கனடா தமிழர் தகவல் சஞ்சிகையின் 32வது ஆண்டு விருதுவிழா
கனடாவின் மூத்த தமிழ் இதழான ‘தமிழர் தகவல்’ சஞ்சிகையின் 32வது ஆண்டுப் பூர்த்தி விழா ஜூலை 08ம் ;திகதி சனிக்கிழமை ரொறன்ரோ நகரசபையின் அங்கத்தவர் சபா பீடத்தில் இடம்பெற்றது. 32வது ஆண்டு மலர் வெளியீட்டுடன் ஆரம்பமான நிகழ்ச்சிக்கு தகவலின் உதவி ஆசிரியர் செல்வி அனோஜினி குமரதாசன் தலைமை தாங்கினார். டாக்டர் மேரி கியூரி ஃபோல் மலரை வெளியிட்டு வைத்து உரையாற்றினார்.
கனடியத் தமிழர் சமூகத்தில் விருதுகள் வழங்கிக் மதிப்பளிக்கும் பாரம்பரியத்தை ஷதமிழர் தகவல்| சஞ்சிகையே முதன்முதலில் 1992ம் ஆண்டில் ஆரம்பித்தது. கடந்த 32 ஆண்டுகளில் சமூகப்பணி, பொதுப்பணி, கல்விப்பணி, கலை இலக்கியப்பணி, ஊடகப்பணி, அகதிகள் சேவை போன்றவற்றில் ஈடுபட்ட 279 பிரமுகர்கள் விருதுகள் வழங்கி தங்கப் பதக்கம் சூட்டி கௌரவிக்கப்பட்டனர். தன்னார்வத் தொண்டு மற்றும் தலைமைத்துவப் பண்பு கொண்ட இளையோரும், தமிழ்க் கனடிய வணிகத்துறை முன்னோடிகளும் இவர்களுள் அடங்குவர். ; தமிழரல்லாத பன்முக சேவையாளர்கள் பத்துப்பேர் “தமிழர் தகவல்| விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் ஐ.நா. சபையின் சமாதானத் தூதுவராகப் பணியாற்றும் கிம் புக் (Kim Phuc) அம்மையார் அவர்களுள் முக்கியமானவர்.
தமிழர் தகவலின் வாழ்நாள் சாதனையாளர் விருதினை இதுவரை பதினான்கு சான்றோர் பெற்றிருக்கின்றனர். இவ்வாண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது சர்வதேச புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கனடாவில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் தமிழ் எழுத்துலகில் அறுபது ஆண்டுகள் பயணித்திருப்பதை கொண்டாடும் முகமாக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இவ்வாண்டிற்கான சாதனைத் தமிழன் விருது யாழ்ப்பாணத்தில் தனது தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் டான் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனரான திரு.எஸ்.எஸ்.குகநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இலங்கையில் மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர் வாழ்விலும் ஊடகத்துறையில் அச்சு மற்றும் இலத்திரனியல் பரப்பில் முன்னோடிச் சாதனைகளை புரிந்தவராக திரு. எஸ்.எஸ்.குகநாதன் அவர்கள் திகழ்கிறார். தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவகும் ஈழநாடு தினசரியின் ஆசிரியராகவும் திரு.குகநாதன் பணியாற்றுகிறார்.
தமிழர் தகவல் சிறப்பு விருது ஆஸ்திரேலியாவில் வதியும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்களுக்கும், கலைத்துறை விருது திருமதி ஜெயராணி சிவபாலன் அவர்களுக்கும், சமூகசேவை விருது திரு ஜெயசிங் டேவிட் அவர்களுக்கும், முதன்நிலை இளையோர் சாதனைவிருது டாக்டர் ஜனகன் சிறீரஞ்சன் அவர்களுக்கும், தொழில்துறை முன்னோடி விருது திருமதி அபி அமலன் மற்றும் திருமதி ரஜினி நாதன் இருவருக்கும் வழங்கப்பட்டது.
விழாவின் சிறப்பு விருந்தினராக ரொறன்ரோவின் புதிய மேயராக தெரிவு செய்யப்பட்ட திருவாட்டி ஒலிவியா சௌ (Olivia Chow) பங்குபற்றி விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.புதிய மேயராக வெற்றி பெற்றபின்னர், உத்தி யோகபூர்வமாக இன்னும் பதவி ஏற்காத நிலையிலும் தனது நகரசபை மண்டபத்தில் தான் கலந்து கொள்ளும் முதலாவது நிகழ்ச்சியாக “தமிழர் தகவல்| விருது விழா அமைந்திருக்கிறது என்பதை ஒலிவியா சௌ தமதுரையில் பரவசத்துடன் பகிர்ந்து கொண்டார்.
1991ம் ஆண்டு ரொறன்ரோவில் ஆரம்பிக்கப்பட்ட “தமிழர் தகவல்| சஞ்சிகை ஆரம்பம் முதல் இன்றுவரை ஒவ்வொரு மாதமும்; 5ம் திகதி தவறாமல் வெளிவருகின்றது. இதன் முதன்மை ஆசிரியரான திரு எஸ்.திருச்செல்வம் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் இரண்டு தினசரி பத்திரிகைகளை ஆரம்பித்து அதன் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர்.
790 total views, 3 views today