யேர்மனியில் திருவள்ளுவர் சிலை – ஒப்பந்தம் கைச்சாத்தாகியது
கடந்த 28.08.2023 திங்கட்கிழமை அன்று தமிழர் அரங்கத்தில் திருவள்ளுவர் சிலை சம்பந்தமான முக்கியமான ஒப்பந்தம் ஒன்று எமக்கும் நகரசபைக்கும் இடையில் கைச்சாத்தாகியது. நாம் வழங்கும் திருவள்ளுவர் சிலையை ஏற்றுக் கொள்வதுடன் பராமரிப்பையும் நகரசபை பொறுப்பேற்கும் என்பது ஒப்பந்தத்தின் சாராம்சமாகும்.
திருவள்ளுவர் சிலை தமிழர்களின் கடைகள் பெருவாரியாய் அமைந்துள்ள Rheinische Str வீதியில் அமைக்கப்படுகிறது.
இவ் ஒப்பந்தத்தில் டோட்முண்ட நகரசபை சார்பில் அதன் நகர இயக்குனரும் கலாச்சார அலுவல்களுக்கு பொறுப்பானவருமான திரு ஜோர்க் ஸ்ருடமன் அவர்கள் கைச்சாத்திட்டார். எம் பக்கத்தில் இருந்து தமிழர் அரங்கம் நிர்வாகிகளான திருமதி கலைநிதி சபேசன் அவர்களும், திரு சுப்ரமணியம் பாக்கியநாதன் அவர்களும் கைச்சாத்திட்டார்கள்.
டோட்முண்ட் நகரத்தில் திருவள்ளுவர் சிலையை அமைப்பதற்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தமிழ் மக்களுக்கு தெரிவிப்பதாக நகர இயக்குனர் திரு ஜோர்க் ஸ்ருடமன் அவர்கள் கூறினார். தமிழ் மக்களுக்கு டோட்முண்ட் நகரசபை வழங்குகின்ற ஆதரவிற்கு நாமும் நன்றியை தெரிவித்தோம். சிறு கலந்துரையாடலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு செய்ய வேண்டிய அலுவலகரீதியான பணிகள் இவ் ஒப்பந்தத்துடன் பெருமளவு நிறைவுக்கு வந்துள்ளன. இன்னும் ஓரிரு வாரங்களில் சிலை வைப்பதற்கான பீடத்திற்கான அத்திவாரம் தோண்டுகின்ற வேலைகள் ஆரம்பமாக உள்ளன. மறுபுறம் திருவள்ளுவர் சிலையும் செய்யப்படுகின்றது.
திருவள்ளுவர் சிலை அமைக்கும் உயரிய பணியில் அனைவரையும் இணையும்படி அன்போடு அழைக்கின்றோம். உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள்.
சிலை திறப்பு விழாவின் போது பங்களித்தவர்களின் பெயர் விபரங்களோடு முழுக் கணக்கறிக்கை வெளியிடப்படும்.
Verein fuer tamilsche Kuenstler e.V.
Volksbank Dortmund Nord West
DE09 4406 0122 4086 4321 00
GENODEM1DNW
இதுவே எமது வங்கி இலக்கம்
எல்லோரும் இணைந்து திருவள்ளுவருக்கு ஒரு சிலை அமைப்போம்.
1,028 total views, 2 views today