இன்று ஒவ்வொரு ஐந்து வயது இடைவெளிக்குள் ஒரு தலைமுறை உருவாகிவிடுகிறது!
-தீபா ஸ்ரீதரன் தைவான்
உடல் எல்லைகள் சமூக ஏற்ற தாழ்வு
பற்றிய சிந்தனையல்ல.
சமீபத்தில் உடல் எல்லை பற்றிய ‘மாயா அம்மாவின் காணொளி’ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையேகுறிப்பிடத்தக்க விவாதத்தை உண்டாக்கியிருந்தது. நான் அந்த காணொளியைப் பார்த்துவிட்டு யோசித்துப்பார்த்தபோது, எனக்கு அதில் எந்தவித நெருடலும் ஏற்படவில்லை. ஒரு நிகழ்கால சமுதாய பிரச்சனையை, அம்சத்தை மிக அழகாகவும் எளிமையாகவும் விவரிக்கும் விதமாகவே அந்த காணொளி இருந்தது. இன்னும் சொல்லப்போனால் நாம் சற்று கவனம் செலுத்திச் சிந்தித்துப்பார்க்க வேண்டிய ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம் என்றே நான் நினைக்கிறேன்.
காணொளியில், மாயாவும், தானும்,மல்லிகைப்பூ வாங்கச் சென்ற ஒரு பூக்கடையில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி விவரிக்கிறார் மாயாவின் அம்மா. பூ வாங்கிய போது, அந்த பூ விற்கும் பாட்டி, மாயாவின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சியிருக்கிறார். அந்த நேரத்தில் மாயாவின் அம்மா அந்த செயலை கவனித்திருக்கவில்லை. பிறகு மாயா அவள் அம்மாவிடம் அந்த பாட்டி கன்னத்தைக் கிள்ளியதாகவும் அது அவளுக்கு வலித்ததாகவும் சொல்லியிருக்கிறாள். அப்போதுதான் மாயாவின் அம்மா உடல் எல்லைகள் பற்றிய கருத்தை முன்வைக்கிறார். அந்த பாட்டி, மாயாவுக்குத் தீங்கு செய்யும் எண்ணத்தில் அப்படிச் செய்யவில்லை என்பதையும், அவரது அந்த செயல் தனிமனித எல்லைகள் மற்றும் சம்மதத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் நிகழ்ந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இது தலைமுறை இடைவெளி காரணமாக ஏற்பட்டது என்பதை மாயாவிற்கு மிக நேர்த்தியாகவே புரிய வைக்க முயற்சி செய்கிறார்.
பத்து இருபது வருடங்களுக்கு முன்னால் வரை ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்குமான கால இடைவெளி அதிகமாக இருந்தது. இருபது வயது மனிதனுக்கும், நாற்பது வயது நிரம்பிய ஒரு மனிதனுக்கும் கூட சிந்தனையிலும், கருத்தியலிலும் மிகப் பெரிய வேறுபாடு இருந்திருக்கவில்லை. ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை ஒவ்வொரு ஐந்து வயது இடைவெளிக்குள் ஒரு தலைமுறை உருவாகிவிடுகிறது. ஒவ்வொரு தலை முறைக்குமான சிந்தனைகள் பெருமளவில் வேறுபட்டு இருக்கிறது. அதனால் இன்றைய சமுதாயத்தில் வெவ்வேறு குழுக்கள், ஒரே இடத்தில், ஒரே காலகட்டத்தில் குழுமி தீவுக்கூட்டமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்டச் சூழலில் இது போன்ற தர்க்கங்கள் நேர்ந்துகொண்டேதான் இருக்கும். பல நேரங்களில் இவை எல்லாவற்றிற்கும் தீர்வு காணமுடியாது. ஆனாலும் குழந்தைகளும் வெவ்வேறு தலைமுறையினரும் அவர்களுக்கான இடைவெளியில் உருவாகிவிடும் சிந்தனை வேறுபாட்டிற்கான காரணங்களையாவது தங்கள் மனதிற்குள் அலசிப்பார்க்கும் சூழலை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அது வெறுப்புணர்வற்ற சமுதாய வளர்ச்சிக்கு அவசியமானது.
என்பது, தொண்ணூறுகளில் பிறந்த தலைமுறையினரிடம் அவர்களின் முந்தைய தலைமுறையினர், நாங்கலாம் எங்க குழந்தைகளுக்கு 4அல்லது 5வயது வரை தாய்ப்பால் கொடுத்திருக்கிறோம் என்று பெருமையாக்கச் சொல்லிக் கொண்டபோது அவர்களுக்கு ஏற்பட்ட அதே அறுவறுப்பும் எரிச்சலும்தான் அவர்கள் பெருமையாகக் கூறிக்கொள்ளும் சில பழக்கவழக்கங்களைப் பற்றி இன்றைய தலைமுறைக்கும் இருக்கின்றது. அப்பொழுதெல்லாம் குழந்தைப்பருவம் என்பது முதல் பத்து, பன்னிரண்டு ஆண்டுகள் வரை நீடித்திருந்தது. அதுவரை அவர்களுக்கென்ற ஒரு தனிப்பட்ட இடம் தேவையில்லாமல் இருந்தது. இப்போது அப்படியில்லை. ஒரு ஐந்து வயது சிறுமியைஃசிறுவனைக் குழந்தையாக நடத்துவதும் கொஞ்சுவதும் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. நம்மிடமிருந்த குழந்தைத்தனத்தை இப்போது காணமுடியவில்லை, இப்படிப்பட்ட மனநிலையை நாம் ஊக்குவிக்கக் கூடாது என்பது சுயநலத்தின் உச்சக்கட்டம். ஒரு தனிப்பட்ட உயிரின், தலைமுறையின் மனவளர்ச்சியை உள்வாங்கிக்கொள்ள முடியாத, முயலாத விட்டேத்தித்தனம் என்றே நான் நினைக்கிறேன்.
சமூக வலைத்தளங்களில் வாசித்த இந்த காணொளியைப்பற்றிய கருத்துகள் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. மாயா அம்மாவின் சாதிக்காரர் அவள் கன்னத்தைக் கிள்ளியிருந்தால், ஒரு பணக்காரர் கிள்ளியிருந்தால், அல்லது ஒரு பிரபல நடிகரோ நடிகையோ கிள்ளியிருந்தால் அவர் இப்படிச் சொல்லியிருப்பாரா, பெண்ணிய சிந்தனை முற்றியதின் விளைவோ என்றெல்லாம் வர்ணங்கள் பூசப்பட்ட கேள்விகள். கேள்விகள் கேட்டுக்கொள்வது சரிதான், ஆனால் இதில் முதலில் கேட்கப்பட வேண்டிய கேள்வி, யார் அந்த குழந்தையின் கன்னத்தைக் கிள்ளினார் என்பதல்ல, அந்தக் குழந்தைக்கு அப்படிக் கொஞ்சியது பிடித்திருந்ததா இல்லையா, அந்த குழந்தை அதை எப்படி உணர்ந்தது என்பதுதான். எனக்கும் தனிப்பட்ட முறையில் குழந்தைகளை அணைத்து, முத்தமிட்டுக் கொஞ்சுவது பிடிக்கும். ஆனால் இன்றைய பல குழந்தைகளுக்கு அது பிடிப்பதில்லை என்பதை நான் சில நேரங்களில் உணர்ந்து விலகியிருக்கிறேன். இது காலத்தின் மாற்றம்.
ஒருவேளை அந்த குழந்தை அந்த பாட்டி கொஞ்சியதைப்பற்றி தன் அம்மாவிடம் குறை கூறாமல் இருந்திருந்தால், அந்த அம்மாவே இதுபோன்ற எண்ணத்தை அந்தக் குழந்தைக்கு விதைத்திருந்தால் அல்லது அந்த செயலுக்காக அந்த பாட்டியிடம் மரியாதையில்லாமல் நடந்து கொண்டிருந்தால் இதைப் பற்றி வேறு விதமாக விவாதம் செய்திருக்கலாம். காலகாலமாய் குழந்தைகளை வளர்த்துக்கொண்டுதானே இருக்கிறோம் இதில் புதிதாகக் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்ற கேள்வி முட்டாள்தனமானது. இன்றைய சூழலில் ஒரு பெற்றோராக ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்துகொண்டே இருக்கிறது. எல்லாமே எல்லாருக்கும் பொருந்துவதுமில்லை. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது அப்படியே ஒவ்வொரு பெற்றோரும்.
இன்றைய சமூக வலைத்தளம் பெரும்பாலும் எழுத்தாளர்களும், சமூக ஊடக செல்வாக்காளர்களும் நாட்டாமை செய்யும் கட்டைப் பஞ்சாயத்தாகத்தான் இருக்கிறது. ஒரு முக்கியமான சமுதாயப் பிரச்சனையை அணுகும்போது கூட அவரவர் தங்களின் எழுத்து ஆளுமையையும்,அறிவாளுமையையும் நிலை நிறுத்திக்கொள்வதிலேயே கவனம் செலுத்தி அந்த பிரச்சனையின் உண்மையான சாரத்தை நீர்த்துப்போகச் செய்துவிடுவது வருத்தத்திற்குரியது. இங்கே ஒரு தரப்பை மட்டும் குறை கூறுவதும் நியாயம் இல்லைதான். எழுத்தாளர்களுக்கும், செல்வாக்காளர்களுக்கும் இருக்கும் அதே சமூகப் பொறுப்பு அவர்களை பின் தொடர்பவர்களுக்கும் இருக்கிறது. அவர்கள் பின்தொடர்பவர்கள் எவ்வளவு ஆளுமை வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஒவ்வொரு விஷயங்களிலும் அவர்கள் முன் வைக்கும் கருத்தைப் பகிர்வதற்கு முன் அதன் நம்பகத்தன்மையையும், உண்மைத் தன்மையையும் கண்டறிந்து சிந்திக்க வேண்டும்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
762 total views, 3 views today