பெண்கள் ஏன் அரசியலுக்குள் வருவதில்லை!
ஆங்கிலேயே காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில்
முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கை.
பிரியா.இராமநாதன் .இலங்கை.
முன்னொரு காலத்தில் ‘வீடு பெண்ணுக்கு, நாடு ஆணுக்கு’ என்று சொல்லிவைத்தது போல் ‘குடும்ப நிர்வாகம் மட்டுமே பெண்ணுக்கு’ என்று இன்றுமே பலர் நம்புகிறார்கள். இதனால் அரசியல் நிகழ்வுகளாக இருந்தாலும் சரி , அரசியலாக இருந்தாலும் சரி, சராசரி பெண்கள் பலர் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.
இதையும் தாண்டி அரசியலில் ஈடுபட்டு, தேர்தல் களம் கண்டு அமைச்சர்களாகவும் நாட்டைக் கட்டிக்காக்கும் தலைவர்களாகவும் ஜனாதிபதிகளாக பிரதமர்களாக என பல்வேறு முக்கி பொறுப்புக்களை, பதவிகளை பெண்கள் வகித்திருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனாலும் , உலக அளவில் உள்ள பெண்களின் மொத்த விகிதாசாரத்தில் எத்தனைபேர் இப்படி அரசியலினுள் கோலோச்சியிருக்கின்றனர் ? அல்லது அப்படியே அரசியல் பிரவேசம் செய்யும் பெண்களில் எத்தனை பேருக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படுகின்றன? கீழைத்தேயங்களைப் பொறுத்தவரையில் முக்கிய கட்சிப் பதவிகள் பெண்களுக்கு கொடுக்கப் படுவதும் அரிது. பெண் வாக்காளர்களை கவர பெண் தலைவர்கள் தேவைப்பட்டாலும், பெண்கள் பெரிய அளவில் தனிப்பட்ட புகழ் அடைவது மிகவும் அரிது. இலங்கையிலும்கூட மிகச் சிறந்த பெண் அரசியல் தலைவர்களை கடந்து வந்திருக்கிறோம், என்றாலுமே ஏன் நிலைமை இன்னும் பெரிய அளவில் மாறாமல் இருக்கிறது?
1931இல் இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏக காலத்தில் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆங்கிலேயே காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில் முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கை. வளர்ச்சியடைந்த பல நாடுகளில் கூட அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. இத்தனை பழமையான வரலாறு இருந்தும் கூட இலங்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்றுவரையில் 6.5ஐ இதுவரைத் தாண்டியதில்லை!
உளவியல் ரீதியாக பார்க்கும் போது, சமூகம் சார்ந்த பொதுவான அணுகுமுறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் வேற்றுமை இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பது விளங்குகிறது. சில ஆராய்ச்சியின்படி பெண்கள், ஆண்களை விட ‘தனித்துவமானஅடையாளம்’ என்ற வகையில் பின்தங்கி உள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளதாம் . ஆண்கள் இளம்பிராயம் முதலே தனக்கான சுயகௌரவம், தன்னை முன்னிலைப் படுத்துதல், போட்டிமனப்பான்மையுடன் விளங்குதல், தன்னுடைய உரிமைகளை நிலைநாட்டுதல் போன்றவற்றில் ஈடுபாட்டுடன் வளர்க்கப்படுவதாகவும் ,பெண்களை பொறுத்தவரை உறவுகளை முதன்மையாகக் கருதி, மாறுபட்ட, முரணான (Conflicting) பொறுப்புகளை திறம்பட கையாள்வதே முக்கியம் என்பதாக வளர்க்கப்படுவதாகவும் அந்த ஆராச்சிகள் குறிப்பிடுகின்றனவாம் .
ஆண்களைப் போல பெண்களால், அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையை ஒருசேர நன்றாக வைத்துக்கொள்ள முடியாது என்கிற கருத்தும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதே . ஏனெனில் , ஒரு ஆண் முழுநேர அரசியலில் ஈடுபடுகையில் , பெண்ணானவள் குடும்பத்தை நிர்வகித்துக்கொள்வாள் எந்த குற்றச்சாட்டிகளுமின்றி . ஆனால்
இதே ஒரு பெண் அரசியலில் ஈடுபடுவாளாயின் அவளுக்கு அவளது குடும்பம் எந்த அளவிற்கு அனுசரணையாக இருக்கும் என்பதனை கூறமுடியாது. இதனாலேயே அரசியலில் இருந்தால் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள முடியாது என்று பெரும்பாலான பெண்கள் அஞ்சுகின்றனர்.
அரசியல் வாரிசுகளாக இல்லாமல் அடிப்படை உறுப்பினராக இருந்து முன்னேறும் பெண்களுக்கு கள அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சமநிலை, பொருளாதாரம் என எண்ணற்ற தடைகள் உள்ளன.அதுமட்டுமன்றி ஒழுக்க விதிகளின் அடிப்படையில் பெண்கள் மீது விழும் குற்றச்சாட்டுகளும், அவதூறுகளும் பெண்களை அரசியல் பேசுவது மற்றும் அரசியலில் ஈடுபடுவதில் இருந்து தடுக்கிறது என்றும் கூறவேண்டும்.
இது ஒருபக்கம் என்றால் எல்லா துறைகளிலும் இருப்பது போல அரசியலிலும் பாலியல் தொந்தரவுகள் அதிகம். சினிமா என்கிற துறையைவிடவும், அரசியலில் பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்முறைகள் அதிகம் என்கிறகுற்றச்சாட்டுகளைப் பெருமளவில் அவதானிக்கமுடியும். இப்படிப்பட்ட பாலியல் தொந்தரவுகளால் சத்தம் இல்லாமல் அரசியலைவிட்டே விலகிய பல பெண்கள்இருக்கிறார்கள்.
இந்த பாலியல் தொந்தரவுகளை எதிர்த்து வெற்றிபெறும் பெண்கள்தான் தொடர்ந்து அரசியலில் நீடிக்கிறர்கள். இதுதான் யதார்த்தம். மேலும், ஆண்கள் அதிகமாகபுழங்கக்கூடிய இடங்களில் முக்கியமானது அரசியல். ஊழல், கொள்ளை போன்ற மோசமான குற்றங்கள் அதிகம் நடக்கக்கூடிய இடமாகவும் அரசியல் களம் இருக்கிறது. அதனாலேயே பெண்கள் அரசியலில் வர விரும்பினால் அது பணம் மற்றும் புகழுக்காக என பார்க்கப்படு கிறது.மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய நினைப்பவர்கள் இப்போது இருக்கிறார்களா என்கிற சந்தேகம் எல்லோருக்குமே இருக்கின்ற நிலையில் அப்படி ஓன்றிரண்டு பேர் இருந்தாலும் அவர்களையும் நம்பமுடியாத சூழல் உள்ளது என்பதனால் அரசியலில் பெண்களின் வகிபாகம் இந்த இடத்திலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விடுகின்றது என்பதே உண்மை.
இப்படிப்பட்ட ஈடுபாடு மற்றும் தார்மீக ரீதியான அணுகுமுறையில் உள்ள மாற்றங்கள் தான், வீடு முதல் அரசியல் வரை ஆண்-பெண் இடையிலான வேற்றுமைக்கும் பாகுபாட்டிற்கும் அடித்தளம் இடுவதாக கருதப்படுகின்றது.
இங்கே நான் இன்னுமோர் விடயமதனையும் குறிப்பிட விரும்புகின்றேன், பெண்களாகிய நாமும் நம்முடைய நிலைமைக்கு இன்னுமே அடுத்தவரை காரணம்காட்டிக்கொண்டிராது நாமும் நமது நிலைமையை மாற்றிக்கொள்ள முயலவேண்டும் அனைத்து விடயங்களிலும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றியும், ஆடை அலங்காரங்கள்பற்றியும் ,அன்றாட வீட்டு வேலைகள் பற்றியுமே சிலாகித்து திரியும் நாம், நம் வீடுகளில் அரசியல் பேச வேண்டும். பணியிடங்களில், நண்பர்களோடு உரையாடுகையில் நாட்டின் சூழலை,அரசியலை கலந்து ஆலோசிக்க பெண்களாகிய நாம் முன்வரவேண்டும். இவ்வாறு பேசும்போது அரசியல் நிலைமை பற்றிய சுயமான, தீர்க்கமான ஒரு தெளிவு நமக்கு கிட்டக்கூடும்.
பெண்களுக்கான உரிமைகள் கிடைக்க பெண் பிரதிநிதித்துவம் மிகவும் அவசியம்.வாரிசுகள் அல்லாத கணவரோ, அப்பாவோ நிழலாக செயல்படாத தனி பெண் ஆளுமைகள் உருவாகுதல் என்பது மிக மிக அவசியம். அவர்களால் மட்டும்தான் பெண்களுக்காக சிந்திக்க முடியும். அப்படி உருவாக வேண்டுமானால் பெண்கள் முதலில் சகஜமாக அரசியல் பேச வேண்டும்.
எமது நிறுவனத்தின் 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு
மலிவு விற்பனை!
வாடிக்கையாளர்களின் ஆதரவிற்கு எமது மனமார்ந்த நன்றி
623 total views, 3 views today