இருந்த இடத்தில் வைக்காவிட்டால் இறந்த (ஐஸ்) கோழியும் கொக்கரிக்கும்
- மாதவி. யேர்மனி
எங்கடா பேனாக்கு Ink filler கடைடநச ஐ வைத்தாய். எடுத்த இடத்தில் வைக்கச்சொல்லி எத்தனை தடவை சொல்லி இருப்பேன். என்று அப்பாவும், தையல் ஊசி, நேற்று எடுத்து ததைத்தது நீங்கள்தானே? இந்த ஓலைத் தட்டியிலைதானே ஊசி எப்பவும் குத்திக்கிடக்கிறது. இப்ப பார் நான் தேடித்திரிஞ்சு கடைசியில் உங்கடை பாவாடையில் குத்திக்கிடக்கக் கண்டு எடுத்தேன். தவறி குத்தி இருந்தால்! என்று அம்மாவும், எடுத்ததை, எடுத்த இடத்தில் வைத்துப் பழகவேண்டும், எனச் சின்ன வயதில் இருந்து, அப்பா, அம்மா இருவருமே சொல்லியும், பேசியும்,அடித்தும், நம்மை வளர்த்து இருப்பார்கள்.
நாம் சின்னவயதிலும், கேட்கவில்லை, வளர்ந்தும் கேட்கவில்லை. அது சில தமிழ் மக்கள் மட்டுமல்ல, எந்த நாட்டவர்களாக இருந்தாலும் சில பேர் அப்படித்தான்.
இது ஏன் சொல்கிறேன் என்றால், நாம் கடைக்குபோவோம், அங்கு தட்டில் அடுக்கி வைத்திருக்கும் ஒரு கச்சான் பக்கட்டை எடுக்கிறோம். எடுத்து காசு கொடுக்க வரிசையில் நிற்கும்போது கச்சான் வாங்கினால், ஒரேயடியாக முடிச்சிடுவேன், அத்தோடு கொலாஸ்ரோல் என்றும் ஞானோதயம் வர,அதனை அப்படியே கண்ணெதிரில் உள்ள தட்டில் வைத்துவிட்டு போவோம்.
அது கூட மன்னிக்கலாம், சிலர் கோழியை குளிரூட்டிக்குள்ளால் எடுத்து, காசு கொடுக்க வரும்போது, மனம் மாறி கோழிதேவை இல்லை என்று, எடுத்த இடத்தில் வைக்காமல், முன்னால் என்ன தட்டு இருக்கோ, அது உலர் உணவு வைக்கும் தட்டாகவும் இருக்கலாம், அதன்மேல் கோழியை வைத்துவிட்டு போய் விடுவார்கள்.
ஐஸ்சில் இருந்த கோழி இறைச்சி, வெட்கையில் கிடந்து மீண்டும் (சாகும்) பழுதாகும். இப்படியாக ஐஸ்சில் இருக்க வேண்டிய பல, சும்மா தட்டுகளில் இருப்பதை நீங்களும் கண்டு இருப்பீர்கள்.
உண்மையில் உங்களுக்கு தேவை இல்லை என்று தாமதமாக முடிவு எடுத்தால், அதனை கணக்காளரிடம் நீங்கள் காசு கட்டும் போது திருப்பி கொடுக்கவும்.அல்லது, சில நிமிடங்கள் போதும், அதனை எடுத்த இடத்தில் நாமே வைக்கலாம்.
கண்ட கண்ட இடத்தில் வைத்து கோழி இறைச்சியை மீண்டும் சாகடிக்காதீர்கள். தான் செத்தும் எவருக்கும் பயன் இல்லையே என்று, ஐஸ் கோழியும் கொக்கரிக்கும். அது எம்மை மன்னிக்காது. கோழி இறைச்சி மட்டுமல்ல, ஐஸ் பெட்டியில் இருந்து எடுக்கும் எந்தப் பொருளையும், தேவை இல்லை என்றால்,மீண்டும் எடுத்த இடத்திலேயே உடன் வைக்கவும். அப்படிச் செய்தால் ஒரு வேளை எமக்குப் புண்ணியம் கிடைக்கலாம்.
660 total views, 3 views today