பொய்யுரைப்பார் ஒரு சினெஸ்தேசியா நோயாளியாக இருக்கலாம்.
ஒரு சிறிய பொய் தானே என்று அலட்சியம் செய்யும் பட்சத்தில்
அது காலப் போக்கில் பெரிய உண்மையாக உருவம் எடுத்துவிடும்.
கௌசி யேர்மனி
எழுத்தாளர்கள் அபர பிரம்மாக்கள் என்று சொல்வார்கள். படைப்புப் பல படைத்துப் பலருக்கும் தம்முடைய கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் பொறுப்புள்ளவர்கள். எழுத்தாளர்கள் அவ்வாறான பொறுப்பில் இருக்கும் போது உண்மைக்குப் பாடை கட்டிப் பொய்மைக்கு மகுடம் சூட்டுவது பாரிய குற்றத்தைச் செய்யும் செயலாக அமைகின்றது. இதனால், வரலாறு பொய்ப்பிக்கப்படுகின்றது. வரலாற்றைப் புரட்டிப் போடலாம் என்பது எழுத்தாலே மட்டுமே சாத்தியம்
தம்முடைய புகழுக்காகத் தம்முடைய உறவுகளையே பொய்யாளர்களாகவும் கெட்டவர்களாகவும் காட்டி புகழுக்குரிய உறவை கீழ்நிலைக்குத் தள்ளுகின்ற மக்களை கண்கூடாகக் காணுகின்றோம். ஒரு பொய்யால் இந்த உலகம் வாழும் என்றால், நன்மையே உண்டு என்றால் சொல்லாம். ஒரு நிரபராதியைக் கொல்வதற்குப் பலர் முற்படும் போது அந்நிரபராதியைக் காப்பாற்றுவதற்குப் பொய் உரைக்கலாம். இதனையே தான் வள்ளுவர்
~~பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்|| என்று கூறுகின்றார்.
பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்ய வேண்டிய காலத்திலே விராடனுடைய மத்ஸய தேசம் சென்றார்கள். அங்கு செல்வதற்குமுன் தம்முடைய பெயர்களையும் தொழில்களையும் மாற்றினர். தருமன் கங்கன் என்று பெயர் மாற்றி அரசபைப் பணியாளனாகவும், வீமன் வாலாலன் என்ற பெயரில் சமையற்காரனாகவும் அர்ச்சுனன் பிருகந்நளை என்ற பெயரில் அந்தப்புரத்தில் நடனப்பெண்ணாகவும், நகுலன் தாமக்கிரந்தி என்ற பெயரில் குதிரை மேய்ப்பவனாகவும் சகாதேவன் தந்திரீபாலன் என்ற பெயரில் பசுமேய்ப்போனாகவும், திரௌபதி சைரந்திரி என்ற பெயரிலே அந்தப்புர சேவகியாகவும் பொய்யான தோற்றத்துடன் விராடனது அரண்மனைக்குச் சென்றார்கள். இந்தப் பொய்களால் துரியோதனனுடைய ஒற்றர்களிடம் இருந்து மறைந்து வாழ முடிந்தது.
இதேவேளை பேராசிரியர் கைலாசபதி அவர்கள் அடியும் முடியும் என்னும் தன்னுடைய நூலிலே தனிப்பட்ட ஒருவரின் திரிபுணர்ச்சி அல்லது மாயை இரங்கத்தக்கதாயினும் அதிகம் அஞ்ச வேண்டியதொன்றன்று. ஆனால், ஒரு கூட்டத்தவருடைய அல்லது சமூகத்தினது பொய்மை அந்தச் சமூகத்தினருக்கு மாத்திரமல்லாது பிறருக்கும் பேராபத்து விளைவிக்கக் கூடியதாகும் என்கிறார். இங்கு இரண்டொரு எழுத்தாளர்கள் ஜெர்மனியர் ஆரிய இனத்தவர்கள் என்றும் உலகை ஆளப்பிறந்தவர்கள் என்றும் எழுதியது நாஸிகளின் தத்துமாகியது. பல்லாயிரக்கணக்கான ஜெர்மனிய மக்களும் அதை நம்பினார்கள். இதன் விளைவு உலகறிந்த கொடூரமான யுத்தம். இதேபோல பேராசிரியர் இன்னும் ஒரு உதாரணத்தை எடுத்துக் காட்டுகின்றார். இரண்டாவது உலகப் போருக்குப் பல ஆண்டுகள் முன்னிருந்து யப்பானில் இருந்த ஆளும் வர்க்கத்தினர் அந்நாட்டு அரசர் கடவுளின் குமாரர் என்ற ஐதீகத்தைத் தேசத் தத்துவமாகக் காத்தனர். இந்த மாபெரும் பொய்மையை நம்பி பல்லாயிரக்கணக்கான போர்வீரர்கள் தாம் கடவுளுக்காக இறப்பதாக எண்ணி இறுதிவரைப் போரிட்டு இறந்தனர். இவ்வாறு எழுத்தாளர்களும் மூடநம்பிக்கைவாதிகளும் முன்வைக்கின்ற பொய்மை பாரிய தாக்கத்தை உலகத்தில் ஏற்படுத்தும்.
ஒரு சிறிய பொய்தானே என்று அலட்சியம் செய்யும் பட்சத்தில் அது காலப் போக்கில் பெரிய உண்மையாக உருவம் எடுத்துவிடும். பொய்யென்றால், அது தோன்றும் போதே நிறுத்தியிருப்பார்களே! இவ்வளவு காலமும் இருந்து வந்தது எப்படிப் பொய்யாகும்! அப்படியென்றால், இத்தனை காலமும் நம்பியவர்கள் முட்டாள்களா? என்று மக்கள் கேள்விக்கணைகளைத் தொடுப்பார்கள். எனவே பொய் என்று அறியும் பட்சத்தில் உடனே நையப்புடைக்க வேண்டிய அவசியம் எழுத்தாளர்களுக்கு இருக்கின்றது.
பிறப்பில் இருந்து பாரதி பாடிய பொய் சொல்லக்கூடாது பாப்பா பாடசாலையில் படித்துத் தான் மக்கள் வளர்ந்தாலும் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான்கள் அதிகம். இது கவிஞர்களுக்கு உள்ளத்தில் ஊறி வாழ்க்கையிலும் படிந்து விட்டது போலும். அதனாலேயே பல Mee tooக்கள் வலுவிழந்து நிற்கின்றன.
பாலைபாடிய பெருங்கடுங்கோ கலித்தொகையிலே ஒரு மரத்தின் கீழ் நிற்பவன் பொய் சொன்னால், அந்த மரம் வாடிவிடும் என்று பாடியிருக்கின்றார். அதனால், இப்புலவர் இம்மரத்தின் கீழ் நின்று பாடியிருக்க மாட்டார் என்று தோன்றுகின்றது. எனவே பொய் சொல்பவர்களை அந்த மரத்தின் கீழ் கொண்டு நிறுத்தி சொல்லச் சொல்லும் பட்சத்தில் பொய்மையை நிரூபிக்கலாம். ஆனால், தமிழர்கள் எதனையும் ஆவணப்படுத்தும் முக்கியத்தவத்தை தலைமேற்கொள்வது இல்லையே.
சங்கஇலக்கியத்தலே நிலம்பெயர்நதாலும் பொய் சொல்லக்கூடாது என்பது அறமாகக் கருதப்பட்டது. வாய்மை என்பது தவறியும் பொய் பேசாதிருத்தலாக கொள்ளப்படுகிறது. இங்கு அரிச்சந்திரனுடைய வ
தற்காலத்திலே குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதற்காக அமெரிக்காவிலே lie detector என்னும் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். பொய் சொல்பவனுடைய நாடி, இதயம், மூளை ஆகியவற்றின் இயக்கங்களைக் கணிப்பிட்டு அவன் சொல்வது பொய்யா உண்மையா என்று கண்டுபிடிக்கின்றார்கள். இக்கருவி பொய்மைக்குச் சாவுமணி அடிக்கும். இதைப்போல் மனத்தை அறியும் கருவியும் இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். ஆனால், இந்தக் கருவி மனிதனை மனஅழுத்தத்துக்கு ஆளாக்கி, அவனைச் சித்தப் பிரமையுள்ளவனாக்கி அலையவிடும். அதனாலேயே இயற்கை மனத்தை மறைவாகவே வைத்திருக்கின்றது.
பொதுவாகவே எழுத்தாளர்களின் எழுத்திலுள்ள தர்மத்தைக் கண்டுபிடிப்பது வாசகர்களின் வாசிப்பு அனுபவத்தையும் வாசிப்பின் தன்மையையும் பொறுத்தது. நுண்மான்நுழைபுலம் போல எதனையும் ஆழ அகல விரிவுடன் வாசிக்கின்ற போதும், மக்களுடன் பழகும் போது ஓடும் புளியம்பழமும் போலும் இல்லாமல் ஆழக் கண்ணோட்டத்தில் மன ஆழம் காணும் போதும் பொய்மைக்குச் சாவு மணி அடிக்கலாம் என்று கருதுகின்றேன்.
அதிசயமான உணர்வுகளைக் கொண்டு மனிதர்கள் திரின்றார்கள். சாதாரணமாக ஐம்புலன்கள் வழி உணர்வுகளை உணர்ந்து கொள்ளும் எம்போன்றவர்களுக்கு அவர்கள் உணர்வுகள் பொய் போலவே தெரியும். உதாரணமாக சினெஸ்தேசியா (synesthesia) என்னும் தன்மையுள்ள மனிதர்கள் எழுத்துக்களையும் சொற்களையும் வண்ணமாகக் காண்பார்கள். உதாரணமாக யு என்ற எழுத்தை அவர்கள் சிவப்பு நிறமாக காண்பார்கள். ஏதாவது ஒரு பொருளைப் பார்த்தால் ஒரு மணத்தை உணர்வார்கள். சிலருக்குத் தொடாமலே சிலவற்றை உணரமுடியும். உதாரணமாக ஒரு நோயாளிக்கு உள்ள வலியை மருத்துவர் தானாகவே உணர்வார். மற்றவர்கள் கைகொடுத்தால், அந்த உணர்வை இந்த நோயுள்ளவர்கள் தாம் கைகொடுப்பது போல உணர்வார்கள். இதையே வள்ளுவப் பெருந்தகை
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்காணல் உற்று
என்கிறார். கண் என்பது பார்த்தல் என்னும் புலனை உணரும் ஒரு உறுப்பு. ஆனால், இங்கு கண் தின்கின்ற தொழிலைச் செய்கின்றது. இதுவும் சினெஸ்தேசியா என்னும் நோய் போலவேதான் என்பதை வள்ளுவர் எடுத்துக் காட்டியுள்ளார். எனவே உண்மையை மறைத்துப் பொய் கூறலும் ஒரு இயல்பான புலன் வகைக்குள் அடங்காத ஒரு நோய் என்றே கொள்ள வேண்டியுள்ளது.
887 total views, 9 views today