LGBTQ

ஒன்றாக வாழ்கின்றார்கள். ஒன்றாகவா வாழ்கின்றார்கள்
கௌசி.யேர்மனி

கட்டுப்பாடு, விட்டுக் கொடுப்பு இவற்றை ஒட்டியே மனித வாழ்க்கை குடும்பம் என்ற அமைப்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றை மனதில் கொள்ளாத உணர்வுகளே இன்று பேசுபொருளாக இருக்கின்றன. ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற உயர்திணைப் பாலினம். இப்போது பாலினமே இல்லை. மனிதர் என்ற இனம் மட்டுமே உள்ளது எனக் கொண்டாடப்படுகின்றது. உறுப்புக்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆண், பெண் என்று பிரிக்கக் கூடாது என்பதே அவர்கள் வாதமாக இருக்கிறது. இங்கு ஒருமுறை என்ற வார்த்தை இந்த வாழ்க்கை என்பதற்குள் அடங்கி விடுகிறது. எம்முடைய மனத்துக்கு எது சரி, எது தோன்றுகிறதோ அதன்படி வாழ்வோம் என்று வாழுகின்ற பண்பு தற்கால இளம் தலைமுறையினரிடம் தோன்றியுள்ளது. சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தி வைக்கின்ற போது ஒரு பலூனை ஒரு பக்கம் அழுத்துகின்ற போது மறுபக்கம் அது தள்ளிக் கொண்டு வரும். அதுபோலத்தான் ஒரு பக்கம் கட்டுப்படுத்துகின்ற போது அது மறுபக்கம் வேறுவிதமான குற்றங்களாக மாறுகின்றன.

இப்போது LGBTQ என்பதை அடிக்கடி நாங்கள் காதுகளால் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். Rainbow society என்று ஒவ்வொரு நாடுகளிலும் ஒன்றுகூடலும் விழாக்களும் நடத்தப்படுகின்றன. இது இன்று நேற்று தோன்றியது என்று நாம் எண்ணி விடமுடியாது. தற்காலத்தில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் வெளியாகின்ற காரணத்தால், எல்லோராலும் நேரடியாக உலகத்தின் மூலைமுடுக்கெங்கும் அறியக்கூடியதாக இருப்பதனால் LGBTQ என்பது பலராலும் அறியக்கூடியதாக இருக்கின்றது. நான் இது பற்றிச் சரி, பிழை என்றெல்லாம் வாதிடும் நிலையில் இல்லை.

இயற்கையாக ஏற்படும் மனித உணர்வுகளை அடக்கி வைப்பதை விடுத்து அந்த உணர்வுகளுடனேயே மனிதர்களை வாழ விடுகின்ற போது அவன் வாழுகின்ற ஒரு வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைகின்றது. உலக உயிர்கள் அனைத்தும் காதல் அல்லது காமத்துக்குள்ளேதான் அடங்கிக் கிடக்கின்றன. காமம் இல்லாது குடும்பமும் இல்லை. உலக மக்களும் இல்லை. இந்தக் காமத்தை ஒரு வரையறைக்குள் கொண்டு வருவதற்காகவே திருமணம் என்ற நடைமுறை ஏற்படுத்தப்பட்டது. இதனை உடைத்தெறியும் இயக்கமாக இந்த LGBTQ உருவாகியுள்ளது. எல்லோரும் இந்த பாலின மாற்றத்துக்குள் உற்படுகின்றார்களா? என்றால், இல்லை. ஆண், பெண் என்னும் குடும்ப அமைப்புக்குள் தம்முடைய வாழ்க்கையைக் கொண்டு செல்கின்ற மனிதர்கள் இல்லாமல் இல்லை.

இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

L என்றால் Lesbian:

பெண்ணும் பெண்ணும் காதல் கொள்வது, காமம் கொள்வது Lesbian எனப்படுகின்றது. கி.மு 610 ஆம் ஆண்டு பிறந்து கி.மு. 580 ஆண்டு இறந்த சஃப்போ Sappho என்ற கிரேக்கப் பெண் கவிஞரே இந்தப் பெயர் வருவதற்குக் காரணமாவார். இவர் பிறந்த இடம் Lesbian எனப்படும் ஒரு தீவு. இவர் தன்னுடைய மன உணர்வுகளைக் கவிதைகளாக எழுதுவார். இவரைச் சுற்றிப் பெண்கள் கூட்டம் எப்போதும் இருந்தது. நண்பர்கள், குடும்பம் பற்றியே இவருடைய கவிதைகள் அமைந்திருந்தன. இக்கவிதைகளை ஆதாரமாகக் கொண்டு சாஃப்போ பெண்களுடன் ஓரினச் சேர்க்கை வாழ்வை அனுபவித்தவர் என்று பிற்காலத்து விமர்சகர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். இவ்வாறு வாழ்கின்ற மக்கள் லெஸ்பியன் தீவுப் பெண்களைப் போன்றவர்கள் என்றும் கூறியதுடன் பெண்களே பெண்களை காம நோக்கத்துடன் அணுகினால், அவர்களை லெஸ்பியன் என்ற பெயரை வைத்து அழைக்கத் தொடங்கினார்கள்.

லீனா மணிமேகலையின் எட்டாவது அகத்திணைக் கவிதைகளில்
அந்தரக் கன்னியின் குரலாக வரும் மின்னும் நாக்கு என்னும் இக்கவிதை
உப்பும் பனியும் மின்னும் நாக்கால்
ஸாப்போவின் – கவிதையொன்றை
உயிருந்தப் பாதையில் பாய்ச்சி
என்னிலிருந்து
சூறையாற்றைப் பிரித்தெடுக்கும் உனக்கு
முப்பத்து மூன்று சிவந்த இதயங்களைப் பரிசாகத் தருகிறேன்
என் ஆலிவ் இலை விரல் அழுத்தங்களில்
தோல் வெள்ளியாய் காய்கிறது
உதிரும் மயிரையெல்லாம் வேட்கையில்
மிச்சமில்லாமல் தின்கிறேன்
மன்மதனைப் பலியிட்ட நாளில்
பறை முழங்குகிறது
நீயும் ரதி நானும் ரதி

கவிஞர் மாலினி ஜீவரெத்தினம் எழுதிய

பேரழகே அழைத்தாயே காதலினாலே திளைத்தேனே.
நிலைக்கண்ணாடி போல எனை முழுதாக்கிக் காட்டும்.
அழகாக்கிடும் உயிர் நீதான்
ஒரு தேவதையைப் போலே
உயிர் பத்தி எரியுதே பாதகத்தி உன்னால
இது தொலையாத உறவு என்று ஊர் சொல்லிப் போகும்
உன்னைத் தொடர்ந்தே வருவேனே கடல் தாண்டி வாடி
என் உடல் தீண்டிப் போடி

இதேபோல் மருதநில குறுந்தொகைப் பாடல் ஒன்றிலே

தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்தின் புறாஅ ராயினுங் கையின்
ஈர்த்தின் புறூஉ மிளையோர்
உற்றின் புNறெ மாயினு நற்றேர்ப்
பொய்கை யூரன் கேண்மை
செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே.

பெரியோர் இழுக்கின்ற பெரிய தேரை இளையோர் இழுத்து இன்பம் அனுபவிக்காது விடினும் அந்தத் தேரை நினைந்துச் செய்த சிறுதேரை இழுத்து, அப்பெரியவர்கள் அடையும் இன்பத்தைப் பெறுவதுபோல, பரத்தையர் பெறும் மெய்யுறு புணர்ச்சியைப் பெற்று இன்பமடையமாட்டோம் ஆனாலும், தலைவனை நினைந்து உள்ளத்தே நட்பைப் பெருக்குதலினால் அவர் பெற்ற இன்பத்தையே யாம் பெற்றேம் என்று கூறுகின்றார். இங்கு தலைவியும் தோழியும் அடையும் இன்பம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான காம உணர்வுகளை பெண்கள் கவிதைகளாக வடித்திருக்கின்றார்கள்.

G என்றால் Gay:

ஆணும் ஆணும் பாலியல் ரீதியாகத் தொடர்பு கொள்வதை Gay என்ற சொல்லால் அழைக்கின்றார்கள்.
தாரகா முனிவர்களின் தவத்தை சோதிப்பதற்காக விஸ்ணு மோகினி உருவம் எடுத்ததாகவும் அந்த மோகினியை கண்டு சிவன் மோகித்த போது இருவருக்கும் பிறந்த குழந்தையே ஐயப்பன் என்றும் புராணக்கதை கூறுகிறது. கோயில் சிற்பங்களில் சிவனுடைய ஆண்குறியை விஸ்ணு பிடித்துக் கொண்டிருக்கின்ற சிற்பம் இருக்கின்றது. விஸ்ணு மோகினியாக மாறியது Transgender. மாறிய விஸ்ணுவும் சிவனும் கூடியது Gay. ஐயப்பன் சுவாமி உருவாகிய கதை LGBTQ க்குள் அடங்குகின்றது.

B என்பது Beisexual:

இவர்களுக்கு ஆண், பெண் என்ற இருபாலினத்தினரின் மேலும் கவர்ச்சி ஏற்படும். ஆணைக் கண்டாலும் பாலுணர்வு மேலெழும் பெண்ணைக் கண்டாலும் பாலுணர்வு ஏற்படும். ஆனால், இது எல்லோரின் மேலும் ஏற்படும் என்று சொல்ல முடியாது. யாரில் பாலினக் கவர்ச்சி ஏற்படுகின்றதோ அதன்படி அவர்கள் தம்முடைய விருப்பத்தை நிறைவு செய்வார்கள்.

T என்பது Transgender:

இவர்கள் பிறக்கும் போது ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கின்றார்கள். ஆனால், காலப்போக்கில் இவர்களுக்கு உடலிலுள்ள ஹோர்மோன் இயற்கையாகவே மாற்றத்தையடைந்து பாலின மாற்றம் ஏற்படுகின்றது. ஆணாக இருப்பவர்கள் உறுப்புக்களால் ஆணாக இருந்தாலும் தம்முடைய உள் உணர்வுகளிலே தம்மைப் பெண்ணாகவே நினைக்கின்றார்கள். அதேபோல் உடல் உறுப்புக்களால் பெண்ணாக இருப்பவர்களும் மன உணர்வுகளால் ஆணாகவே தம்மைக் கருதுகின்றார்கள். அவர்களுடைய நடையுடை பாவனை மாற்றுப் பாலினமாக இருக்கின்றது. இவர்களை திருநங்கை, திருநம்பி என்று அழைப்பார்கள்.

Queer:

ஆணும் பெண்ணும் திருமணம் செய்து வாழும் வாழ்க்கையை நாம் Normal என்று கருதுகின்றோம். ஆனால் இப்போது Normal என்பதே கிடையாது. எதை நாம் Normal என்று சொல்ல முடியும். ஏன் நாங்கள் என்ன விசித்திரமா? என்று கேள்வி எழுப்புகின்றார்கள். ஆண் ஆண் போலே இருத்தல். பெண் பெண் போலே இருத்தல் என்று சொல்வது போலே நான் இல்லை என்பவர்களே Queer என்பவர்கள்.

இதைவிட Questioning, Intersex, Assexual, Aromantic, Pansexual, Non-Binary or Envy, Genderfluid, Genderqueer, Agender, Stud, Muke, MaHu,Hetarosexism, Cisgender, போன்ற பிரிவுகளும் இருக்கின்றன.

Aromantic என்பவர்களுக்கு எதிலும் நாட்டம் இருப்பதில்லை. காமமோ, காதலோ எதிலுமே ஈடுபாடு இருப்பதில்லை. இவர்கள் எல்லோருடனும் நண்பர்களாக இருக்கவே விரும்புவார்கள். தற்போது குடும்பங்களில் பெற்றோர்கள் போடுகின்ற சண்டைகளைப் பாhர்க்கும் பிள்ளைகள் இந்தக் குடும்ப அமைப்பே வேண்டாம் என்று Aromanticஆக வாழ முற்படுகின்றார்கள். இதற்காக அவர்கள் கூறுகின்ற காரணங்கள் பெற்றோருக்குச் சவாலாக இருக்கி;றது.

தொல்காப்பியம் என்னும் நூல் பெருந்திணைக்குக் குறிப்பிடும் நான்கு பண்புகளில் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறன் என்பதை மட்டும் உரை பிரதிகளை மறுதலித்துவிட்டு வாசித்தால் அவை அங்கீகரிக்கப்பட்ட Heterosexual தன்மையைக் கடந்து வேறு பல காதல் வகை மாதிரிகளைப் பேசுவதற்கான திறப்பு கொண்டிருப்பதை உணர முடியும் என கவிஞர் மனோ மோகன் குறிப்பிடுகின்றார்.

ஆண்கள் விடுதிகளும், பெண்கள் விடுதிகளும், பிரமச்சாரிகளும் இவ்வாறான பிரச்சினைக்குள் அகப்படுவதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

இப்போது சிறுவயதிலேயே இதுபற்றிய வேறுபாட்டினைப் பாடசாலையில் கற்பிக்க வேண்டும் என்று கருதுகின்றார்கள். ஏனென்றால், ஒரு பிள்ளை சிறுவயதாக இருக்கும் போதே பெண்பிள்ளைகளுக்கு ரோசா நிற ஆடைகளை அணியவைத்து, பொம்மைகளை விளையாடக் கொடுத்து பெண் என்பதைப் பெற்றோரே மனதில் பதிக்கின்றார்கள். ஆண்களுக்கு வாகன பொம்மைகளை விளையாடக் கொடுத்து நீல நிற ஆடைகளை அணியக் கொடுத்து அவர்களை ஆண் என்று அடையாளப்படுத்துகின்றார்கள். ஆனால், அந்தப் பிள்ளை ஓரளவு வயதாகும் போது. ஆண் உடைகளை அணிய ஆசைப்பட்டு அந்த ஆடைகளை அணிகின்ற பெண் பிள்ளைகளைப் பாடசாலைகளில் காணுகின்ற போது கேவலமாகப் பார்த்துக் கிண்டல் செய்கின்றது. அந்தப் பிள்ளைகளுக்கு இவ்வாறான பாலினமுள்ள மனிதர்களும் சமூகத்தில் இருக்கின்றார்கள் என்பதை கற்றுத் தர வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கு இருக்கின்றது. அதனாலேயே தனியாக அஞ்சி அஞ்சி வாழுகின்ற பிள்ளைகளை சுதந்திரமான பிள்ளைகளாக வாழ வைக்க முடியும்.

வேறு உணர்வுகள் உள்ள இரு மனிதர்களை நாம் கட்டுப்படுத்தி இணைத்து வைக்கின்ற போதுதான் விருப்பமில்லாது எப்படியோ வாழ்கின்றோம் என்கின்றார்கள். இவர்கள் ஒன்றாக வாழ்கின்றார்கள். ஒன்றாகவா வாழ்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. அதுபோல் பல விவாகரத்துக்களும் நடைபெறுகின்றன. அதைவிட அவர்களின் மனதுக்கு ஏற்ப வாழ்ந்தார்களேயானால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

மனித உணர்வுகளை ஏற்றுக் கொள்ள முடியாது போகின்ற போது என்னால், என்னுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை பெற்றோர்களும் உதவி செய்கின்றார்கள் இல்லை என்று நினைக்கும் ஒரு பிள்ளைக்கு உணர்ச்சிக் கட்டுப்பாட்டுப் பிரச்சினை ஏற்படுகின்றது. தம்மைத் தாமே வருத்தி கைகளிலே பிளேட்டினால் கீறித் தம்மைக் காயப்படுத்துகின்றனர். உணர்வுகள் கட்டுப்படுத்தி முறையான குடும்ப வாழ்க்கைக்குள் நுழைபவர்களாலேயே விவாகரத்துக்களும், தற்கொலைகளும் அதிகரிக்கின்றன.

நாம் ஆண் பெண் என்று புறக்கண்ணால் காண்கின்ற மனிதர்களுக்குள் எத்தனையோ மாறுபாடுகள் இருக்கின்றன என்பதை எம்மால் மேலோட்டமாக அறிய முடியாமல் இருக்கின்றது. கடவுள் தந்த உணர்வுகளை மாற்றுவது தப்புத்தானே என்கின்றார்கள். அது கொலைக்குச் சமம் அல்லவா. இது எனக்கு செட் ஆகின்றது. அதை மாற்றுவது கொலையை விட துரோகமானது என்கின்றார்கள். அதனால் இன்று நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய அவசியத்துக்குள் ஆளாகி இருக்கின்றோம்.

533 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *