இலங்கை வரும் சீனக் கப்பல்கள்
-பாரதி
சீனாவின் மற்றொரு ஆய்வுக் கப்பல் ஒக்ரோபர் மாதத்தில் இலங்கை வருவது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கை கடற்பரப்பில் 17 நாள்களுக்குத் தங்கியிருந்து ஆய்வுகளை இந்தக் கப்பல் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நாரா நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த கடல்வள ஆய்வு ஏதோ ஒரு வகையில் தமக்கு ஆபத்தானதாக அமையலாம் என்ற அச்சம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. அந்தக் கப்பலின் வருகையைத் தடுத்து நிறுத்துவதற்கான இராஜதந்திர நகர்வுகளை இந்தியா ஏற்பனவே ஆரம்பித்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், இதுவும் கடந்த கால முயற்சிகளைப் போல தோல்வியில் முடியுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி!
இலங்கை கடற்பகுதிக்குள் சீனாவின் அதிநவீன கப்பல்கள் நுழைவது அதிகரித்துச் செல்வது தொடர்பில் இந்தியாவும் தனது கரிசணையை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றது. இலங்கையும் அந்த கரிசனையை அக்கறையுடன் செவிமடுப்பதாகவே காட்டிக்கொள்கின்றது. ஆனால், சீனாவின் எந்தவொரு கப்பலையும் தடுத்துநிறுத்துவதில் இலங்கை அரசங்கம் உண்மையில் அக்கறை காட்டவில்லை. புதுடில்லியின் சீற்றத்தை இது அதிகரித்தாலும் பொறுமையகவே இருப்பதைவிட டில்லிக்கு வேறு தெரிவுகள் எதுவும் இல்லை.
ஜூலை ஆரம்பத்தில் இலங்கை கடலிற்குள் புகுந்த சீனாவின் அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய போர்க் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரிந்தது ஏன் என்பதையிட்டு இந்தியா ஆராய்கின்றது. சீனக் கப்பல்கள் என்னதான் ஆய்வு என்று சொல்லிக்கொண்டு இலங்கைக் கடற்பகுதிக்குள் வந்து சென்றாலும், அவை தமக்கு எதிரான புலனாய்வுத் தகவல்களைத் திரட்டுவதற்காகவே வருகின்றன என்ற கருத்துதான் டில்லியிடம் உள்ளது. சீனாவின் யுவான் வாங்-5, செயற்கைக்கோள் தொழில் நுட்பத்துடன் கண்காணிக்கும் திறன் கொண்ட போர்க் கப்பல் கடந்த வருடம் (2022) இதே காலப் பகுதியில் – அதாவது ஓகஸ்ட் மாதம் இலங்கையை வந்தடைந்தது. இவ்வாறு யுவான் வாங் 5 இலங்கை வந்தடைந்தாலும்,அந்தக் கப்பல் வருவதான செய்தி அதற்கு முன்னா் பல மாதங்களுக்கு முன்னதாகவே பிரஸ்தாபிக்கப்பட்டு வந்தது. இதனால் பல திசைகளிலும் இந்தியாவினால் அது கண்காணிக்கப்பட்டதோடு, இலங்கையின் மாத்தறையை அண்டிய கடற் பகுதியில் இருந்து இந்தியாவின் அதி நவீன வசதி கொண்ட கப்பல் கண்காணிப்பதில் ஈடுபட்டதாகவும் அப்போது செய்தி வந்தது.
இப்போது ஒரு வருடத்தின் பின்னர் சீனாவின் இரண்டாவது கப்பல் இலங்கைக்கு வந்து சென்றது இந்தியாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது வந்து சென்ற கப்பல் போர்க் கப்பலாக இருப்பினும் அதன் வல்லமை இந்தியாவுக்குத் தெரியும். அதனால் தமக்கான பாதுகாப்புக்கு அது பெருமளவு அச்சுறுத்தலல்ல என்று இந்தியா நம்புகின்றது. இருப்பினும் கடந்த ஆண்டு வந்த கப்பல் இந்தப் போர்க் கப்பலை விட ஆபத்தானது என்பதால்தான் அதனையிட்டு இந்திய அதிகளவுக்கு அவதானமாக இருந்தது. சீனாவின் சந்தேகத்திற்குரிய விண்வெளி ஆய்வுக் கப்பலில், இந்தியாவின் முக்கியமான இராணுவ நிலைகளை உளவு பார்க்க வாய்ப்பு இருந்ததால், அந்தக் கப்பல் வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் அப்போது எதிர்ப்பையும் மீறி இலங்கை அனுமதி வழங்கியதன் பின்னர் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் மீண்டும் அதி நவீன கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய சீன போர்க் கப்பலான “ஹாய் யாங் 24 ஹாவ்’ இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து திரும்பிச் சென்றுள்ளது.
இந்தியாவின் அணுஉலைகளும், பல படைத் தளங்களும் தென்னிந்தியாவிலேயே உளளன. சீன ஆய்வுக் கப்பல் இலங்கையிலிருந்து கொண்டே அது தொடர்பான தகவல்களைச் சேகரிக்கக்கூடியது. இந்தியா பதற்றமடைந் திருந்தமைக்கு அதுதான் பிரதான காரணம். ஆனால், இந்தியாவின் இந்தப் பதற்றத்தையிட்டு கொழும்பு கவலைப்படவில்லை. கடந்த சில வருடங்களாக நாட்டிற்கு வருகை தந்துள்ள இவ்வாறான கப்பல்கள் தொடர்பில் ஆராய்ந்த போது, அவற்றில் பெரும்பாலானவை சீனாவை சேர்ந்த ஆய்வுக் கப்பல்களாகவே உள்ளன. இது கூட இந்தியாவின் சந்தேகத்தை அதிகரிக்கின்றது.
கடந்த மாதம் வருகை தந்த போர்க் கப்பலின் வருகை குறித்து இந்திய அதிகாரிகளிடம் சீனா தெரிவித்த போதும், அதன் வருகை குறித்து இந்திய தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. எனினும் அந்தக் கப்பலுக்கும் இலங்கை அனுமதி வழங்கியது. அந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து ஓகஸ்ட் 12ஆம்திகதி புறப்பட்டுச் சென்றது. இந்தப் போர்க் கப்பல் வருவதற்கும் சீன அதிகாரிகள் இலங்கையிடம் முன்கூட்டியே அனுமதி கோரியிருந்த சமயம் இந்தியத் தரப்பினால் வெளிப்படுத்தப்பட்ட கவலைகள் காரணமாக சீனாவின் போர்க் கப்பலுக்கு அனுமதி வழங்குவதில் இலங்கை தாமதம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சூழ்நிலையிலேயே 3வது மிகப்பெரிய கப்பலும் சீனாவில் இருந்து வருகை தரவுள்ளதான தகவல் இப்போது இலங்கைத் தரப்பில் இருந்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. சியான் 6 எனப்படும் 3,999 தொன் எடை கொண்டிந்த ஆராச்சிக் கப்பல் ஒக்டோபர் மாதம் இலங்கையின் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் தரித்து நின்று ஆராச்சியில் ஈடுபடவுள்ளதாகவே இந்தியத் தரப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் குவாங்சோவை தளமாக கொண்டு செயற்படும் ஒரு ராட்சக் கப்பல். தற்போது தென் சீனக் கடலில் இருந்து நகர ஆரம்பித்துவிட்டது. இலங்கையை அடையும் இக் கப்பலானது இலங்கையின் தேசிய நீர் வளா ஆராய்ச்சி மற்றும் அபிவருத்தி முகவரான நாராவின் ஆராச்சியிலும், தென் இந்திய பெருங் கடலையும் ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா இப்பகுதியில் உள்ள தனது கடற் படையின் கண்காணிப்பு கப்பலை உசார் செய்வதோடு மேலும் இரு கப்பல்களை ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் இப் பகுதிக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
சீனக் கப்பல்களின் தொடர் வருகையும், இந்தியா அது தொடர்பில் வெளிப்படுத்தும் கரிசனை குறித்த இலங்கை அரசாங்கத்தின் அலட்சியமும் பிராந்தியத்தில் இராஜதந்திர ரீதியிலான ஒரு முறுகல் நிலையைத் தோற்றுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
501 total views, 3 views today