நாம் ஏன் வேலைகளைத் தாமதப்படுத்துகிறோம்? அல்லது தள்ளிப்போடுகிறோம்!
நீங்கள் ஒரு கடிதம் ஒன்றை இன்று தபால் நிலையத்திற்குக் கொண்டு போய் அனுப்பவேண்டும், ஆனால் பரவாயில்லை அதை நாளை அனுப்புவோம் என்று முடிவு செய்கின்றீர்கள். நாளை அதே கடிதத்தைக் கண்டதும், சரி பரவாயில்லை அடுத்த நாள் அனுப்புவோம் என்று நினைத்து விட்டு அதை அனுப்புவதை மீண்டும் தாமதப்படுத்துகின்றீர்கள். இப்படியே அதை அனுப்புவதைப் பல நாட்களுக்குத் தள்ளிப்போடுகின்றீர்கள். இதைப் போல் நீங்களும் பல விஷயங்களைத் தள்ளிப்போட்டிருப்பீர்கள், சரி தானே? இதற்கு என்ன காரணம்? குறிப்பாக வேலைகளைத் தள்ளிப்போடுவதற்கான அறிவியல் ரீதியான காரணம் என்ன?
தள்ளிப்போடுதல் அல்லது ஆங்கிலத்தில் procrastination என்பது பணிகளை வேண்டுமென்றே தாமதப்படுத்துவது அல்லது ஒத்திவைப்பதைக் குறிக்கும். இது ஒருவரின் உற்பத்தித்திறனைக் குறைத்து தேவையற்ற மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். தள்ளிப்போடுதலுக்கு விஞ்ஞானிகளின் கருத்துப்படி பல்வேறு உளவியல் மற்றும் அறிவாற்றல் காரணிகள் உள்ளன.
முதலில் உளவியல் ரீதியான சில காரணிகளைப் பார்ப்போம்:
உடனடி திருப்தி: மனித மூளை உடனடி வெகுமதிகளைத் தேடுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது எப்போதுமே குறுகிய கால திருப்திக்குத் தான் நீண்ட கால நன்மைகளை விட முன்னுரிமை அளிக்கும். எனவே நாம் எப்போது வேலைகளைத் தள்ளிப்போடுகின்றோம் என்றால், நமக்கு மிகவும் இனிமையான சின்ன சின்ன விஷயம் உடனடியாக அடையக்கூடியதாக இருந்தால், அதை நோக்கித் தான் நமது மூளை போகும்.
தோல்வி பயம்: தள்ளிப்போடுதல் என்பது தோல்வியைத் தவிர்க்கக்கூடிய ஒரு பாதுகாப்பு பொறிமுறையாக இருக்கலாம்.
செம்மை வாதம்: எல்லாவற்றிலும் திறமையாக செயல்புரியவேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களின் வேலைகள் தொடங்குவதை தாமதப்படுத்துவர்.
அடுத்து அறிவாற்றல் ரீதியான காரணிகள் பார்ப்போம்:
நேர நிர்வாகம்: திட்டமிடல் மற்றும் நேர ஒதுக்கீட்டில் மோசமான செயல்திறன் வேலைகளைத் தள்ளிப்போடுவதற்குப் பங்களிக்கலாம். தெளிவான காலக்கெடு, கட்டமைப்புகள் அல்லது பணிக்கான தேவையான நேரத்தின் புரிதல் இல்லாமல், அதைச் சரியான நேரத்தில் தொடங்கி முடிக்கக் கடினமாக இருக்கக்கூடும். எனவே அவ்வேலைகளைத் தள்ளிப்போடத் தோன்றும்.
கட்டுப்பாட்டின் பற்றாக்குறை: தள்ளிப்போடுதல் என்பது சுய கட்டுப்பாட்டில் சிரமங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம், குறிப்பாக அத்தகைய தூண்டுதல்களைக் கையாளுதல், திசைதிருப்பல்களை எதிர்த்துப் போராடுதல் மற்றும் கவனம் செலுத்துவது. இந்த சுய கட்டுப்பாட்டுச் சவால்கள் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன மற்றும் பணி ஒத்திவைப்பதற்கு வழிவகுக்கின்றன.
சரி வேலைகளைத் தள்ளிப்போடுவதற்கான காரணங்களைப் பார்த்துவிட்டோம். இனி தள்ளிப்போடுவதை மீறுவதற்கான வழிகள் என்ன என்பதைப் பார்ப்போம்:
சிறு பணிகளாகப் பிரித்தல்: வேலைகளை இலகுவாகச் செய்யக்கூடிய சிறிய வேலைகளாகப் பிரித்துச் செய்தால் நாம் செய்யவிருக்கும் வேலையில் முன்னேற்றம் தெரிந்துகொண்டே இருக்கும். இது ஒரு வேலையைத் தொடங்கவும் தொடரவும் வழி வகுக்கும்.
குறிப்பிட்ட இலக்குகள் மற்றும் காலக்கெடு அமைத்தல்: இலக்குகளைத் தெளிவாக வரையறுத்து, யதார்த்தமான காலக்கெடு அமைப்பதின் மூலம் பணிகளைச் சரியான நேரத்தில் முடிக்க ஒரு தெளிவான கவனம் அளிக்கிறது.
திசைதிருப்பல்களைக் குறைத்தல்: தனிப்பட்ட திசைதிருப்பல்களை அடையாளம் கண்டு குறைப்பது, உதாரணத்திற்கு கை தொலைப்பேசியின் சத்தத்தை நிறுத்தி விட்டு வேலைகளைப் பார்ப்பதன் மூலம் கவனம் செலுத்தவும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும்.
கட்டுப்படுத்தப்பட்ட வழக்கங்களைப் பயன்படுத்துதல்: வழக்கமான வழக்கங்கள் மற்றும் பழக்கங்களை உருவாக்குவது, உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் தள்ளிப்போடுவதைத் தவிர்ப்பதற்கும் சாதகமான சூழலை உருவாக்குகிறது.
தள்ளிப்போடுதல் ஒரு உலகளாவிய சவால்,ஆனால் அதன் உளவியல் மற்றும் அறிவாற்றல் வேர்களைப் புரிந்துகொள்வது தனிநபர்களுக்கு இந்த பழக்கத்தை மீற உதவும். பயனுள்ள வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்தலாம், மன அழுத்தத்தைக் குறைக்கலாம் மற்றும் உங்கள் இலக்குகளை அடையலாம். இறுதியில் இதனால் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை நோக்கிச் செல்லலாம்.
862 total views, 3 views today