எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எல்லையற்ற அன்பின் அரவணைப்பில் வாழும் கணங்கள் ஏற்படுத்தும் நல்லதிர்வுகளின் ஒற்றைக்கீற்று எங்கோ வாடும் ஓர் மனதை வருடி மகிழ்விக்க வழி சமைக்கும் என்றால் தெய்வம் உண்டென்று நம்பும் பிரார்த்தனை என் உள்ளத்தைத் தழுவுகிறது. அபிநயக்ஷேத்ராவின் பயணம் யாவிலும் நிறைந்து ஒழுகிய கணங்கள் யாவும் அப்படித் தான் இனிமை சேர்த்தன.
அன்பென்று கொட்டு முரசே அதில் அத்தனை பெரும் நிகராம். இன்று அபிநயக்ஷேத்ராவின் பத்து வயது குழந்தை கூறுகிறது பேதைமை வேண்டாம். அன்பு தான் பெரிதென்று. ஆஹா இட்ட மூலதனம் பன்மடங்காய் பெரும் சொத்தாகிக் கிடைப்பதைக் காண்கிறேன். மெய் மட்டுமே உறையும் குழந்தை மனங்களிடையே மொய்த்துக்கிடக்கும் நல்லெண்ணங்கள் நாளை நம் தேசத்தின் சொத்து. இவ்வுலகத்தின் சொத்து.
இம்மாதம் அபிநயக்ஷேத்ராவின் இரு அரங்கேற்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. ஒன்று , இலங்கைத் திருநாட்டின் புகழ் பாடி “தொன்மாவிலங்கை ” என்னும் கருப்பொருளுடன் கூடிய புதிய மார்க்கம். மற்றையது, “நாயகி ” என்னும் கருப்பொருளில் பல்வேறு பட்ட நாயகிகள் சித்தரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு அரங்கேற்றமும் கடும் உழைப்பின் வெளிப்பாடே. பதினேழு வருட காலத்திற்குள் பதினாறு அரங்கேற்ற நிகழ்வுகளை தொட்டுவிட்ட இத்தருணத்தில், அரங்கேறிய மாணவர்கள் அனைவரையும் அகமேற்றி ரசிக்கிறேன் நன்றியுடன்.
தொன்மாவிலங்கை அரங்கேற்றத்தினை காவியா திலீபன் வழங்குகிறார். காவியா ஆறு ஆண்டுகளாக அபிநயஷேத்ராவில் ஆடல் பயின்று அரங்கேறுகிறாள். கலைகளின் மீது காவியாவிற்கும் அவளது பெற்றோர்க்கும் இயல்பிலேயே மிகுந்த ஈடுபாடு இருந்தது இறையருள்.
பதினொரு வயதே நிரம்பிய காவியாவிடத்தே உள்ள பொறுமையும், புரிந்துணர்வும், குழந்தமையும், உழைப்பும், அவளது பெற்றோர்கள் அள்ளித்தந்த அன்பும், நம்பிக்கையும், ஒத்துழைப்பும் இனிமையும் இன்பமும் சேர்த்திட,
குருநாதர் பேராசிரியர் ஊ.ஏ.சந்திரசேகர் ஐயாவின் முன் ஆடல் சமர்ப்பணம் வழங்கி ஆசிபெற்று, தில்லை சிதம்பரநாதனின் அருள் பெற்று, புண்ணிய ஸ்தலங்கள் பலவற்றில் தரிசனம் பெற்று, இந்தியக் கலைஞர்கள் பலரது திறன்சேர்க்கையில் இந்த அரங்கேற்றம் நிகழ்கிறது. இத்தகு நிறை மகிழ்வு தரும் வகையில் அரங்கேற்றப் பயிற்சிக்காலம் அமைவது அரிதே. படைப்பின் பேரருள் உணர்கிறோம்.
நெடுங்கனவின் நிறைவேற்றமாக களிகூட்டி மலர்கிறது ரிஷிகேஷா செம்பையாவின் ”நாயகி“ அரங்கேற்றம். அபிநயஷேத்ராவோடான அனுபவங்களும்,பகிர்ந்து மகிழ்ந்த பெரும் பொருள் விடயங்களும், இணையற்ற பொழுதுகளும், ரிஷிக்கு விண்வாழ்வினைப் பரிசளிக்கும் என்பதில் ஐயமில்லை.
எட்டு வருடங்களாக அதிக பொறுமையுடன் நடனம் பயிலவும் அபிநயஷேத்ராவின் பல நிகழ்வுகளில் பங்குபெறவும் பெருந்துணையாக நின்ற ரிஷயின் பெற்றோர்க்கு எம் நன்றிகளும் பேரன்பும். ஆய்ந்தறியும் பண்பும், பணிவும் நிறைந்த ரிஷியின் ஆடல் அணுகுமுறை தனித்துவமானது. அவள் விருப்புணர்ந்து வடிந்தது “ நாயகி “ மார்க்கம்.
இசையாகி இருளகற்றும் மதிப்பிற்குரிய ராஜ்குமார் பாரதி ஐயாவின் அருந்துணை ரிஷிக்கும் காவியாவிற்கும் அமைந்தது பெரு வரம். இலங்காபுரியைப் போற்றி, நம் தாய் நாட்டின் புகழ் பாடி “தொன்மாவிலங்கை “ நாட்டிய மார்க்கம் அமைக்கும் எண்ணத்தினை வியந்து வாழ்த்திப் பாராட்டி பொழிந்த இசையில் வழிந்தது விழிநீர். அதே போல, முப்பெரும் தேவிகள், கொற்றவை, மாதவி முதல் ருக்மிணி தேவி அம்மா வரை, சீதா, நீலமலை, ஆண்டாள், பாஞ்சாலி எனத் தொடுத்த நாயகியாரின் பாத்திரமுணர்ந்த காத்திர இசை தந்தார்.
மகா குரு பேராசிரியர் சந்திரசேகர் ஐயாவின் அடிற்றி அரங்கேறும் அபிநயக்ஷ்டிரா மாணவிகள் நம் தமிழர் தம் பெருமையை பேணிட வந்த செல்வங்கள் என்றே எண்ணத் தோன்றும். ஆய்ந்து, ஆழ்ந்து,தோய்ந்து,தொலைந்து, வியந்து படைத்த அபிநயக்ஷேத்திராவின் மார்க்க உருப்படிகள் பலதும் அகில மகிழ்வு தரும் வண்ணம் காலம் கடந்து சந்ததிகளுக்கு கடத்தப்படும். உரியோர், உணர்வோர் பயனுறுவர். மொத்தமாய் சரணடையும் போது முத்தமிட்டது தழுவிக்கொண்டு நற்கலைச்செயல் பல புரிய என்னைத் தேர்ந்தெடுத்த படைப்பின் மீது மீண்டும் மீண்டும் காதல் கொள்கிறேன். “ உலகளந்த நாயகி தாள் உரைப்பாய் நெஞ்சே”
601 total views, 3 views today