மூன்று மூதாட்டிகள்.

பேராசிரியர்.சி.மௌனகுரு.இலங்கை.

கடந்த மாதம் மட்டக்களப்பின் வடபகுதி நோக்கிப் பயணமானேன் வாகரை மகா வித்தியா லயத்திற்கும்.மூதூரில் அமைந்துள்ள இலங்கை துறை மகா வித்தியாலயத்துக்கும், தம்பல காமம் ஆதி கோணேசர் வித்யாலயத்துக்கும் செல்ல வேண்டி இருந்தது. அந்த அனுபவங்கள் நினைத்து மகிழ் வதற்குரியவை.

இலங்கை துறைமுக மகா வித்தியாலய அனுபவம். அந்த அனுபவங்களை இங்கு முதலில் பகிர்கிறேன் அது உங்களுக்கும் பல தகவல்களைத்தரும். போகும் வழியில் கிடைத்த புதுபுது அனுபவத்தைப் பகிர்கிறேன்.

இலங்கைத் துறைமகா வித்தியாலயம் கடற்கரை ஓரமாக அமைந்திருந்த ஒரு பெரிய வித்தியாலயம் ஆகும்.மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்குச் செல்லும் வழியில், பிரிந்து 13 மைல் தூரம் உள்ளே சென்று அந்த கொழும்பு துறை வித்தியாலயத்தை அடைய வேண்டும். செல்லும்போது இந்தத் தூரக் கணக்கு எனக்கு தெரியாது அருகில் தானே என எண்ணியிருந்தேன். வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி அந்த மகா வித்தியாலயத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்று அங்கே இருந்தவர்களை வினவினோம்.

கிராமிய மூதாட்டிகளின் விழிப்புணர்வும், அந்தப் புது அனுபவமும்:

அங்கு கடையில் நின்ற ஒரு பெண். அவனது பெயர் அரசம்மா. ஒரு வயது போன மனுஷியைச் சுட்டிக்காட்டி “இந்த ஆச்சி யை ஏற்றிக் கொண்டு போங்கள் அவர்களின் வீட்டின் அருகில் தான் அந்த வித்யாலயம்” என்றார்

நல்ல வாயாடி மனுஷி அவள். அவனுடைய பேரம் பேசல் அழகாக இருந்தது.ஞாயமாக இருந்தது ஏற்றிப் போவதற்கு கூலி இடத்தை காட்டுவது இதுதான் அந்த பேரம். சரி என அவரை ஏற்றப் போக அவரோடு இன்னொரு பெண்ணும் ஏறிக் கொண்டார்.அவரோடு இன்னொருவரும் ஓடி வந்து. ஏறினார் மொத்தமாக மூன்று பெண்கள்.

காரோ சிறிய கார் அவர்களை இறங்கச் சொல்லவும் மனம் வரவில்லை. பேரத்தில் என்னை அரசம்மா வென்று விட்டாள். என்ன இது அரசம்மா ஒருவரைத்த்தானே சொன்னாய். இப்போது மூவர் ஆகி விட்டார்கள் என்றேன். பாவம் ஐயா என்று என் இரக்கத்தை அவள் சாதகமாக்கி கொண்டாள்.

பிரதான வீதியில் கடை வைத்திருக்கும் அவள் விரையில் அந்த கடையைப் பெரிதாக்கி விடுவாள். அத்தனை கெட்டித்தனம் அவளிடம் காணப்பட்டது. காரில் ஏறியவர்கள் மூவரும், பார்வைக்கு வயது போன வர்கள் மாதிரி இருந்தார்கள. செல்லும்போது அவர்களின் பெயர்களை வினவினேன்.

ஒரு பெண்ணின் பெயர் வசந்தா தேவி அவருக்கு வயது 58,இன்னொரு பெண்ணின் பெயர் லட்சுமி வயது 65,மற்றும் ஒரு பெண் மோகனவதனி வயது 68, மூவர்முகத்திலும் முதுமைதெரிந்தது. கஷ்டமான வாழ்க்கையின் அனுபவ ரேகைகள் தெரிந்தன.

உங்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனை பிள்ளைகள்? என வினவினேன். ஒவ்வொருத்தருக்கும் ஏழு பிள்ளைகள் இருந்தனர். பேரப் பிள்ளைகளும் இருந்தனர். பெற்று வளர்த்த ஆயாசம் அவர்கள் உடலிலும் பேச்சிலும் தெரிந்தன. அரை மணி நேரப்பயணம்.உரையாடல் தொடர்ந்தது.கார் சென்று கொண்டிருந்தது, இன்னும் தூரமா இன்னும் தூரமா என்ற கேள்விக்கு, தூரம் என்ற விடை தான் அடிக்கடி கிடைத்துக் கொண்டிருந்தது. உரையாடல் தொடர்ந்தது

உரையாடலில் மனத் தடைகள் அகல அனைவரும் கலகலப்பாக அவர்கள் மனம் திறந்து உரை யாடத் தொடங்கினார்கள்.

எங்களுக்கு இதிலே ஏறப் பயம்” என்றார்கள்.
ஏன் என்று கேட்டேன்.

எங்கேயாவது கொண்டு சென்று விடுவார்கள் “ஐயா காலம் கெட்ட காலம் ஐயா „ எனறு அவர்களுள் ஒருவர் கூறினார்.
நீங்கள் வயது போனவர்கள் அல்லவா? உங்களுக்கு ஏன் அந்தப் பயம். இளமாக்கள் என்றால் அந்தப் பயம் நியாயம் என்றேன்.
இல்லை ஐயா எங்களைக் கடத்திக் கொண்டு சென்று உடலுக்குள் இருக்கும் கிட்னியை எடுத்து கொண்டு விடுவார்கள். என்றாள் அந்தப் பெண். போகும் வழியில் பல கிராமங்களைக் கடக்க வேண்டி இருந்தது. விவசாயம், தோட்டம், மீன்பிடி, என்ற தொழில் சார்ந்த கிராமங்கள். ஒவ்வொன்றைப் பற்றியும் அவர்கள் சுவராஸ்யமான கதைகள் கூறிக் கொண்டு வந்தார்கள். அத்தகவல்கள் எனக்கு புதிய வாழ்க்கைளைக் காட்டின,ஒருவகையில் அவர்கள் எனக்கு வகுப்பு எடுத்தார்கள். நான் அவர் களிடம் நிறையக் கற்றுக் கொண்டேன்.

புன்னையடியில் இறங்கிக் கொண்டார்கள். வீட்டுக்கு வந்து தேத்தண்ணி குடிக்க விட்டு போகலாமே என்றார்கள். அன்பு அந்த வார்த்தையில் தெரிந்தது:
ஒரு கண நேரத்துக்குள் கிராமிய மூதாட்டிகளின் விழிப்புணர்வு, ஊர் பற்றிய அறிவு,அன்பான உபசரிப்பு
என்பனவற்றை கண்டு கொண்டேன். அவர்களில் யாரும் படித்திருக்கவில்லை. பள்ளிக்கூடம் சென்றிருக் கவில்லை. அந்த வாய்ப்பை இந்தச் சமூகம் அவர்களுக்கு தந்திருக்கவில்லை. ஆனால் அவர்களிடம் கற்றோருக்கான அறிவும் அனுபவமும் மேலாக அன்பும் நிறைந்து இருந்தது.

காரை விட்டு இறங்கிய அவர்கள் அழகாக இளம் பிள்ளைகள் போல கையசைத்து விடை தந்தார்கள்.

486 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *