வெற்றிமணி வெளியீடு 28

யேர்மனியில் தமிழர் அரங்கம் நிறைந்து வழிந்தது!
‘வைகல்’ நூல் ஆசிரியர் : கரிணி
கடந்த 24.09.2023 யேர்மனியில் வெற்றிமணி பத்திரிகையின் 28 வது நூல் வெளியீடாக கரிணி கண்ணன் அவர்களின் வைகல் நூல் வெளியீட்டு விழா, மண்டபம் நிறைந்த மக்களோடு சிறப்பாக நடைபெற்றது.
மேலும் விழா Dortmund தமிழர் அரங்கத்தில் பிற்பகல் 4.30 மணிக்கு மங்கல விளக்கேற்றல், தேவாரம், அகவணக்கம், தமிழ் தாய்வாழ்த்து, வரவேற்பு நடனம் இவற்றுடன் ஆரம்பமானது.
கரிணி அவர்கள் கடந்த 7 வருடங்களாக வெற்றிமணி பத்திரிகையில், இயற்கை, யோகாப்பயிற்சி, உடல், மனம், ஆரோக்கியவாழ்வு சம்மந்தமாக பல கட்டுரைகளை எழுதி வருபவர்.
அவர் எழுதியவற்றுள் சில தெரிவு செய்யப்பட்டு, வைகல் என்ற பெயருடன் நூலுருப்பெற்று இன்று வெளியானது.
நூல் ஆய்வினை நூலாசிரியர் அவர்களின் ஆசிரியர் கௌரி ஜெயக்குமார் அவர்கள் சிறப்பாக ஆய்வுசெய்தார். வெளியீட்டு உரையை வெற்றிமணி பத்திரிகை ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தன்னுரையில் கரிணியின் முதல் அறிமுகம் நடந்த இதே மண்டபத்தில் அவர் நூலை வெற்றிமணி வெளியிடுவது மகிழ்ச்சி எனவும், வெற்றிமணி யின் வெளியீட்டு பாரம்பரியம் பற்றியும் சுருக்கமாக குறிப்பிட்டு. நூலுக்கு அணிந்துரை, தந்த முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், அவர்களுக்கும், அறிவுரைகள் தந்த பேராசிரியர் அ. சண்முகதாஸ், ஆசியுரை தந்த செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
வாழ்த்துரைகளை பல இலக்கிய நண்பர்கள் வழங்கினர். நூலின் முதல் பிரதியை கலைவிளக்கு சு. பாக்கியநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார். மேற்படி விழாவில், வெற்றிமணி தயாரிப்பான ‘எழுதாத கவிதைக்கு முதல் பரிசு’ மற்றும் ஆமாசாமி ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.
படத்தின் கருவும், காட்சிகள் நடிப்பு சிறப்பாக இருந்தன, டப்பிங்குரல் இந்திய தமிழ் மக்கள் குரல் தாயகத்தின் குரலோடு அந்நியப்பட்டு இருந்ததாக இயக்குனர் வி.சபேசன் தன் கருத்தை முன்வைத்தார். இசையை பலரும் பாராட்டினர். அதனைத் தொடர்ந்து நூலாசிரியரின் கரிணி அவர்களின் பதிலுரையுன் விழா நிறைவுற்றது. நிகழ்ச்சிகளை சகநாயகன் சக்திவேல் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார். அனைவருக்கும் இராபோசனம் வழங்கப்பட்டது. மக்கள் நிறைந்த ஒரு கூட்டமாக, வெற்றிமணி வெளியீட்டு விழா முத்திரை பதித்தது. படங்கள்: ஆன்மிகத் தென்றல் த.புவனேந்திரன்.,சிவநேசன்