ஏனிந்த மரதனோட்டம்?


கௌசி.யேர்மனி

ஒரு மரணத்தின் காயம் மாறும் முன்னே, காயத்துக்கு மருந்து தர வேண்டிய இயற்கையானது வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல் அடுத்த மரணத்தைத் தந்து விடுகிறது. ஒன்றை எண்ணிக் கலங்கும் வேளையில் அடுத்த இழப்பு பெரிதாக முன் வந்து நின்று பழையதை மறைத்து விடுகின்றது. இயற்கையின் அற்புத தொழிற்பாட்டை எண்ணி வியந்து போகின்றேன். ஒருவர் இறப்பில் உறவினர் நண்பர்கள் கவலையில் தோய்ந்து போனாலும், இறந்தவர்களின் குடும்பத்தினர் உடைந்து போகின்றார்கள். காலப்போக்கில் சம்பவமாக மார்வல் படங்களில் மனிதர் சாம்பலாகிப் பறந்து போவதுபோல் இறந்தவர்கள் உலக மனங்களில் இல்லாமல் போகின்றார்கள். இல்லை மறைந்துதான் போகின்றார்கள்.

காலன்; தனக்கு ஒரு காரணத்தை வைத்து உயிர்களை அழைத்துச் செல்லுகின்றான். இதெல்லாம்; கௌசி ஏன் இன்று நினைக்கின்றாள் என்றால் காதலை எழுதினேன். திருமணத்தை எழுதினேன். குழந்தைச் செல்வங்களை எழுதினேன். வாழ்க்கையின் ஓட்டத்தை எழுதினேன். வாழ்க்கை ஓட்டத்தின் முடிவில் வரும் உலகத்தின் வாழ்க்கை ஓட்டையை என்பதை எழுத வேண்டாமா?

கண்ணதாசன் சொல்லாத செய்தி என்னதான் புதிதாக இருக்கின்றது. குழந்தையாய் மனிதன் தோன்றியதில் இருந்து மரணத்தில் மடியும் வரை வாழ்க்கைப் போராட்டம் அத்தனையும் தந்தார். அவரே ஆடும் வரை ஆட்டம் ஆளுக்கொரு நாட்டம். ஆம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் நாட்டம். அதேபோல் ஆளுக்கொரு தேதி வைத்து வைத்து ஆண்டவன் அழைப்பான். அன்று சொல்ல வந்த செய்தியை இன்று வாழும் காலம் புரிந்தும் புரியாதது போல் ஏனிந்த ஓட்டம். ஏனிந்த நாட்டம். இவையெல்லாம் ஏன் என்பதே எனக்குள் எழுகின்ற கேள்விக்குறியாக இருக்கின்றது.

காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்றார் பட்டினத்தார். எமக்காக இல்லை. எம்முடைய எதிர்காலத்துக்காக என்று ஓடுகின்ற ஓட்டத்திலே எதிர்கால தொழில்நுட்பம் எம்மை அழிக்கத்தான் போகிறது. உண்மையில் அன்பும் பாசமும் உள்ள எத்தனை பேருக்கு எம்முடைய தாத்தாவைத் தெரியும்? பாட்டனைப் புர்pயும்? இருந்தாலும் எதையோ தேடி ஓடுகின்றோம். ஓட்டத்தின் முடிவில் ஓடியவர் யாரென்று நாளைய சமுதாயம் கேட்கும் கன்னத்தில் ஆட்காட்டி விரலை வைத்துச் சிந்தித்து நிற்கும். இறந்தவர் எழுத்தாளனாக இருந்தால், அவர் எழுதும் பத்திரிகை அவரின் பக்கத்தில் வேறொரு எழுத்தாளருக்கு இடம் கொடுக்கும், பாடகனாக இருந்தால், பல பாடகர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கும், ஒருவர் பஸ்பமாகிப் போக அவரிடத்தில் வேறொருவர் ஜொலிப்பார். இதுவே இயற்கையின் நியதி. இதுவே வாழ்க்கையின் மரதனோட்டம்.

யாவும் இந்த உலகில் பொய்தான்.

நீயும் பொய்யா நானும் பொய்யா
நினைத்துப் பார்த்துச் சொல்லடா.
வாயும் பொய்யா வயிறும் பொய்யா?
வாயும் பொய்தான் வயிறும் பொய்தான்
மாய உலகில் மயங்கும் மனிதா
யாவும் பொய்யே தானடா

உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தம்.
நீட்டியே காலை நெருப்பிடும்போது
நேசம் பாசம் பொருளாசைக்கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க்கரிசியிலே
கணக்குத் தீர்ந்திடும் சொந்தமடா.
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்.

என்று என்று வாழ்க்கைத் தத்துவத்தை கண்ணதாசன் அழகாகப் பாடியுள்ளார்.
காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா என்றார் ஒரு சித்தர்.

~~நானும் ஒரு கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ” என்றார் மகாகவி பாரதியார்.

கவனம் கவனம் இதை செய்யாதீர்கள். அதைச் செய்யாதீர்கள் என்போர் எல்லாம் சொல்லிய நாளைந்து மாதங்களில் சொல்லிழந்து மண்ணுக்குள் அடக்கமானார். செய்தி தருபவரே செய்தியாகிப் போகின்றார். இதுதான் வாழ்க்கையை வாழுங்கள் என்று மனம் அடித்துக் கொள்ளுகிறது. உலகம் இறப்புக்கு காரணமாய் விதியைச் சாட்டும், பல சாத்திர விளக்கங்களும் கூறும். விதியை வெல்லலாம் என்பார்க்கு விதியை வெல்வாய் என்று ஒரு விதி இருந்திருக்கும்.

புத்தரிடம் பாம்பு தீண்டி இறந்த மகனை உயிர்ப்பித்துத் தரும்படி சுஜாதை கேட்கின்றாள்.

விடமேறி மடிந்ததென விளம்புகின்றார் சிலரே
விதியாலே விளைந்ததென விரிக்கின்றார் சிலரே,
தடையில்லை இதுமூடு சன்னியென்றார் சிலரே,
சஞ்சீவி அளித்தாலும் சாமென்றார் சிலரே. என்று புலம்பி நின்றாள்.

காலச்சனியோ, காரண விபத்தோ, விதியின் பலனோ எதுவாக இருந்தாலும் நடப்பது நடந்தேயாகும். இது இயற்கையின் நியதி.

சுஜாதைக்கு புத்தர்

நாவிய கடுகுவேண்டும் – அதுவுமோர்
நாவுரி தானும் வேண்டும்;
சாவினை அறியாத – வீட்டினில்
தந்ததா யிருக்கவேண்டும்!

இவற்றைக் கொண்டு வந்தால் உயிர்ப்பித்துத் தருவேன் என்கிறார். தேடினாள், தேடினாள். ஓடினாள், ஓடினாள். ஒவ்வொரு வீட்டு வாசலையும் தட்டினாள். இறுதியில் உணர்ந்தாள். ஞானம் பெற்றாள். உயிர் என்பது தரித்து நிற்காத ஒன்று. சில காலம் ஒரு உடலை இயக்கும் சக்தி. அது பிஞ்சாக, காயாக, கனியாக, பழமாக இயற்கைக் கட்டளையின் படி உடலுக்கு உரிமையின்றி உறவுக்குத் தொடர்பின்றி பிரிந்து போகும் என்னும் உண்மையை உணர்ந்து மகனைத் தீயிலிட்டாள்.

மகாபாரத யுத்தத்திலே அர்ச்சுனன் எதிரே நிற்கும் படைகளைப் பார்க்கின்றான். எல்லாரும் உறவினர்கள். உறவுகளைக் கொன்று நான் உயிர் வாழ்வதா என்றுத் தயங்கிப் பலவாறாகப் போர் செய்ய இயலாது என்று கண்ணனிடம் கூறி அம்பறாத்தூணியை நழுவ விடுகின்றான். அப்போது கண்ணன்

நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி,
வெந்து தான் தீரும் ஓர் நாள்

என்று கண்ணன் கூறுகின்றான்.

இடையின்றி அணுக்களெல்லாம் சுழலுமென
இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்
இடையின்றிக் கதிர்களெலாம் சுழலுமென
வானூலார் இயம்பு கின்றார்
இடையின்றித் தொழில்புரிதல்
உலகினிடைப் பொருட்கெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
எனதுள்ளம் இயங்கொ ணாதோ?

என்றும் பாடிய பாரதியார் 36 வயதிலே இயங்காமல் போய்விட்டார்

காலா உன்னை நான் சிறு புள்ளென மதிக்கிறேன்
காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்

என்று தைரியமாய்ச் சொல்லி யானையால் மிதியுண்டு இறந்தார்.

இவ்வாறு வேதனையான இழப்புக்களும் அதற்கான மரணச் சடங்குகளும் இப்பூமிப்பந்திலே நடக்கும். நடந்தவற்றைச் சில காலங்களில் நாம் மறந்துதான் போவோம். தொடர்ந்து உலகத் தடம் பதிக்க முயற்சிப்போம். எழுத்தாளனாய், பாடகனாய், நடிகனாய், அரசியல்வாதியாய், ஆன்மீகவாதியாய், விஞ்ஞானியாய் என்று பல வடிவங்கள் எடுக்க தூக்கமில்லாமல் உழைப்போம். ஆயினும் உருளும் பூமி உதிர்த்துவிட்டுப் போகின்ற விலைமதிப்பற்ற உயிர்களில் ஒருநாள் நாமும் ஒருவராக இருப்போம். இது யாராலும் மறுக்க முடியாத சத்தியம்.

853 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *