில். திருமண மண்டபம் புக் செய்வதில் தொடங்கி, எந்த மாதிரியான பூக்கள், மண்டபத்திற்குள் எப்படி நுழைய வேண்டும், புகைப்படக் கலைஞர்களை புக் செய்வது, தீம் வெட்டிங்க்ஸ், திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஜூஸ் கொடுப்பது, சுத்தம் செய்ய பணியாளர்களை அமர்த்துவது. திருமண ஆல்பம் வரை அனைத்தையும் ஒருங்கிணைப்பதுதான் வெட்டிங் பிளானர்களின் வேலை. எதையும் திட்டமிட்டு முடிக்கும் அளவிற்கு முன்பைப்போல யாருக்கும் நேரமோ, உறவினர் பலமோ இல்லாததால் இன்று அனேகரது தேர்வு இந்த வெட்டிங் பிளானர்ஸ்தான் என்றாலும் மிகையில்லை.

உறவுகள்,ஊர் பெருமைக்கு ஆடம்பரம் செய்து திருமணம் நடத்தி கடனில் வாழ்வதைக் காட்டிலும் நம் தகுதிக்கு ஏற்றது போல நம் நிம்மதியைப் பாதிக்காத வகையில் எளிமையாகத் திருமணம் நடத்துவதே புத்திசாலித்தனம். கடன் மரண தணடனையை விட கொடுமையானது. யார் மூலம் கடன் என பின்னாளில் சண்டை போடுவதைக் காட்டிலும் கடன் ஏற்படாமல் சிக்கனமாக வாழ்வது நிரந்தர நிம்மதியைத் தரும்.

957 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *