வீடு தலைகீழாய்க் கிடக்கு.
-மாதவி
கொஞ்சநேரம் நான் வீட்டில் இல்லை என்றால் போதும், வீடு தலைகீழாக்கிடக்கும்.
வீடுகட்ட வெளிநாட்டில் இருந்து காசு அனுப்பி, வந்துபார்த்தால் நான் நினைத்ததுக்கு,தலைகீழாக வீடு கட்டிவைத் திருக்கிறான்.
இப்படியாக வீடு தலைகீழாய்க்கிடக்கு என்பதன் அர்த்தம் வேறு வேறு.
ஆனால். இங்கு நேராகவே அர்த்தம் தலைகீழ் வீடுதான். உண்மையாகவே தலைகீழாக கட்டப்பட்ட வீடு இது.
அட தலைகீழாக கட்டப்பட்ட ஒரு வீடு வெளியில் நின்று பார்த்தால் அப்படியே தலைகீழாக வீடு தெரியும்.
கட்டிடக்கலையில்,ஒற்றைத்தூணில், வீடு, மரத்தின் உச்சியில் வீடு, மலையின் உச்சியில் வீடு, கடலின் நடுவே வீடு, இப்படி புதுமை படைக்வேண்டும் என எண்ணும் மனித மூளையில் உதித்தது தான் இந்த தலைகீழ் வீடு.
இது துருக்கியில் அன்ராலியா மாகாணத்தில் அமைந்துள்ளது.
இதுபோல் பல நாடுகளில் அமைந்திருந்தாலும், இந்த தலைகீழ் வீட்டையே நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கடந்த 6.10.2023 கிடைத்தது.
ஒரு படம் வெளியே நின்று, அந்த வீடு தலைகீழாக இருப்பதை எடுத்தாச்சு. இனி ஏன் உள்ளுக்குள் சென்று எதைப் புதிதாகப் பார்க்கப் போகின்றோம்? என்ற எண்ணம் வீடு பார்ப்பதற்கான அனுமதிச் சீட்டைப் பெறும் போது யாவருக்கும் தோன்றும். (ஒருவருக்கு 12€.) அரை மனத்துடன் படி ஏறி உள்சென்றால், ஒரு வீடு கட்டப்பட்ட பின் தலைகீழாக மாற்றினால் எவ்வாறு இருக்குமோ. அதுபோல் ஒவ்வொன்றையும்,கட்டில், முதல் பாத்ரூம் வரை அணுவளவும் விலகாமல் சிறப்பாக யாவற்றையும், தலைகீழாக அமைத்து இருந்தனர்.
இங்கு தலைகீழாக தொங்கும், கதிரை, கட்டில், மேசை இந்த வீட்டை தலைகீழ் என உணர்த்துவது, ஒரு புறம் என்றால், மறுபுறம் கண்ணை மூடி நடந்தாலும் அதே உணர்வு ஏற்படும் வண்ணம். அதாவது தலைகீழாக நடப்பது போல் இருக்க வீட்டின் தளம் சரிவாகவும் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே தட்டுத் தடுமாறி நடக்கவேண்டி உள்ளது. இது நாம் தலைகீழாக இருக்கும் உணர்வைத்தருகின்றது.
மேலே தொங்கும் ஒரு பொருளைத் தொட்டபடி, படம் எடுக்கவும், பின் அப்படத்தை, தலைகீழாக மாற்றுங்கள், நீங்கள் தலைகீழாக நிற்பதுபோல் படம் வரும். சின்ன வயதில் தலைக்குத் தலையணையை வைத்துத் தலைகீழாக நின்ற ஞாபகம் எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் வரும்.
இங்கு நான் தலைகீழாக நிற்கும் படம், அங்கு நேராக எடுத்து தலைகீழாக மாற்றிய படமே.
புலம் பெயர் நாட்டில் வாழும் பலர் தாயகத்தில் பெரிய வீடுகளைக் காட்சிக்குக் கட்டிவிட்டு, வெளிநாடுகளில் வெறுங்கனவுகளுடன் வாழ்கின்றார்கள், அவர்கள் இப்படி சில தலைகீழ் வீடுகள்,அல்லது புதுமையான வீடுகளைக் கட்டி, உல்லாசப் பயணிகளது வரவைத் தூண்டலாம். எமது மாகாணங்களின் வரவும் அதிகரிக்கும்.
கடல், நீர்வீழ்ச்சி என இயற்கை அழகு இல்லாத நகரங்களில் இப்படி செயற்கையாக மக்களை கவரும் முயற்சியில் நாமும் ஈடுபடலாம். ஆனால் நம்மவர்கள் எத்தனைபேர் இதனைத் தாய்நாட்டில் பார்ப்பார்கள், அதனை ஊக்குவிப்பார்கள்,என்பது பெரும் கேள்விதான்.
அதற்கு பதிலாக யாரும் அறியும் வண்ணம் அழகுபடுத்தப்பட்ட யாழ்ப்பாணத்தில் ஆரிய குளம்,இன்று அனாதையாகக் கிடக்கிறது என்பதும் உண்மைதான். நமது மனங்களும் மாறவேண்டும். இரசனை வளரவேண்டும்.
படங்கள். வெற்றிமணி
723 total views, 6 views today