கவியரங்குக்கோர் கந்தவனம் கவிஞரை வெற்றிமணியும் வாழ்த்தி மகிழ்கின்றது.
.
இயல்வாணன்
——‐————
கவியரங்குக்கோர் கந்தவனம் என இரசிகமணி கனகசெந்திநாதனால் சிறப்பிக்கப்படுமளவுக்கு ஒரு காலத்தில் சந்தெவெழில் தவழும் கவிதைகளால் அரங்கை அதிர வைத்தவர் கவிஞர் வி.கந்தவனம். கவிஞராக, பாடநூல் எழுத்தாளராக, நடிகராக, பல்துறை அறிஞராக, பேச்சாளராக, சமயச் சொற்பொழிவாளராக, கல்வியியலாளராக, சிறுவர் இலக்கியகர்த்தாவாக பல நிலைகளில் கலை இலக்கியத்துக்கும் சமூகத்துக்கும் பெருந் தொண்டாற்றியவராக அவர் விளங்குகின்றார்.
28-10-1933 அன்று நுணாவில் மேற்கு, சாவகச்சேரியில் பிறந்த விநாயகர் கந்தவனம் தனது ஆரம்பக் கல்வியை நுணாவில் மேற்கு கணேச வித்தியாசாலையிலும் (இன்று நுணாவில் மேற்கு அ.த.க.பாடசாலை – மூடப்பட்டுள்ளது) இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும் நிறைவு செய்தார்.
சிரேஷ்ட பாடசாலைச் சான்றிதழ் பரீட்சையில் (எஸ்.எஸ்.சி) சித்தியடைந்த அவர் ஓராண்டு டிறிபேக் கல்லூரியில் எழுதுவினைஞராகக் கடமை புரிந்தார். இக்காலத்தில் வடமாநில ஓவியப் பரிசோதகர் கனகசபையிடம் ஓவியமும், சங்கீத பூஷணம் நடேசனிடம் சங்கீதமும் பயின்றார்.
பின்னர் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும், கோவை அரசினர் கலைக்கல்லூரியிலும் தனது மேற்கல்வியைத் தொடர்ந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங் கலைமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
1958ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இணைந்து கொண்ட அவர் 6 ஆண்டுகள் மாத்தளை சென்.தோமஸ் கல்லூரியில் கற்பித்து, இடமாற்றம் பெற்று வந்து வயாவிளான் மத்திய கல்லூரியில் கற்பித்தார். குரும்பசிட்டி அவர் திருமண பந்தத்தால் புகுந்த இடமாயிற்று.
கல்வி அமைச்சின் பாடநூற் சபையில் பணியாற்றியதுடன் அரச புவியியல் பாட நூல் எழுத்தாளர் குழுவில் ஒருவராகக் கடமையாற்றினார். புவியியல் பாடத் துணைநூல்களையும்(1970) எழுதினார். 1973ஆம் ஆண்டு அதிபர் நியமனம் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் யோகபுரம் மகாவித்தியாலயத்தில் பணியாற்றினார். ஆசிரிய ஆலோசகராகவும் கடமை புரிந்தார். பின்னர் அளவெட்டி அருணோதயக் கல்லூரியிலும் சிறிது காலம் அதிபராகக் கடமையாற்றினார்.
கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். இந்தக் காலங்களில் பட்டப்பின் கல்வி டிப்புளோமா தகைமையைப் பெற்றார். இலங்கையில் க.பொ.த. உயர்தரத்தில் நாடகவியல் ஒரு பாடமாக ஆரம்பிக்கப்பட்ட போது தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு இலங்கைப் பல்கலைக்கழக கொழும்பு வளாகத்தில் நாடக டிப்புளோமா பயிற்சி வழங்கப்பட்டது. அதில் இவர் பங்குபற்றிச் சிறப்புச் சித்தியடைந்ததுடன் வடபுலத்தில் முதன்முதலில் (வயாவிளான் மத்தியகல்லூரியில்) நாடக பாடத்தைக் கற்பித்த ஆசிரியராக இவர் விளங்கினார். அத்துடன் நாடக பாட ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கும் வளவாளராகவும் விளங்கினார்.
உயர் ஆங்கில டிப்புளோமா படிப்பையும் நிறைவு செய்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். இவ்வாறு எல்லாத் துறைகளிலும் ஆழ்ந்தகன்று கற்ற அறிவும், அனுபவமும் அவரை ஒரு அறிஞனாகவே ஆக்கியது. 1980ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு கற்பித்தல் பணிக்காகப் பயணமான அவர் அந்நாட்டின் டிரான்ஸ்கி பிராந்தியத்தில் (நெல்சன் மண்டெலா பிறந்த இடம்) புனித கத்பேட்ஸ் உயர் பாடசாலையில் மானிடவியல்துறைத் தலைவராகக் கடமையாற்றினார். 1988ஆம் ஆண்டு கனடாவுக்குச் சென்ற அவர் இன்றுவரை அங்கு வாழ்ந்து வருகிறார்.
1948ஆம் ஆண்டு தனது 15வது வயதில் ஈழகேசரியின் சிறுவர் பகுதியில் ‘ஒரு கால் மூன்று தலை’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையுடன் இவர் இலக்கிய உலகுக்குள் நுழைந்தார். 1952இல் ஈழகேசரி பொதுநலவாய பொருட்காட்சி தொடர்பில் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதற்பரிசைப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. 1954ஆம் ஆண்டு இவரது முதலாவது நூலான ‘ஒன்றரை ரூபாய்’ குறுநாவல் வெளிவந்தது. இதனை கவிநாயகன் என்ற புனைபெயரில் எழுதினார்.
பல்வேறு துறைசார்ந்து 50ற்கு மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். வித்தியானந்தமாலை, அரும்பு,பூச்சரம், தேவைக்கேற்ற திருமுறைத் திரட்டு உள்ளிட்ட பல நூல்களைத் தொகுத்துள்ளார்.
கீரிமலையினிலே குறுங்காவியம்(1969), பாடுமனமே கவிதைகள் (1972),
இலக்கிய உலகம் கவிதைகள்(1964),
ஏனிந்தப் பெருமூச்சு கவிதைகள்(1965),
கூனியின் சாதனை கட்டுரை (1966),
நுணாவிலூர் இடவரலாறு(1971),
உய்யும் வழி அரங்கக் கவிதைகள்(1972), கவியரங்கில் கந்தவனம்(1972),
நல்லூர் நாற்பது(1971), முறிகண்டிப் பத்து, குரும்பசிட்டி விநாயகர் பத்து,பரீட்சையில் சித்தியடைவ தெப்படி?(1972),இலங்கையில், ஆசிரியத் தொழில்(1977),விநாயகப்பா பக்திப் பனுவல்(1993), ஒன்றுபட்டால் நாட்டிய நாடகம்(1994), மணிக்கவிகள்(1994), இயற்கைத்தமிழ்(1995), எழுத்தாளர்(1995), முத்தான தொண்டர்(1995), புதிய சைவ வினாவிடை(1997),தங்கம்மா நான்மணிமாலை(1997), பத்துப் பாட்டு(1998), ஆறுமுகம்(1998),
12 Short stories (1998) Lasting Lights(1998), சிவபுராண தத்துவம்(1998), கனடாவில் சைவசமயம்(2000),
அது வேறுவிதமான காதல்(2001), சிவவழிபாடு(2002),கந்தன் கதை(2002), ஓ கனடா(2002), வரிக்கவிகள்(2002),
தமிழ்க் கவிதை மரபு(2005), பொங்குதமிழ்(2005), ஆன்மீகக் கவிதைகள்(2007), பாவாரம்(2007),கவிநாயகம் வாழ்வும் வரலாறும் வானொலி தொடர் நேர்காணல்(2009) முதலான நூல்கள் குறிப்பிடத்தக்கன. ஆலயங்கள் பலவற்றுக்கும் – குறிப்பாக கொல்லங்கிராய் விநாயகருக்கு – பல சிறுநூல்களை எழுதியுள்ளதுடன் சிறுவருக்கான சமயக் கதைநூல்களையும்(கந்தனும் ஒளவையாரும், விநாயகப் பெருமானும் அகத்தியரும்) எழுதியுள்ளார். இவ்வாறு தமிழன்னைக்கு மகுடம் சூடும் பல படைப்புகள் மூலம் தனது பல்துறை ஆளுமையை வெளிக்காட்டியுள்ளார்.
யாழ்.இலக்கிய வட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய கவிஞர் கந்தவனம் எட்டு ஆண்டுகள் அதன் தலைவராகவும் கடமையாற்றினார். தான் வாழ்ந்த, பணியாற்றிய இடங்களில் இலக்கிய மன்றங்களை உருவாக்கியுள்ளார். கவிமணி, மதுரகவி, இலக்கிய வித்தகர், சைவதுரந்தரர் முதலான 20ற்கும் மேற்பட்ட பட்டங்கள் வழங்கி தமிழுலகம் இவரைக் கௌரவித்துள்ளது. தனது ஆழ்ந்தகன்ற அறிவால் தமிழிலக்கியத்துக்கு வளஞ்சேர்த்த கவிஞர் வி.கந்தவனம் 90 அகவையில் கனடாவில் வசித்து வருகிறார். தமிழுக்கு அணி செய்யும் கவிஞரை நாமும் வாழ்த்துவோம்.பி.கு.கவிஞர் வெற்றிமணியில் 50 வருடங்களுக்கு மேலாக எழுதிவருபவர்.சிவத்தமிழ் சஞ்சிகையின் கௌரவ ஆசிரியரம் கூட.
534 total views, 3 views today