முல்லை.பொன்.புத்திசிகாமணியின் சொல்லோவியம் “சின்னாச்சி மாமி”
- உடுவை.எஸ்.தில்லைநடராசா
கொள்ளை எழில் கொஞ்சும் முல்லை மாவட்ட மக்களை மனக்கண்ணால் காண வைக்கும் “சின்னாச்சி மாமி”
தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு நீர் உற்பத்திகளை அனுப்பக்கூடிய செழிப்பான கடல்வளம், சின்ன வெண்காயம், உறைப்பான மிளகாய், எங்கும் எப்போதும் சுவைக்கக்கூடிய நிலக்கடலை, தரமான கூரை ஓடுளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ள மாவட்டமாகிய முல்லைத்தீவில்.வற்றாப்பளை அம்மன் ஆலய திருவிழாக்காலத்தில் விளக்கு கொழுந்து விட்டு எரியக்கூடிய அற்புதமான நீரையும் நந்திக் கடலிலிருந்து பெற்றனர். இலங்கையில் போராட்டம் சிறிது சிறிதாக அதிகரித்துச் சென்ற போது பலர் வவுனியா கிளிநொச்சி மாவட்ட கரையோரங்களிலும் முல்லைத் தீவிலும் குடியேறத்தொடங்கினர்.
பயங்கரமான போராட்டத்தால் சொத்துகளையும் உயிரையும் இழக்க நேரிடலாம் என அஞ்சியோர் முன்பின் பழக்கமில்லாத நாடுகளுக்கும் புலம் சிதறத்தொடங்கினார்கள். பொன். புத்திசிகாமணி தான் பிறந்த முல்லை மண்ணையும் அங்கு வாழும் மக்களையும் இடைவிடாமல் நேசித்து கொண்டிருக்கிறர் என்பதை அண்மையில் “ஜீவநதி” வெளியீடாக வந்த நூலில் உள்ள “சின்னாச்சி மாமி”-“பூமணி மாமி”-“சங்கு அக்கா”-வேட்டையும் வேடிக்கையும்”-“அம்மா உன்னை நினைத்து” ஆகிய கதைகளில் காணக்கூடியதாக இருக்கிறது.அதே வேளை புலம் பெயர்ந்து வாழும் ஜேர்மன் தேசத்தின் நடவடிக்கைகளையும் அவதானிக்கிறார் என்பதையும் “தாய்மை ஒருவரம்”- “துணை இழத்தல்”-“ஈர்ப்பு” ஆகிய மூன்று கதைகளாலும் அறிய முடிகிறது.
புலம் சிதறி வாழ்பவர்களில் சிலர் ஊர் மண்ணையும் உறவுகளையும் மறவாமல் சந்தர்ப்பங்ளை வரவழைத்து, ஊரைப்பற்றி உறவுளைப்பற்றி விசாரித்து தம்மால் முடிந்த உதவிகளைச்செய்கிறார்கள்.
முல்லைத்தீவில் தமிழ் மக்களோடு முஸ்லிம் மக்களும் மிகநெருக்கமாக பழகி வந்தார்கள் என்பதால் முஸ்லிம் மக்களும் புத்திசிகாமணியின் கதைகளில் முக்கிய இடத்தை பெறுகிறார்கள். தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து உறவாடி சந்தோஷமாக கழித்த காலங்கள் சில நினைவுக்கு வருகிறது சந்தோசமான கதைகள் மாத்திரமில்லாமல் சங்கடமான கதைகளையும் இந்த நூலில் பார்க்கலாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்த சம்பவங்களும் பதிவாகியுள்ளது குழப்ப நிலையில் குடும்பங்களாக பிற நாடுகளுக்கு சென்ற பலரையும் இவரது பதிவுகளில் காண முடிகிறது.
எங்குசென்றாலும் மறக்கமுடியாத இடங்ளை- மக்களை- நிகழ்வுளை நினைவூட்டும் சொல்லோவியமான “சின்னாச்சி மாமி”யில் முல்லை மக்களின் உணவு முறையும் சற்று வித்தியாசமானது தான். விருந்தினர் என்று யாரும் வந்துவிட்டால் நேர காலம் பார்க்காது நள்ளிரவானாலும் அவர்களை நன்கு உபசரித்து அனுப்புவார்கள். அது மட்டுமல்ல ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் காலை முதல் மாலை வரை தொழில் செய்து அதன் மூலம் பெறும் வருமானத்தை கொண்டு வாழ்க்கை நடத்துவதையும் காணலாம் அவர் கதைகளில் காணலாம்.
சில கதைகள் இன்னும் நினைவில் நிலைத்து நிற்கின்றன குறிப்பாக “தேரோடும் வீதி” சற்று வித்தியாசமான கதை. காட்டுப்பக்கம் தனியாகச் சென்ற இளம்பெண் ஒருத்தியின் காதல் கதை. காட்டில் அழகான ஆண் ஒருவனை சந்திக்கின்றாள். ஆணும் பெண்ணும் இரவு வேளைகளில் தனியாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் விரும்பிய போதும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இருவரும் தவறாக நடக்காத ஒரு கதை.
சாதாரணமாக இந்த நாட்களில் சந்தர்ப்பத்தை தவறாகப் பயன் படுத்தி உறவு ஏற்படுத்துவதைக் காணலாம். புத்தியின் கதையில்அப்படி எதுவும் இல்லை என்பது குறிப்பிடக் கூடியது.
அந்த நாட்களில் கொழும்பிலிருந்து முல்லைத்தீவு போக வேண்டுமானால் யாழ்ப்பாணம் போகும் புகையிரத்ததில் புறப்பட்டு மாங்குளம் அல்லது பரந்தனில் இறங்கி பஸ்ஸில் போவது பற்றியும் எழுதியுள்ளார். முல்லை மக்கள் முகம் கொடுத்த பிரச்சினைகள்- போர்கால சிக்கல்கள்-குண்டு வீச்சுகளால் அவலப்பட்டு சிதறியோடிய சம்பவங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளது. உறவுகளுடனும் இனத்துடனும் சேர்ந்து வாழ முடியாத நிலை, கொடுமை கொடூரம், இறப்புகள், இழப்புகள், கவலை, கண்ணீர், என உண்மைச் சம்பவங்களை அப்படியே மனத்திரையில் காட்டத்தக்க வகையில் தனித்துவமான கதைகளாக படைத்துள்ளார்.எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டிய பல நிகழ்வுகளும் இந்நூலில் பதிவாகியுள்ளது
591 total views, 3 views today