பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்
பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர் எனத் தமிழ் விரும்பிகள் நெஞ்சத்தில் நித்தம் உறைந்திருக்கும் பிரபஞ்ச கவிஞன் பாரதியின் நினைவு மாதத்தில், அவரது கொள்ளுப் பெயரன் கலாநிதி ராஜ்குமார் பாரதி அவர்கள் இலங்கைக்கு வருகை தந்தமையைப் பெரும் கொண்டாட்டமாக மாற்றினர் இலங்கை பாரதி பக்தர்கள்.
பாரதி வழித்தோன்றல்களோடு கலைப் பாலம் அமைக்க ஆர்வத்தோடு செயல்படும் இலங்கை பாரதி விரும்பிகள் பலருளர். அதில் அபிநயக்ஷேத்திரா பெரும் பங்கினை வகுக்கிறது.
இம்முறையும் அபிநயக்ஷேத்திராவின் அழைப்பில் ராஜ்குமார் பாரதி ஐயா இலங்கைக்கு வருகை தந்தார். அபிநயக்ஷேத்திராவின் இரு பெரும் அரங்கேற்றங்களாக இலங்கைத் திருநாட்டினை கருப்பொருளாகக் கொண்டு “தொன்மாவிலங்கை” அரங்கேற்றமும் , பெண்ணின் பெருமையாய் விளங்கிய நாயகியரை அடிப்படையாகக் கொண்டு ” நாயகி ” அரங்கேற்றமும் கொழும்பில் இடம்பெற்றது. இவ்விரு நடனத் தயாரிப்புகளுக்கும் இசை அமைத்துப் பெருமை சேர்த்ததோடு மட்டுமல்லாமல் முதன்மை விருந்தினராகவும் வருகை தந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வுகள் முறையே 02.09.23 கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்திலும், 09.09.23 பிஷொப்ஸ் கல்லூரி மண்டபத்திலும் இடம்பெற்றது. இவ்விரண்டு அரங்கேற்றத்திலுமாக மொத்தம் பன்னிரண்டு புதிய நடன உருப்படிகளுக்கு ராஜ்குமார் பாரதி ஐயா இசை அமைத்து வழங்கியதோடு சில பாடல்களுக்கு இயலாக்கமும் , ஜதி அமைப்பும் வழங்கி இருந்தார். இவை அனைத்துமே காலத்தின் தேவை கருதி படைக்கப்பட்ட காலங்கடந்து உயிர்ப் பெற்றிருக்கவல்ல உருப்படிகள். மிக நுண்ணிய விடயங்கள் கொட்டிக்கிடக்கும் முத்தமிழ் முத்துக்கள் இவை.
இவ்விரு அரங்கேற்றங்களையும் தவிர, அபிநயக்ஷேத்திராவின் ஒழுங்கமைப்பில் செப்டம்பர் 10 ஆம் திகதி பிஷொப்ஸ் கல்லூரி மண்டபத்தில் சுவிஸ்லாந்து நடன ஆசிரியர் திருமதி வாணி சர்மாவின் மாணவி கேதாரணி ரத்தினகுமாரின் அரங்கேற்றம் இடம்பெற்றது. இவ்வரங்கேற்றத்திலும் அபிநயக்ஷேத்திராவின் உருப்படிகள் சேர்க்கப்பட்டிருந்தன. பாரதியின் நினைவு நாளை ஒட்டியதாக இந்த அரங்கேற்றம் நிகழ்ந்தமையால் பாரதியின் புதிய ஆத்திச்சூடி, முப்பெரும் தேவிகள் , ” தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற பாரதி கவி வரிகளை கொண்டமைந்த தில்லானா என்பன இடம்பெற்றன. அந்த உருப்படிகளும் ராஜ்குமார் பாரதி ஐயாவின் இசை அமைப்பில் அமைந்தவை. அவரது சிறப்பு வருகையும் கேதாரணியின் அரங்கேற்றத்திற்கு பெருமை சேர்த்தது.
அபிநயக்ஷேத்திரா நிகழ்வுகள் தவிர இன்னும் இரண்டு முக்கிய நிகழ்வுகள் ராஜ்குமார் பாரதி ஐயா வருகையினால் இலங்கையில் இடம்பெற்றது. ஒன்று, மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாரதி விழா.
நிறுவகத்தின் இயக்குனர் பேராசிரியர் பாரதி கென்னடி அவர்களின் பல வருட விண்ணப்பத்தில் இம்முறை ராஜ்குமார் பாரதி ஐயா அவர்கள் மட்டக்களப்பு சென்றார். கலாநிதி பாரதி கென்னடி அவர்களின் மிகச் சிறந்த ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக வேந்தர், துணை வேந்தர் முன்னிலையில் பல்கலைக்கழக மாணவர்களின் கலை நிகழ்வுகளோடு அரங்கு முழுவது பாரதி ஒளி பரவி இருந்தது. சுவாமி விபுலானந்தர் உருவச் சிலைக்கு பாரதி ஐயா மாலை அணிவித்து விழாவினை ஆரம்பித்து வைத்ததோடு , நிறைவில் சுவாமி விபுலானந்தரால் கையாளப்பட்ட பழமை வாய்ந்த யாழ் ஒன்றினையும் நிறுவகத்திற்கு முன்னதான பிரதான வீதியில் திறந்து வைத்தார்.
தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலாளரின் தலைமையில், மாவட்ட செயலகத்தில் ஐயாவிற்கான கௌரவ வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
வணக்கத்திற்குரிய சுவாமி ஸ்ரீமத் நீலமாதவானந்தாஜி மஹராஜ் அவர்கள் சுவாமி விபுலானந்தருக்கு பாரதி மீதிருந்த எல்லையற்ற விருப்பினை தெரிவித்ததோடு , இந்தியாவில் ராமகிருஷ்ண மிஷன்களில் ராஜ்குமார் பாரதி ஐயா அவர்கள் வழங்கிய இசை கச்சேரிகளையும் நினைவு கூர்ந்து மதிய விருந்துக்கு அழைத்துச் சிறப்பு ஆசிகளை வழங்கி மகிழ்ந்தார்.
இரண்டாவதாக யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஏற்பாட்டில் நடைபெற்ற ராஜ்குமார் பாரதி ஐயாவிற்கான கௌரவ விழா.
நிறுவகத்தின் அதிபர் உயர்திரு லலீசன் அவர்களின் தலைமையில் செப்டெம்பர் 7 ஆம் திகதி கலாசாலையில் அமைந்துள்ள வீரமணி ஐயா கலையரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது. அதில் இலங்கையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆசிரிய மாணவர்களும், ஆசிரியர் கலாசாலை நிருவாகத்தினரும் , விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ராஜ்குமார் பாரதி ஐயா அவர்கள் உரையாற்றும் போது பல பாரதி பாடல்களைப் பாடி , இயற் தமிழும் , இசை தமிழும் கலந்த நிகழ்வாக மாற்றி அனைவர்க்கும் அன்பு செய்தார்.
இவை தவிர , பல பணிகளுக்கு மத்தியிலும் அன்பின் நிமித்தம் பாரதி நினைவு நாளை ஒட்டி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும், வீரகேசரி பத்திரிகைக்கும் நேர்காணலை வழங்கி, தம் வாழ்த்துக்களையும் அன்பினையும் நன்றியையும் இலங்கை மக்களுக்கு தெரிவித்தார். மொத்தத்தில் செப்டம்பர் 2023 ராஜ்குமார் பாரதி ஐயாவின் இலங்கை வருகை ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்துவிட்டது.
447 total views, 3 views today