மூவகை உறவுகள்
இலக்கங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இவற்றின் தனித்தன்மை தமிழர் வாழ்வியலில் தவிர்க்க முடியாதவையாக அமைந்துள்ளன.
இவற்றுள் மூன்று இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சுமார் ஐம்பதுக்கும் அதிகமான சொற்களை தமிழ் அகராதியில் காணலாம்.
முக்கனி, முத்தமிழ், முக்காலம், முச்சுடர், முப்பலம், முப்பகை, முப்புரம், முப்பொருள், முத்தாரம், முக்கூட்டு, முற்சங்கம் என்று இப்பட்டியல் விரிந்து செல்கிறது.
யாழ்ப்பாணத்தில் இன்று மூவகையினர்!
இந்த வரிசையில் ஒன்றாக எங்கள் தாயகத்தில் – யாழ்ப்பாணத்தில் இன்று மூவகையினர் இருப்பதை அங்கு வாழும் மூத்த ஊடகர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த மாதம் கனடாவின் ரொறன்ரோவில் இடம்பெற்ற தமிழர் தகவல் விழாவில், “உலகளாவிய ஊடக சாதனைத் தமிழன்| விருது பெற்ற திரு. எஸ்.எஸ்.குகநாதன் நிகழ்த்திய சிறப்புரை இதனை அறியத் தந்தது.
அரசாங்க சேவையில் மட்டும் பணியாற்ற வேண்டுமென விரும்பும் ஒரு வகையினர், வெளிநாடு செல்வதற்குப் பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு வகையினர், நிவாரணங்களை மட்டும் நம்பி வாழும் மற்றொரு வகையினர் என இவர்களை வகைப்படுத்தியுள்ளார் திரு. குகநாதன்.
அரசாங்க சேவையில் சேர்ந்தால் “சும்மா| இருந்து சம்பளம் பெறலாம் என்ற நோக்குடன் வாழ்பவர்கள் முதலாம் வகையினர். உதாரணமாக, குடாநாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலர் அலுவலகத்திலும் தேவைக்கதிகமானோர் (சுமார் 300 பேர்) பணியாற்றுகின்றனர்.
திருமணத்தை எதிர்நோக்கும் இளைஞருக்கான தகுதி வேலை செய்வதல்ல, வெளிநாடு செல்வதற்குப் பார்த்துக் கொண்டிருப்பது. பெண் கொடுக்கும் பெற்றோரின் எதிர்பார்ப்பும் இதுவாக மாற்றப்பட்டுவிட்டது.
நிவாரணங்களை மட்டும் நம்பி இருப்பவர்கள் கணிசமானோர். அரசாங்கம் வழங்கும் நிவாரணங்களை மட்டுமன்றி புலம்பெயர் உறவுகள் வழங்கும் நிவாரணமும் இதற்குள் அடங்கும். அங்குள்ளவர்களுக்கு புலம்பெயர்ந்தோர் உதவுவது நல்லது. செய்யத்தான் வேண்டும்.
ஆனால், அது எவ்வகையான தேவைகளுக்குப் பயன்படுகிறது என்பதை அறிந்து உதவ வேண்டுமென்று குறிப்பிட்ட திரு. குகநாதன் இதற்கு உதாரணமாக ஒன்றைச் சுட்டினார்.
‘இலங்கையில் ஆகக்கூடிய மதுபான விற்பனை யாழ்ப்பாணத்தில்தான்”
‘இலங்கையில் ஆகக்கூடிய மதுபான விற்பனை யாழ்ப்பாணத்தில்தான்” என்று அவர் குத்திக்காட்டிய விடயம், புலம்பெயர் உறவுகள் வழங்கும் நிவாரணம் எவ்வழியாக பயன்படுகிறது என்பதை புலப்படுத்துகிறது.
யாழ்ப்பாணத்தின் யதார்த்தத்தை இந்த அரங்கில் கூறத் தவறினால் அது இனத்துக்குச் செய்யும் துரோகம் என்று கூறியவர் இறுதியாக புலம்பெயர் உறவுகளிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார்:
‘அங்கிருப்பவர்களை அங்கேயே வாழக்கூடிய முறையில் ஊக்கமளித்து, அதற்கான உதவிகளை செய்யுங்கள்”.
இதுதான் இன்றைய தேவை.
நன்றி: திரு எஸ்.திருச்செல்வம். தமிழர்தகவல் கனடா
376 total views, 3 views today