நம்பிக்கை நீர்த்துப் போகும் போதுதான் அடுத்தவர்களுடன் ஒப்பீடை செய்யத் தொடங்குகிறது மனம்.
-சேவியர்
அலை வேகமாக ஓடி வருகிறது அதை எதிர்கொண்டு ஓடிப் போகிறான் ஒரு சிறுவன். அலை அவனைப் புரட்டிப் போடுகிறது. சத்தமாய்ச் சிரிக்கிறான். உடலெங்கும் உப்புத் தண்ணீர். உள்ளே ஓடிய அலை மீண்டும் அவனைத் துரத்துகிறது, அவன் உற்சாகக் கூக்குரலுடன் அதை எதிர்கொண்டு ஓடுகிறான். ஒரு பந்தயக் குதிரையை அடக்கி விடும் முனைப்புடன் அலையின் முதுகில் தாவுகிறான். மீண்டும் விழுகிறான், எழுகிறான், ஓடுகிறான். அலைகளோடான அவனுடைய விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
வாழ்க்கையும் இந்த அலை விளையாட்டில் அடங்கி விடுகிறது. விழுகின்ற மறு கணத்தில் எழுந்து ஓடும் சிறுவனைப் போல வெற்றியாளர்கள் தங்களுடைய பயணத்தை மீண்டும் மீண்டும் அலைகளோடு தொடர்கிறார்கள். அழுது கொண்டல்ல, உற்சாகக் கூக்குரலுடன். முயற்சியின் வெற்றிக் கணத்தில் அவர்கள் அந்த அலைகளைத் தாண்டி உள்ளே செல்கிறார்கள். அப்போது கடல் தனது பிரம்மாண்டத்தை அமைதியாய் அவர்களிடம் சமர்ப்பித்து விடுகிறது. அலைகளைக் கண்டு அச்சத்துடன் ஒதுங்கி விடுபவர்கள் கிளிஞ்சல்களைப் பொறுக்கிக் கொண்டு வீடு திரும்புகிறார்கள். மூழ்குபவர்கள் மட்டுமே முத்தெடுக்கிறார்கள்.
நதி தனது பயணத்தில் எதிர்படும் எதைக் கண்டும் அஞ்சுவதில்லை. முட்கள் கிழித்து விடுமென கலங்குவதில்லை. ஈரக் கால்களில் பாறைக் கற்கள் மோதுமே என தயங்குவதில்லை. அஞ்சாமல் முன்னேறும் போது கூர்மையான கற்கள் கூட எதிர்ப்பு முட்களை விரைவிலேயே உதிர்த்து விட்டு கூழாங்கற்களாய் மாறுகின்றன. ஓடும் நதி அருவியில் விழுகிறது. விழுகின்ற இடத்தில் காலொடிந்து கிடப்பதில்லை நதி. அதன் ஆக்ரோஷமே அந்த வினாடியில் தான் ஆரம்பமாகிறது.
தண்ணீருக்குப் பயந்து நீச்சலை நிராகரிப்பவர்களும், விழுந்து விடுவோமோ எனும் அச்சத்தில் சைக்கிளைத் தொடாதவர்களும் பயணத்தைத் தொடர முடியாது. அவர்களுடைய வாழ்க்கை காலொடிந்த கிணற்றுத் தவளையாகவே நொண்டியடிக்கும். அச்சம் உங்கள் கால்களைப் பிடித்து இழுக்கும் போது, நம்பிக்கை எனும் கைகள் கொண்டு வெளிச்சத்தை இழுத்து எடுங்கள். அச்சம் என்பது புதை குழி, நம்பிக்கை என்பது விதை குழி ! விளக்கைக் கொளுத்தி குடத்தால் மூடி வைத்தால், வெளிச்சம் வெளிவருவதும் இல்லை. விளக்கு தொடர்ந்து எரிவதும் இல்லை.
உங்கள் மீதான நம்பிக்கையே உங்கள் வெற்றிக்கான முதல் சுவடு. எத்தனை அடர்த்தியான இருட்டையும் ஒரு சின்ன வெளிச்சம் விரட்டி விடும். எத்தனை இருட்டுகள் வந்து மோதினாலும் ஒரு வெளிச்சம் அணைந்து போவதும் இல்லை.
“உனது வேலை குறை சொல்வது, எனது வேலை சிலை செய்வது”
ஒரு சிற்பி இருந்தான். ஒரு முறை அவனிடம் சென்ற ஒருவர் சிற்பத்தின் மூக்கு சரியில்லை, காது சரியில்லை என குறை கூறிக்கொண்டே இருந்தார். சிற்பியோ எதையும் காதில் வாங்காமல் செதுக்குவதிலேயே குறியாய் இருந்தார். குறை சொன்னவருக்கு கோபம் வந்து விட்டது. ‘இவ்வளவு சொல்றேன் பதிலே சொல்லலையே’ என்றார். சிற்பி சொன்னார், “உனது வேலை குறை சொல்வது, எனது வேலை சிலை செய்வது. அவரவர் வேலையை அவரவர் சிறப்பாய் செய்கிறோம். அவ்வளவு தான்’. குறை சொன்னவர் வந்த வழியே போனார்.
சிற்பி தன் மேல் வைத்த நம்பிக்கை சிலையில் தெரிந்தது. அடுத்தவர்கள் எதிர்பார்ப்பது போல சிலையை வடிவமைக்க நினைத்தால் தோல்வியே மிஞ்சும். அல்லது சிலை சிற்பிக்குப் பிடிக்காமல் போய்விடும். சிற்பியின் சிலை பிறருக்குப் பிடிக்காமல் போவது சகஜம், ஆனால் சிற்பிக்கே பிடிக்காமல் போவது துயரம் !
சிலை என்பது வாழ்க்கை. அதைச் செதுக்கும் சிற்பி நாம். நமது வாழ்க்கையை நாம் தான் செதுக்க வேண்டும். அடுத்தவர்களுடைய பாராட்டுக்காகவோ, விமர்சனத்துக்காகவோ நமது வாழ்க்கையை மாற்றத் துவங்கினால் தோல்வி அங்கே ஆரம்பமாகிவிடும். அடுத்தவர்கள் நமது வாழ்க்கைக் கப்பலை ஓட்டும் சுக்கானாகவோ, நமது பயணத்தை நிறுத்தும் நங்கூரமாகவோ ஏன் இருக்க வேண்டும் ? நம்பிக்கை மனிதர்கள் தங்கள் வாழ்க்கைப் பட்டத்தின் நூலை தங்கள் கைகளில் தான் வைத்திருப்பார்கள்.
நம்பிக்கை நீர்த்துப் போகும் போது தான் அடுத்தவர்களோடான ஒப்பீடை செய்யத் துவங்குகிறது மனம். அடுத்தவன் என்னை விட உயர்வானவன் என நினைப்பது மட்டுமல்ல, அடுத்தவன் தன்னை விடத் தாழ்ந்தவன் என நினைப்பது கூட தவறான அணுகுமுறையே. ஒன்று தாழ்வு மனப்பான்மை, இன்னொன்று அகந்தை மனப்பான்மை. இரண்டுமே நமக்குத் தேவையில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம், ஒவ்வொரு திறமை, ஒவ்வொரு வாழ்க்கை முறை. அரளிச் செடியில் ஆம்பல் முளைப்பதில்லை. வெள்ளரிக் கொடியில் திராட்சை விளைவதில்லை. ஒவ்வொரு பூவும், ஒவ்வொரு கனியும் அதனதன் இயல்பிலிருந்தே விளைகின்றன. புல்லாங்குழலுக்குத் தான் துளைகள் தேவை, மிருதங்கத்துக்கு அல்ல. ஐயோ எனக்கு துளைகள் இருக்கிறதே என புல்லாங்குழல் புலம்பலாமா ? அல்லது எனக்குத் துளைகள் தான் வேண்டும் என மிருதங்கம் முரண்டு பிடிக்கலாமா ?
அடுத்தவர் இயல்பில் நுழைய முயன்றால் தோல்வியே மிஞ்சும். நீரில் வாழ்வது மீனின் இயல்பு, நீரில் தான் வாழ்வேன் என மான்கள் நினைத்தால் அழிவு. எனவே அடுத்தவரோடு உங்களை ஒப்பீடு செய்யாதீர்கள். உங்களை நீங்களே அங்கீகரியுங்கள். நீங்கள் எப்படி இருந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். காலையில் கண்ணாடியில் தெரியும் உங்கள் முகம் உங்களுக்கு உற்சாகத்தைத் தந்தால், அன்றைய தினம் முழுவதும் உங்களுடைய பயணம் இனிமையாய் இருக்கும்.
அனுபவம் ஆசான் என்பார்கள் உண்மை தான். அதற்காக ஒவ்வொரு தோல்வியையும் அனுபவித்துத் தான் கற்க வேண்டுமென்பதில்லை. தனது தோல்விகளிலில் இருந்து பாடம் கற்பவன் புத்திசாலி. அடுத்தவர் தோல்விகளிலிருந்து பாடம் கற்பவர் அதி புத்திசாலி. தோல்விகள் உங்களுக்குப் பாடங்கள் தான் சொல்லித் தரவேண்டுமே தவிர, பயங்களை அள்ளித் தரக் கூடாது. தோற்காத மனம் வெற்றிகளை ரசிப்பதில்லை. வெயிலே இல்லாத தேசத்தில் நிழலுக்கு என்ன மரியாதை ?
வெற்றி என்பது சிகரத்தை அடைவதில் அல்ல. அந்த சிகரத்தை நோக்கிய பயணத்தில் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பயணத்தில் கிடைக்கும் சுவாரஸ்யமான மலர்களின் சங்கமமே வெற்றி எனும் மாலை. இலக்கை நோக்கிய ஓட்டமே ரசிக்கப்பட வேண்டிய விஷயம். அப்போது தான் ஒவ்வொரு கணமும் உங்களை மகிழ்வுடன் பயணிக்க வைக்கும். அந்தப் பயணத்தில் சின்னச் சின்ன இலட்சியங்களை உருவாக்கி உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். மைல் கற்கள் என்பவை நீங்கள் எவ்வளவு தூரம் பயணித்தீர்கள் என்பதைச் சொல்லும் அடையாளம் மட்டுமே.
அறிவுரைகள் சொல்வது எளிது. அறிவுரைகளின் படி வாழ்வது இனிது !
1,088 total views, 6 views today