நமது கதைகளை முழுவதுமாக ஒதுக்க நினைக்கிறன பேரினவாத சக்திகள்.
சர்மிலா வினோதினி
யாழ் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியானது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய நிர்வாகத்தின் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கிலிருந்து வெளிவருகிற ஆங்கில நாளிதள் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம், பொலிஸ் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு ஆகியவை இணைந்து பல்வேறு பல்கலைக்கழக அலுவலர்களிடம் இருந்து அறிக்கைகளை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாசித்துவிட்டு இலகுவில் கடந்து சென்றுவிட முடியாத செய்தி இது. வடக்கில் பிறந்து வளர்ந்து யுத்த காலத்தில் கல்வி கற்று அதே நிலத்தில் வாழ்ந்து வருகிற இந்த நாட்டின் பிரஜை என்கிற வகையில் மேற்குறித்த செய்தி அதிக கவனத்திற்குரியதாகிறது.
போரிலே உயிர் நீத்தவர்களின் நினைவாக நடுகல் அமைத்து வழிபடுகிற மரபு காலம் காலமாக நம்மிடம் இருந்து வருகிறது. சங்க காலத்தின் வழி தொடர்ந்து வருகிற இம் மரபை ஒட்டியே கிராமியத் தெய்வ வழிபாடுகள் தோற்றம் பெற்றன என்கிறார்கள் மானுடவியலாளர்கள். இப் பின்னணியில் யாழ் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய நினைவுத் தூபியானது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சின்னமாகும். இது இத் தூபியின் பின்னே இந்த நிலத்தின் வரலாறும் உளவியலும் வலுவான சமூக இருப்பின் அடையாளமும் பொதிந்து உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய வலுவான உண்மையாகும். வலிமையான மாணவ சமூகத்திற்கு இந்த நிலத்தின் கதைகளை எதிர்வரும் காலத்திலும் எடுத்துச் சொல்லுகிற சின்னமாகும். எனவே இதற்கு எதிராக நிகழ்த்தப்படுகிற திட்டமிட்ட அழித்தல் செயற்பாடுகளை உரிய முறையில் முறியடிக்க வேண்டியது பல்கலைக்கழக சமூகத்தினது மட்டுமன்றி புத்திஜீவிகள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
இன அழித்தல் என்பது வெறுமனவே ஒரு சமூகத்தின் மனிதர்களை அழிப்பது மட்டுமல்ல, மாறாக அந்த இனக்குழு சார்ந்திருக்கக் கூடிய அடையாளங்களை மெல்ல மெல்ல அழித்து இனத்தின் இருப்பினை சிதைப்பதுமாகும், இதனையே காலம் காலமாக நிகழ்த்திவருகிறது இலங்கை அரசு. ஒருபுறம் தமிழ் மக்களின் உணர்வுகளில் பதியக்கூடிய எச்சங்களை சிதைப்பது, வரலாற்றின் கதைகளை திரிபு படுத்துவது, வரலாற்று எச்சங்களை மாற்றி அமைப்பது மற்றும் இளைய சமூகத்தினுடைய போக்குகளை மாற்றக்கூடிய நிகழ்ச்சி நிரல்களை அரங்கேற்றுவது என்று தொடர்கின்றன நிகழ்ச்சி நிரல்கள். தெரிந்தோ தெரியாமலோ இத்தகைய செயற்பாடுகளுக்கு நமது சமூகமும் பங்குதாரர்களாகி விடுகிறது என்பதுதான் வேதனை.
யாழ் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியை இடித்து அழிப்பதன் ஊடாக எதிர்கால பல்கலைக்கழக மாணவ சமூகத்திடம் இருந்து நமது கதைகளை முழுவதுமாக ஒதுக்க நினைக்கிறன பேரினவாத சக்திகள். ஆனால் யுத்தம் முடிவுற்றதாக சொல்லப்பட்டு இத்தனை ஆண்டுகள் கடந்திருக்கக் கூடிய நிலையில் உடல் உள பாதிப்புக்களோடும் சந்ததிகள் கடந்தும் கடத்தப்படக் கூடிய மன அழுத்தங்களோடும் மக்கள் உலவுகிற இடங்களில் யுத்த வெற்றிச் சின்னங்களை அமைத்திருக்கிறது இலங்கை அரசு. உதரணமாக இறுதி யுத்த காலப் பகுதியில் அதிக பாதிப்புக்களை சந்தித்த கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனையிறவில் நிமிர்ந்து நிற்கிறது வெற்றிச் சின்னம், கிளிநொச்சி நகரின் மத்தியில் முன்னைய சந்திரன் பூங்கா வளாகத்தில் துப்பாக்கி ரவையொன்று மோதியதால் வெடித்து ஏற்பட்டிருக்கிற இடைவெளியினூடாக தாமரை மலர் ஒன்று மலர்ந்திருப்பதைப்போல வெற்றிச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டு அதற்கு அருகில் காவல் அரண் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. பரந்தன் முல்லைத்தீவு வீதியூடாக புதுக்குடியிருப்பிற்குச் செல்லுகிற பாதைக்கு அருகில் சட்டித்தொப்பி அணிந்த இராணுவத்தினர் இருவர் இலங்கைத் தேசிய கொடியை தூக்கி நிறுத்துவதைப்போன்ற யுத்த களிப்புச் சின்னம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. மேற்சொன்ன யுத்த வெற்றிச் சின்னங்களுக்கு அருகில் உள்ள வீதியூடாகச் செல்லுகின்ற சிங்கள சுற்றுலாப் பயணிகள் குறித்த சின்னங்களுக்கு அருகில் சென்று புழகாங்கிதத்தோடு ஒளிப்படங்கள் எடுப்பதையும் சமூக வலைத்தளங்களில் பகிர்வதையைம் கண்டிருக்கிறேன். இவை எவற்றை குறிக்கிறது?
ஒரு நாட்டில் யுத்தம் நிகழுகிறபோது வெற்றியும் தோல்வியும் நிகழும், ஒரு பகுதி வெற்றியடைந்தால் நிச்சயமாக இன்னும் ஒரு பகுதி தோல்வியை சந்திக்கும். இது நியதி. ஆனால் இந்த நாட்டைப் பொறுத்தவரை உலக வல்லாதிக்க சக்திகளின் துணையோடு திட்டமிட்டு இன அழிப்பு செய்யப்பட்ட ஒரு இனத்தின் கண்ணீர்த் தடங்கள் காய்வதற்கு முன்பாக அந்த இனத்தின் எஞ்சிய உணர்வுகளைத் தீண்டும் வகையிலான இத்தகைய வெற்றிச் சின்னங்களின் நிர்மாணிப்பும், நினைவுச் சின்னங்களின் மீதான அழிப்பு அழுத்தங்களும் எரிகிற தழலில் எண்ணை ஊற்றுவதாகத்தான் முடியுமே அன்றி இந்த நாட்டின் சுபீட்சமான இன இணக்கப்பாட்டிற்கு வழிகோலும் என்று கனவிலும் நினைக்க முடியாது.
687 total views, 6 views today