யேர்மனியில் விசையுறு பந்தினைப்போல பூப்பந்தாட்டத்தில் தடம்பதிக்கும் சிறுவர்கள்!
- பிரசாந்தன் யேர்மனி
´விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்கேட்டேன்….´ என்ற மகாகவி பாரதியின் சக்தியை நோக்கிய வேண்டுதலை நாம் அறிவோம். சமூகவிடுதலைக்காக தமிழ் இலக்கியத்தை ஆயுதமாக்கி எடுத்தாண்ட எங்களின் அந்தத் தமிழ்க்கவிஞனின் வழிவந்த இரண்டு சிறார்கள் யேர்மனியில் விளையாட்டுத்துறையில் கடந்த இரண்டு வருடகால உழைப்பின் பயனாகத் தடம்பதித்து வருகிறார்கள். பட்மின்ரன் எனப்படும் பூப்பந்தாட்டத்தில் விசையுறு பூவின் திசையையும் வேகத்தையும் அதைவிட வேகமாக உள்ளத்திலே கணித்து தம் உடலை இயக்கும் ஆற்றலை இந்தத் தமிழ்ச்சிறார்கள் தமது 11 வயதிலேயே தமக்குள் வளர்த்துள்ளார்கள்.
அதன் பெறுபேறாக 84 மில்லியன் மக்கள் வாழும் யேர்மனியிலே வெறுமனே சுமார் 80.000 தமிழர்களிலிருந்து 11 வயதினருக்கான ரு11 ஆண்கள் பிரிவில் 1ஆம் இடத்தை கார்த்திக் ஹர்சத்குமாரும், அதே வயதினருக்கான பெண்கள் பிரிவில் 3ஆம் இடத்தைத் தமிழி மார்க்கண்டு அவர்களும் எட்டியுள்ளார்கள். இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய வெற்றிச்செய்தி அல்லவா ! ஏனெனில் புலம்பெயர்ந்து வாழும் நாட்டில் எண்ணிக்கையில் மிகச்சிறியதொகையாக வாழும்நிலையிலும் எம்மிடையேயிருந்து இவ்வாறு இருவர் தமிழினத்தை அடையாளப்படுத்தியுள்ளனர்.
தனிப்பட்ட இரு குடும்பங்களின் இடைவிடாத முயற்சியையும் ஆதரவையும் இவ்விடத்தில் கட்டாயம் நாம் பாராட்டியாகவேண்டும். அதேவேளை இவர்களின் இந்த முயற்சியைப்போன்று எம்மிடையேயுள்ள ஏனைய வருங்கால சாதனையாளர்களையும் அவரவர் துறைசார்ந்து இனங்கண்டு ஒட்டுமொத்த தமிழினமாக அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து உழைக்கும்பட்சத்தில், எங்கள் 80.000 பேரிலிருந்து இன்னும் பல முன்னணி நிலைச் சாதனையாளர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள் என்பது உறுதி. வெறுமனே சினிமாப்பாணியிலே சர்வசாதாரணமானதாக எடுத்துக்கொள்ளாமல் இவ்விரு சிறுவர்களும் இந்த நிலையை அடைவதற்கு கடந்துவந்த 2 வருடங்களிலும் முதலிடப்பட்ட உழைப்பையும் அர்ப்பணிப்புகளையும் தமிழ்ச்சமூகம் புரிந்துகொள்ளவேண்டும். வெறுமனே இரு சிறார்களின் தனிப்பட்ட வெற்றிகளாக இதைக் கருதாது, இவர்களுக்குச் சாத்தியமானதைப்போல முயற்சி, ஊக்கம், உழைப்பு உள்ள இன்னும் பல தமிழ்ப்பிள்ளைகளுக்கும் வெற்றிகள் வாய்க்கும் என்பதில் நம்பிக்கைகொள்ளவேண்டும். அத்தோடு எமது சிறார்களை விளையாட்டுத்துறையில் தட்டிக்கொடுத்து இதை நிறுவனமயப்படுத்தி சர்வதேசதரத்தில் அவர்களை வளர்த்தெடுப்பதற்கு பொது அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உட்பட சகல தரப்புகளும் இணைந்து செயற்படவேண்டியது அவசியமாகும். ஏனெனில் இது தமிழ் இனத்தின் அடை யாளம் மற்றும் குரல் தொடர்பானதும்கூட. உயர்ந்த இடங்களில் நின்றுகொண்டு சொன்னால் மட்டுமே தமிழரின் குரலுக்குச் செவிசாய்க்கப்படும். அதற்கான ஒரு தளமாகவும் விளையாட்டு இன்று எமக்கு அவசியமாயுள்ளது.
தகவல்: துரைச்சாமி.கோணேஸ்வரன்.
831 total views, 3 views today