அதிசய உலகம்
அதிசய உலகம் 01
சிரி, சிரி, சிரி: சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் அறிவியலும் என்ன?
மனம் விட்டுச் சிரிப்பது போல் ஒரு சிறந்த விஷயம் இல்லவே இல்லை! ஒரு மணி நேரம் சிரிப்பதும், அரை மணி நேரம் பாரம் தூக்குதலும் (weight lifting) ஒன்று என விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். அது ஏன் என்றால், இரு வேளைகளிலும் எரிக்கப்படும் கலோரியின் அளவு ஒன்று எனக் கணக்கிட்டுள்ளனர். எனவே, ஒரு ஆண்டிற்கு ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் சிரித்து வந்தால், ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம் என்கிறது ஆராய்ச்சி. மனம் விட்டுச் சிரிப்பது ஒரு விதமான ஏரோபிக் (aerobic) உடற்பயிற்சி ஆக அமையும் என்கிறார் நரம்பணுவியல் மருத்துவர் டாக்டர் ஹெலன் பில்செர் (Helen Pilcher). அவ்வாறு சிரிப்பதின் காரணமாக இதயத் துடிப்பு வேகமாகி, உடல் முழுவதும் உள்ள பாகங்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மேலும் சிரிக்கும் போது மார்பு ஏறி இறங்கி, வயிற்றுத் தசைகளும் இறுக்கம் அடைகிறது.
சிரிப்பின் நன்மைகள் இவ்வளவு தான் என்று நினைத்து விடாதீர்கள்! சிரிப்பதற்கு குறைந்தது 15 முக தசைகள் தேவைப் படுகின்றன. இதனால் முகம் மிருதுவாகவும், பிரகாசமாகவும் மிளிரும். மேலும், இது உடலுக்கு நலம் தரும் என்டோர்பின் (endorphine) உற்பத்தியை தூண்டி, மன அழுத்தத்தையும் குறைக்கிறது. இதை விட சிரிப்பது இதயத்திற்கு மிகவும் நன்று என வேறு சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. உடற்பயிற்சி மற்றும் கொழுப்பு குறைக்கும் மருந்துகள் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது போலவே, உரக்கச் சிரிப்பதும் இரத்த சுழற்சியை அதிகரிக்கிறது. இப்படிச் சிரிப்பதால் உடல் மற்றும் மனம் நிம்மதி பெற்று, நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.
வாய் விட்டுச் சிரித்தால், நோய் விட்டுப் போகும் என்று இதைத்தான் பெரியவர்கள் பல நூற்றாண்டுக்கு முன்பே எழுதிவைத்தார்களோ, என்ன? சரி நண்பர்களே, சிரிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்பதை அறிந்துவிட்டீர்கள்.
—————————————————————————————————
அதிசய உலகம் 02
விண்வெளிக்கு காப்பி குடிக்கப் போவோமா?
அடுத்த விடுமுறைக்கு எங்கே போக இருக்கின்றீர்கள். நீங்கள் வசிக்கும் நாட்டில் இருக்கும் ஒரு ஊருக்குப் செல்வீர்கள் அல்லது அதிகபட்சம் வெளிநாடுகளுக்குச் செல்வீர்கள், சரி தானே? ஆனால், எப்பொழுதாவது விண்வெளிக்குப் போகலாம் என்று யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா? இல்லை தானே? நண்பர்களே, எதிர் காலத்தில் விடுமுறைக்கு விண்வெளிக்கும் போக சிந்திப்பார்கள் என்று இன்றைய விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். அது எப்படி என்று அறிய விரும்பினால், கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்.
எதிர்காலத்தில் விடுமுறைக்கு விண்வெளிக்குப் போகப் போகிறார்கள் என்று கூறியிருந்தேன். அது எப்படித் தெரியுமா? நீங்கள் நினைப்பது போல் ராக்கெட்டில் பயணிப்பதில்லை! இதற்கென்றே ஒரு உயர்த்தியை (நுடநஎயவழச) அமைக்க இருக்கின்றார்கள். இந்த உயர்த்தியுடன் பூமியின் தரையில் இருந்து 80,000 கி.மீ. மேல் நோக்கிச் சென்று, அங்கே ஜாலியாக ஒரு சோடா குடித்துவிட்டு மறுபடியும் புவியை நோக்கிச் செல்லப் போகின்றார்கள்.
நீண்ட காலமாக இப்படி ஒரு உயர்த்தியைக் கட்டுவதற்குச் சாத்தியமே இல்லை என்று எண்ணி இருந்தார்கள். அதுவும் நியூட்டனின் இயக்க விதிகளின் அடிப்படையில் இந்த உயர்த்தியை இயக்க உதவும் கேபிள்கள் அறுந்துவிடும் என உறுதியாகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், நவீன ஆராய்ச்சிப் படி கார்பன் நானோகுழாய்கள் (Carbon nanotubes) உதவியுடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்தமுடியும் என்று தெரியவந்தது. தற்போது விஞ்ஞானிகளால் ஒரு சில சென்டிமீட்டர் கார்பன் நானோகுழாய்களைத் தான் உருவாக்க முடிந்தது. ஆனால், கொஞ்சக் காலம் கடந்து 2070ம் ஆண்டிற்குப் பின்பு, இப்படி ஒரு உயர்த்தியை நிச்சயம் உருவாக்க முடியும் என்பதைக் கூறியிருக்கிறார்கள். இது ஆச்சரியமாக இல்லையா நண்பர்களே?
எனவே, „வா மச்சான் விண்வெளிக்குச் சென்று ஒரு காப்பி குடித்துவிட்டு வருவோம்“ என்று எதிர்காலங்களில் கேட்கத்தான் போகிறார்கள். ஆனால், நாங்களும் அதே போலக் கேட்பதற்கு 2070ம் ஆண்டில் இருப்போமா என்று தான் தெரியவில்லை. சரி பொறுத்திருந்து பார்ப்போமே…
இனி நீங்கள் கூறுங்கள், இப்படி ஒரு உயர்த்தியில் பயமில்லாமல் விண்வெளிக்குச் சென்று பார்ப்பீர்களா?
578 total views, 2 views today