தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே!
கவிஞர் நா.முத்துக்குமார் நினைவலைகள் !
சேவியர் – தமிழ்நாடு
எனது முதல் கவிதைத் தொகுதிக்கு முன்னுரை வேண்டும் என முடிவெடுத்த போது என் மனதிற்குள் வந்தவை இரண்டே இரண்டு பெயர்கள் ஒன்று கவிப்பேரரசு வைரமுத்து, இன்னொன்று நா.முத்துகுமார். இன்றும் நான் திரையுலகின் ஒப்புமையற்ற தனித்துவக் கவிஞர்கள் எனக் கருதுவது இவர்கள் இருவரையும் தான். வைரமுத்துவை அணுகுவது சற்று சிரமமாக இருந்ததால், நான் நா.மு அவர்களை அணுகினேன். நடந்தது 2002ம் ஆண்டு !
தன்னுடைய ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு கோடம்பாக்கத்தில் ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு டீக்கடைக்கு வந்தார். டீ குடித்துக் கொண்டே பேசினோம். கையில் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டே அவர் கவிதைகளைப் புரட்டிக் கொண்டிருந்தார். வாட்சப்களோ, இணையமோ இல்லாத அன்றைக்கு கவிதைகளையெல்லாம் கொத்தாக பிரிண்டவுட் எடுத்து அவரிடம் கொடுத்திருந்தேன். கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்த அவரின் முக பாவனைகளை நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றார். சில நாட்களிலேயே அழகான ஒரு முன்னுரையை அனுப்பியிருந்தார். ‘சேவியர் கவிதைகளில் சங்க இலக்கியத்துக்கு ஒத்த விவரணைகளைக் காண முடிகிறது. படித்துக் கொண்டே வருகையில் பல இடங்கள், அடடா !! என வியக்க வைக்கின்றன’ என கவிதைகளை மனம் திறந்து பாராட்டியிருந்தார். எனது நூலுக்கு, ‘ஒரு மழைத்துளி நனைகிறது’ என பெயரிட்டிருந்தேன். அவர் அதை ‘ஒரு மழையிரவும், ஓராயிரம் ஈசல்களும்’ என மாற்றச் சொன்னார். மாற்றினேன். !
அதன்பின் எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. அவருடைய பாடல்களுக்கெல்லாம் என்னுடைய விமர்சனங்களை அனுப்புவேன். அன்றைக்கு புகழின் உச்சிக்கு அவர் நுழையாத காலம். எனது விமர்சனங்களுக்கெல்லாம் அவர் பதில் சொல்வார். நெகடிவ் ஆகப் பேசியிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வார்.
“எனது பாடல்கள் எல்லாவற்றிலும் நீங்கள் மூன்று நான்கு ஹைக்கூக்களை எடுக்க முடியும்” என அடிக்கடி சொல்வார். அது உண்மை தான் என அவரது ஒவ்வொரு பாடல்களை ரசிக்கும்போதும் நான் நினைப்பேன். நான் திரைப்படப் பாடல் கேசட்களை அதிகமாய் வாங்குவதில்லை. அப்படி வாங்கினால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கும். எழுதியவர் வைரமுத்து, அல்லது நா.முத்துகுமார் என்று இருந்தால் மட்டுமே வாங்குவேன் ! இசையமைப்பாளரையோ, நடிகரையோ சார்ந்து பாடல்கள் கேட்கும் வழக்கம் அன்று தொட்டு இன்று வரை இல்லை.
எப்போது நேரில் சந்தித்தாலும் மகிழ்வுடன் உரையாடுவார். அவர் விடைபெறுவதற்கும் சில ஆண்டுகளுக்கு முன் சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்தேன். ‘சேவியர் நல்லா இருக்கீங்களா, பெரிய பெரிய கவிதைத் தொகுப்பு எல்லாம் போட்டிருக்கீங்க.. பாத்தேன்.. வாழ்த்துகள்’ என்றார். அதன்பின் அவரைச் சந்திக்க காலம் வாய்ப்பு தரவில்லை. அவர் சட்டென விடைபெறுவார் என எதிர்பார்க்கவே இல்லை. தமிழ்த் திரையுலகமும், இலக்கிய உலகமும் ஒரு மாபெரும் கலைஞனை இழந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.
அதன்பின் எந்த ஒரு திரைப் பாடலாசிரியரும் என்னை வியக்க வைத்ததில்லை. பலரோடு எனக்கு நட்பு உண்டு. ஆனாலும் என்னை வியக்க வைத்தவர் அவராகவே இருக்கிறார் இன்றும் ! மற்றவர்களின் பாடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வசீகரிக்கும், ஆனால் நா.மு போல எல்லா பாடல்களிலும் வசீகரித்தவர் அதன்பின் தோன்றவே இல்லை !
கலைஞர்கள் மறைவதில்லை. அவர்கள் தங்களுடைய கலைகளின் வழியாக வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் எனும் கூற்று, கவிஞரின் வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு சமம். விரைவில் விடைபெற்றுவிடுவோம் என்பதை அறிந்தவர் போல இடைவிடாமல் பாடல் எழுதித் தள்ளிக் கொண்டே இருந்தார். ஆனாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்தன.
வைரமுத்து தனது கவிதைகளில் உவமைகளுக்காக வானத்தைப் பார்ப்பார், இவர் பூமியைப் பார்ப்பார். தன்னைச் சுற்றிய பறவைகள், வகுப்பறைகள், கதவுகள், கண்ணாடிகள், புழுது, வெயில் எல்லாமே இவரிடம் பாடுபொருளாகிவிடும். பார்க்கும் எல்லாவற்றையும் கவிதையாக்கிவிடும் மந்திரக் கோல் இவரது பேனாவாகியிருந்தது.
பறக்காத பறவைக்கெல்லாம்
பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம்
களவு போக வழியில்லை –
என கானாக் காணும் காலங்கள் பாடலில் மிக அழகிய கவித்துவத்தை முடிந்து கொண்டே வருவார். சட்டென, சாதாரண காதலனோடு தரையிறங்கி
நடை பாதைக் கடையில்
உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ
மயக்கங்கள் பிறக்கும்!
என சொல்லி வியக்க வைப்பார். கவிதைகளைக் கேட்கும் ஒவ்வொருவரும் தங்களது காதலுக்குள் அல்லது நட்புக்குள் அதை திணித்துப் பார்க்க வைக்கும் வித்தை நா.முவிடம் இருந்தது.
யாருமே யோசிக்காத கோணத்தில், எல்லோரும் பார்க்கின்ற விஷயங்களை சிந்திப்பதில் நா.மு மிக மிக வித்தியாசமானவர். அந்த வகையில் என்னை எப்போதும் வியக்க வைக்கின்ற பாடல்
ஒரு பாதிக் கதவு நீயடி,
மறு பாதிக் கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்கக் காத்திருந்தோம் !
அந்தப் பாடலைக் கேட்டபின்பெல்லாம் இரட்டைப் பாளி கதவைப் பார்க்கும்போதெல்லாம் காதலனும், காதலியும் காதலில் அசைந்து கொண்டிருப்பதாகவே எனக்கும் தோன்றும் !
இரவு பயம், திருட்டு பயம்
கதவுகளைச் சேர்த்துவிடும்
கதவுகளைத் திருடிவிடும்
அதிசயத்தைக் காதல் செய்யும் !
என ஒரு கவிதையைப் பாடலுக்குள் சொருகி வியக்க வைப்பார். தம்பதியருக்கும், காதலருக்கும் ஒரு மெல்லிய மயக்கத்தை உருவாக்கும் அழகான பாடல் இது !
ஒரு கடையில், குறைந்த சம்பளத்தில் நிறைய அடக்கு முறைகளுக்கிடையே வாழும் ஒரு இளம் பெண்ணின் மீதான காதலை அங்காடித் தெரு திரைப்படத்தில் மிக அற்புதமாக எழுதியிருப்பார் நா.மு. அவருடைய அந்தப் பாடல் தான் அந்தத் திரைப்படத்தின் காதலுக்கே அழகிய வர்ணமடித்தது ! அவள் அப்படி ஒன்றும் அழகில்லை எனும் பாடலில் அவர் காதலின் காதலை கவித்துவமாய்ச் செதுக்கியிருப்பார். ரம்பையும், ஊர்வசியும் ஓடி ஒளிந்து கொள்ளும் அழகியல் வரிகளை காதலிக்குச் சூட்டியிருப்பார்.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை !
என வித்தியாசமாய் அவரது காதல் ஒரு புன்னகையோடு பயணிக்கிறது !
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை !
என, அழகிய காதலை இலக்கியமாய்ச் சொல்லித் திரும்பும் போது
வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை, என போகிற போக்கில் வாழ்க்கையின் தத்துவத்தையும் இரண்டே வரிகளில் தெளித்து விடும் வித்தை அவரிடம் இருந்தது !
எத்தனை கோடி கண்ணீர்
மண்மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும்
பூமி இங்கு பூ பூக்கும் ! என அப்படியே நம்பிக்கையின் விதைகளையும் ஆழமாய் நட்டுச் செல்கின்றன அவரது விரல்கள்.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே,
தாலாட்டுப் பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே !
என தாயன்பையே இரண்டாம் இடத்தில் தள்ளி எழுதத் துணியும் நா.மு ஒரு தந்தையாகவும் அப்படியே வாழ்ந்தார் என்பதே உண்மை !
இன்றும் எனது தொலைபேசியில் காலர் டியூனாக இருப்பது ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் தான்.
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை !
எனும் பாடல் இன்றும் மனதில் சொல்லாத பக்கங்களிலெல்லாம் நெகிழ்வை இறக்கிக் கொண்டே இருக்கிறது.
தனது வாழ்க்கையின் கடைசி காலங்களில் அவர் எழுதிய,
காற்றோடு விளையாட
ஊஞ்சல் எங்கே செய்கிறாய்
கடன் வாங்கி சிரிக்கின்ற
மானுட நெஞ்சைக் கொய்கிறாய்
என சிட்டுக் குருவியாகவே மாறி அவர் எழுதிய வார்த்தைகள் மனதை கனக்கச் செய்கின்றன. கண்ணீரைச் சுமக்கச் செய்கின்றன. அவர் பாடு பொருள்களாகத் தேர்ந்தெடுக்கின்ற விஷயங்கள் தொடர்ந்த வியப்பைத் தந்து கொண்டே இருக்கின்றன.
காற்றில் இலைகள் பறந்த பின்னும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை ! என்றும்,
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமல் கண்டம் தாண்டும் ! என்றும் அவர் அனாயசமாக எழுதிச் சென்றவற்றை நினைத்துப் பார்க்கும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.
முதலிலேயே சொன்னது போல, அத்தனைப் பாடல்களிலும் ஏதோ ஒரு வகையில் வியக்க வைத்து மாயம் செய்பவராக நா. முத்து குமார் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் இன்னும் ரசிகர்களால் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
எங்கே வெயில் விழுகிறதோ, எங்கே அடைமழை பொழிகிறதோ, எங்கே தென்றல் வீசுகின்றதோ, எங்கே புழுதி பறக்கின்றதோ எங்கெல்லாம் நா.மு வின் கவிதை வரிகள் கை நீட்டி நிற்கின்றன. காற்றின் அலைவரிசைகளில் அவருக்கான களம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது. ஒரு கவிஞனின் இடத்தை இன்னொரு கவிஞன் இட்டு நிரப்பலாம். ஆனால் ஒரு சகாப்தத்தின் இடைவெளியை இன்னொருவரால் நிரப்பவே முடியாது ! நா.மு அப்படி ஒரு சகாப்தமாக வாழ்ந்து மறைந்தவர்.
அவர் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்திருக்கலாம், தமிழைச் செழுமைப்படுத்தியிருக்கலாம் எனும் நப்பாசை ஒரு புறம் இருந்தாலும், கிடைத்த காலத்தைச் செம்மையாய்ப் பயன்படுத்தியிருக்கிறார் எனும் ஆறுதலும் ஒரு புறம் எழாமல் இல்லை. !
ஒரு நண்பனாகவும், ஒரு ரசிகனாகவும், ஒரு தமிழனாகவும் என்னை அதிகம் ஈர்த்தவர், என்னை அதிகம் கலங்க வைத்தவர் நா.மு ! அவர் வாழ்கிறார், அவரது பாடல்களின் வழியாகவும் கவிதைகளின் வழியாகவும்.
896 total views, 2 views today