உங்களிடம் இருந்து விடைபெறுவது விமல் சொக்கநாதன்.
விடைபெற்ற எங்கள் ஈழத்து மூத்த வானொலியாளர் விமல் சொக்கநாதன்
- கானா பிரபா அவுஸ்திரேலியா
ஈழத்தின் மூத்த வானொலிப் படைப்பாளி விமல் சொக்கநாதன் அவர்கள் ஆகஸ்ட் 1 ஆம் திகதி அகால மரணத்தைத் தழுவிக் கொண்டதை அதிர்ச்சியோடு ஒட்டுமொத்தத் தமிழ் உலகமே எதிர்கொண்டது.
ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் பிறந்த விமல் சொக்கநாதன் அவர்கள் இலங்கை வானொலியின் சிறுவர் மலர் நிகழ்ச்சி வழியாக 1959 ஆண்டு வானொலிக் கலையகத்தில் நுழைந்தவர் என்ற தகவலைப் பகிர்ந்து கொண்டவர் அவரின் வானொலிச் சாகபாடி திரு பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள்.
இலங்கையில் சட்டம் பயிலும் மாணவராக வானொலியின் தேசிய சேவையில் பகுதி நேரக்கலைஞராக இணைந்த விமல், சட்டக்கல்வியை முடித்த பின்னரும் 1971 இல் இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் முழு நேரத்தயாரிப்பாளராக இணைந்து கொண்டார். 1971 ஆம் ஆண்டில் இருந்து 1976 ஆம் ஆண்டு வரையான குறுகிய காலப் பகுதியிலேயே சங்க நாதம், வாலிப வட்டம், இசையும் கதையும் போன்ற நிகழ்ச்சிகளின் வழியாக தமிழ் நெஞ்சங்களின் பேரபிமானம் பெற்ற அறிவிப்பாளராக விளங்கினார். பின்னாளில் புகழ் பூத்த பெரும் படைப்பாளிகளின் கதைகளை இசையும் கதையுமாக அரங்கேற்றிப் பெரும் புகழைச் சம்பாதித்தவர்.
வி.ஏ.அப்துல் கபூர், கே.எஸ்.நடராஜா (ஞானக்கவிஞர் நாவற்குழியூர் நடராசன்) போன்ற மூத்த வானொலி ஆளுமைகளைத் தன் குருவாக நேசித்தவர். அவுஸ்திரேலியாவில் நம்மிடையே வாழ்ந்த இலங்கை வானொலி ஆளுமை திருமதி பொன்மணி குலசிங்கம் (இலங்கை வானொலித் தமிழ்ப் பகுதி முன்னாள் இயக்குநர்) அவர்களை மிகுந்த பயபக்தியோடு எதிர்கொள்வார். இலண்டன் பிபிசி தமிழ்க் குடும்பத்தில் தன்னை இணைத்து, உலகத் தமிழ் ஒலிபரப்பில் புடமெடுத்துப் பிரகாசிக்க வைத்த “தமிழ் மாகடல் சங்கரண்ணா” என்ற தமிழோசை சங்கர் என்ற சங்கரமூர்த்தியைத் தன் வாழும் காலம் தோறும் நேசித்தவர் என்பதற்கு அவரது ஒவ்வொரு பேட்டிகளும் சான்று.
இசையும் கதையும் நிகழ்ச்சியில் அவர் குறித்த கதை சொல்லியாகவும், பாத்திரமாகவும் மாறி மாறிப் பயணிக்கும் உத்தியை வெகு சிறப்பாக வேறுபடுத்திக் காட்ட வல்லவர். இவரும், அப்துல் ஹமீதுமாக இசையும் கதையும் நிகழ்ச்சிக்காகப் பாடல்கள், சிறப்புச் சப்தங்கள் கொண்ட ஒலிப் பேழைகளோடு மிகவும் சிரத்தையாகச் செய்து முடித்த களைப்பில் வானொலிக் கலையகத்தை விட்டு வெளியேறும் போது “என்ன இசையும் கதையும் ஒலிப்பதிவா?” என்று கேட்பார்களாம். அவ்வளவுக்கு முகம் அழுது வடிந்த நிலையில் குறித்த படைப்பின் சோகப் பாத்திரமாக மாறி விடுவார்களாம்.
இலங்கை வானொலி நேர்முகப் பரீட்சையில் தனக்குக் கிடைத்த நிரந்தர அறிவிப்பாளர் பதவியை புவனலோஜினி (வேலுப்பிள்ளை) நடராஜசிவம் என்ற புதியவருக்குக் கொடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி விட்டு, ஒலிபரப்பு ஒழுங்கு உதவியாளராக விமல் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டது அவரின் பெருந்தன்மைகளில் ஒன்று என்று இவர் வாழும் காலத்திலேயே தன்னருகில் வைத்துக் கொண்டு அப்துல் ஹமீத் அவர்கள் நெகிழ்ந்திருக்கிறார்.
விமல் சொக்கநாதனின் “வாலிப வட்டம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்கள் பின்னாளில் இலங்கைப் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாகவும் விளங்கிய தலைமைத்துவப் பண்பைக் கொண்டதுவும், அவர்களோடு இன்னும் அந்த நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்த நேயர்கள் இன்று தாத்தா நிலையிலும் விமலின் ரசிகர் என்று பெருமையோடு சொல்லிக் கொள்வதாகவும் அப்துல் ஹமீதோடு, விமல் சொக்கநாதன் கலந்து கொண்ட ஐபிசி நேர்காணலில் சொல்லி மகிழ்ந்தார்.
‘அறிவிப்பாளரோடு அரை மணி நேரம்” என்ற புதுமையான இலங்கை வானொலி நிகழ்ச்சி வழி, சக அறிவிப்பாளர்களையும் அவர்களை நேசிக்கும் நேயர்களையும் கலந்துறவாட வைத்து மகிழ வைத்ததும் விமல் சொக்கநாதனின் இன்னொரு பரிமாணம். 1976 ஆம் ஆண்டு லண்டனில் குடியேறிய விமல் சொக்கநாதன் அங்கு தனது சட்டத்தரணியான துணைவியார் சகிதம் ஒரு சட்ட நிறுவனத்தை நடத்தி வந்திருந்தார்.
விமல் சொக்க நாதன் அவர்களின் வானொலி வேட்கைக்குத் தீனி போட்டது லண்டன் பிபிசி.
லண்டன் பிபிசியின் தமிழோசையில் பகுதி நேரமாக நிகழ்ச்சி வழங்குனராகவும் பணியாற்றி வந்தார். இலங்கை வானொலியில் பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கிவந்த விமல் சொக்கநாதனுக்கு பிபிசியில் செய்தி ஒலிபரப்புப்பணி. அவர் ஆரம்பத்தில் பணிபுரிந்த சட்ட நிறுவனத்தின் இயக்குநர், தன்னிடம் சட்ட உதவிகளைத் தேடி வரும் தமிழர்களுக்கு “இவர் பிபிசியில் வேலை செய்கிறார்” என்று பெருமையாக விமல் சொக்கநாதனை அறிமுகப்படுத்துவாராம். சிறந்த அறிவிப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் தனது சக ஒலிபரப்பாளர்களால் அங்கு அவர் பாராட்டப்பட்டார்.
இலங்கை வானொலியில் குறுகிய காலத்தில் பெரும் நேயர் வட்டத்தை உருவாக்கியவர். பின்னர் பிபிசி தமிழோசை கேட்கும் உலகத் தமிழ் நெஞ்சங்களின் இதயத்தில் மட்டுமல்ல. ஈழத்தில் போர் முற்றிய நெருக்கடியான சூழலில் அவரது குரலை மின்சாரமில்லா இரவுகளில் ஈழத்தாயகத்தில் உள்ளோர் மறுபக்கச் செய்திகளைக் கேட்பதற்காகத் தவம் கிடந்ததெல்லாம் வரலாறு.
பிரான்ஸை மையப்படுத்திய வுசுவு வானொலி மற்றும் தொலைக்காட்சி, TTN தொலைக்காட்சி, GTV தொலைக்காட்சி, IBC தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகிய ஊடகங்கங்களும் அவரது வானொலி அறிவுச் சொத்தை உள்வாங்கிப் பயன்படுத்திக் கொண்டார்கள். “மனதைத் திறவுங்கள்” நிகழ்ச்சி வழியாகவும், ஐபிசி சிற்றலை ஒலிபரப்பின் வழியே ஈழத்துக்கு உறவுப்பாலம் அமைத்த “களம் பல காண்போம்” நிகழ்ச்சி வழியாகவும் ஈழத்து மண்ணில் தன் வேரைப் பரப்பினார். அதன் விளைவாக வன்னிக்கு விருந்தினராய் அழைக்கப்பட்டு, ஒரு வாரம் சிறப்பு வானொலி வழிகாட்டல் பயிற்சி நெறியை வன்னியில் உள்ள ஊடகருக்கு வழங்கவும் பயணப்பட்டு அப்பணியைச் செம்மைப்படுத்தினார்.
லண்டனில் வாழும் மூத்த பத்திரிகையாளர் ஈ.கே.ராஜகோபாலின் புதினம் பத்திரிகையிலும் பின்னாளில் தன் இறப்பு நேரும் வரை வீரகேசரியிலும் “விமலின் பக்கம்” என்ற தொடரின் வழியாகவும் யேர்மனியில் இருந்து வெளிவரும் வெற்றிமணி பத்திரிகையிலும் சமூக நடப்புகளைத் தன் பாணியில் கொடுத்து வந்தார். 2007 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட “வானொலிக் கலை” என்பது ஒவ்வொரு ஒலிபரப்பாளன் வீட்டிலும் இருக்க வேண்டிய ஆகச் சிறந்த கையேடு. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பொருள் நிறைந்த வழிகாட்டியாகக் கொண்டு போவார். அந்த நூல் வெளியீட்டு விழாவை சென்னையில் இருந்து, கனடா, சிட்னி காண எடுத்திருந்தார். விமலின் பக்கங்கள் என்ற நூலைத் தொடர்ந்து ‘இலண்டனில் இருந்து விமல்” என்ற நூல் எங்கள் விமல் சொக்க நாதன் அவர்களது நிறைவான பங்களிப்பாக அமைந்து தன் தாயத்திலும் விழாக் கண்டு விடைபெற்றுக் கொண்டார்.
“அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்”
பாடல் தன்னை ஈர்த்ததொன்றாகத் தன் வாழ்வியல் பயணத்தை ஒப்பிட்டுப் பார்க்க வைத்ததாக இலங்கை வானொலி “தென்றல்” அதிதியாகப் போன போது விமல் சொக்கநாதன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
அதே பாடலில் வந்து போகும் “நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்”
என்று வாழ்ந்து மறைந்த நம் வானொலிக் குயில்களை நினைத்து மனம் பாடுகிறது. காற்றில் கலை படைத்துக் காற்றலையில் சங்கமமாகிய எங்கள் விமல் அண்ணா என்ற விமல் சொக்கநாதன் அவர்கள் உலகத் தமிழ் ஊடகப் பரப்பில் அவர்கள் அழியாச் சொத்தாக விளங்கி நிற்பார்.
922 total views, 2 views today