பேசும் படம்

ஜவான் திரைப்படம் வசூலில் கலக்கி வருகிறது.

ஷாருக்கானுக்கு முத்தம் கொடுத்த தீபிகா படுகோனே..!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், விஜய்சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7-ஆம் திக­தி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜவான். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கலக்கி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்த ஜவான் திரைப்படம் வசூலில் கலக்கி வருகிறது. உலகம் முழுவதும் வசூலில் இப்படம் தற்போது வரை ரூ.700 கோடியை எட்டியுள்ளது. இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பை ஜவான் படக்குழு நடத்தினர். நன்றி சொல்லும் விதமாக இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஷாருக்கான், தீபிகா படுகோனே, அனிருத், அட்லீ என பலரும் கலந்துகொண்டனர்.

அட்லீ உள்ளிட்ட அனைவருக்கும் ஷாருக்கான் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்வில் சில ஜாலியான நிகழ்வுகளும் நடைபெற்றன. குறிப்பாக, ஜவான் வெற்றிக்காக ஷாருக்கானை கட்டியணைத்து நடிகை தீபிகா படுகோனே, சர்ப்ரைஸாக முத்தம் கொடுத்து அசத்தினார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

00

தொழில் அதிபராக நயன்தாரா…!

நடிகர் – நடிகைகள் சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட், கட்டுமானம், நகை வியாபாரம், ஓட்டல்கள் என்று பல தொழில்களில் பணத்தை முதலீடு செய்து வருமானம் பார்க்கிறார்கள்.
இந்த வரிசையில் தமிழ், திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாராவும் தொழில் துறையில் இறங்கி இருக்கிறார். ஏற்கனவே கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து படங்கள் தயாரிக்கிறார். கேரளாவில் பல ஏக்கரில் நிலங்கள் வாங்கி போட்டுள்ளார்.

வீடுகள், அலுவலகங்கள் கட்டி வாடகைக்கு விட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டார். தற்போது வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து சரும பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் இறங்கி இருக்கிறார். இதன்மூலம் சர்வதேச தொழில் அதிபராக மாறி இருக்கிறார்.

00

சினிமாவில் வளர்த்துவிட்ட ரஜனி கமல் நட்பு

நடிகர் கமல்ஹாசன் துபாயில் நடந்த திரைப்பட விருது வழங்கும் விழா நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அப்போது கமல்ஹாசன் பேசும்போது, “ரஜினிகாந்த் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். உடனே, ‘என்னங்க..அவர் (ரஜினிகாந்த்) படம் பண்றாரு?…’ என்று கேட்கிறார்கள். அப்படி கேட்பவர்களுக்கு அவ்வளவுதான் தெளிவு.

எனக்கும், ரஜினிகாந்துக்கும் இடையேயான நட்பு, இதற்கு முன்னதான தலைமுறையில் இல்லை என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அந்த சவாலை நாம் பின்னோக்கி விட்டதற்கான காரணம், இனி வரமாட்டார்கள் என்ற சாபமாக கொடுக்காமல், இதனை வாழ்த்தாக சொல்லிக்கொள்கிறேன்.

எங்களுக்குள் இருக்கும் அந்த நட்புதான் எங்கள் சினிமா வாழ்க்கையையே வளர்த்தது என்றால் அது மிகையாகாது, என்றார்.

000

36 ஆண்டுகளுக்குப் பிறகு கமலின் ‘பேசும் படம்’

சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், நடிகை அமலா ஆகியோர் நடித்த ‘பேசும் படம்’ என்ற திரைப்படம் கடந்த 1987-ம் ஆண்டு வெளியானது. கன்னடத்தில் ‘புஷ்பக விமானா’ என்ற பெயரில் ரிலீசான இந்த படம் வசனங்கள், பாடல்கள் என எதுவும் இல்லாமல் காதல், நகைச்சுவை, ஆக்ஷன் என அனைத்தும் கலந்து வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனையும் புரிந்தது. இந்நிலையில் தற்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமலின் ‘பேசும் படம்’ மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இதனை கமல்ஹாசனுக்கு சொந்தமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

593 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *