பால்வண்ணம்

ஒரு குறும் வாசகப் பகிர்வு
-பூங்கோதை – இங்கிலாந்து

அவுஸ்திரேலியாவில் வாழ்கின்ற எழுத்தாளர் கே எஸ் சுதாகர் எழுதிய இச்சிறு கதைத் தொகுப்பு 2022ம் ஆண்டில் ‘எழுத்து’ பிரசுரமாக இந்தியாவில் இருந்து படைப்பாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் தாயகத்தில் பேராதனை பல்கலைக் கழகத்தில் தன் பொறியியல் பட்டத்தை பெற்றுக் கொண்டவர் என்பதும், தாயகத்தில் ஞானம் சஞ்சிகை உள்ளிட்ட பல சஞ்சிகைகள், பத்திரிகைகள் நடாத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பற்றி பத்திற்கும் மேற்பட்ட பல பரிசுகளை வென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் திரு தி.ஞானசேகரன் அவர்கள் இச்சிறுகதைத் தொகுப்பிற்கு ஆழமான ஒரு முன்னுரை வழங்கியுள்ளார். அதிலிருந்து கே.எஸ்.சுதாகர் அவர்கள் இதற்கு முன்பாக, 2007இல் ‘எங்கே போகிறோம்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் 2014 இல் ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்’ சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார் என்று அறியக் கிடைக்கிறது. எழுத்தாளர்கள் என்பவர்கள் சாதாரண மனிதர்கள் போல் அல்லாது, தம்மைச் சுற்றி நடப்பதை, தாம் கண்டவற்றை, தம் அனுபவங்களை இலக்கியங்களில் எழுதி வைக்கிறார்கள். தம் எழுத்துக்களால் தம்மை ஒரு காலத்தின் கண்ணாடியாக்கி அதன் மூலம் தம் அடுத்த தலைமுறைக்கு தாம் வாழ்ந்த காலத்தை பிரதிபலிக்கிறார்கள். அவ்வகையில் ‘பால்வண்ணத்தின்’ படைப்பாளி கே எஸ்.சுதாகரும் தான் கேட்டறிந்தவற்றை, தான் அனுபவத்தில் கண்ட விடயங்களை புனைவுகளின் ஊடாக வாசகர்களுக்கு புரிந்து கொள்ளக் கூடியதாக மிக இலகு மொழிநடையில் படைத்துள்ளார்.

இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள 12 சிறுகதைகளும் மிக நேர்த்தியாக, தாம் சொல்ல வந்தமையக் கருத்துக்களைச் சொல்லிச் செல்கின்றன. ஈழத் தமிழர்களின் வாழ்வில் உள்நாட்டு யுத்தம் நேரடியாகவும், அதன் பின்னரும் ஏற்படுத்திய வடுக்களைத் தவிர்த்து நாம் இலக்கியங்கள் படைத்து விட முடியாத சூழலில் இருக்கிறோம் என்பதற்கு இச்சிறுகதைகள் உதாரணமாகின்றன.
தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளில்,குறிப்பாக அவுஸ்திரேலியாவிலும் கதை மாந்தர்கள் நடமாடுகிறார்கள். பால்வண்ணம் சிறுகதையின் தலைப்பே இத்தொகுப்பின் தலைப்பாகவும் இருப்பது சாலப்பொருத்தமாகவும் இருக்கிறது.

இக்கதைகள் எம்மக்களின் புலம் பெயர்வில், அவர்கள் வாழ்வின் அரசியல், சமூக, பொருளாதார, குடியியல் சார்ந்த சவால்களையும் சஞ்சலங்களையும் கோடிட்டுக் காட்டுகிறது. மெல்பேர்னில் நடப்பதாகக் காட்டியிருக்கும் கதைகளில் தஞ்சம் புகுந்த நாடுகளில் நம்மக்கள் எதிர்நோக்குகின்ற உள, உடற் சிக்கல்கள் கருத்துக் செறிவோடு நகர்த்தப் பட்டிருக்கின்றன.இச்சிறுகதைகளில் எனக்கு மிகப் பிடித்த பல சிறுகதைகளில் ‘பாம்பும் ஏணியும்’, ‘அம்மாவின் எண்பதாவது பிறந்த தின உரை’ என்பன அடங்குகின்றன. இதற்குக் காரணம் இதில் வரும் பெண் கதாபாத் திரங்களின் ஸ்திரத் தன்மையும், வைராக்கியத்தோடு அவர்கள் கடந்து போகும் வலி சுமந்த பாதைகளு மேயாகும்.

பாம்பும் ஏணியும் சிறுகதையில் வரும் பெண் கதாபாத்திரம் சிவானி ஈழத்தில் இருந்து, பெற்றோர்களை போரில் இழந்த பின் மெல்பேர்னிற்கு தன் தாய் மாமனை நம்பி வந்தவள். பட்டதாரியான சிவானி மாமனின் உணவு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு சமையல்காரி ஆக்கப்படுகிறாள்.அவளுக்கு கடுமையான வேலைகள் சுமத்தப்படுவதோடு அவள் வெளியில் எங்கும் போக அனுமதிக்கப்படவில்லை. ஒருவாறு ஜனகன் என்பவனை நம்பி அந்த உணவு விடுதியில் இருந்து தப்பித்துப் போனவளுக்கு வாழ்க்கை ஒன்றும் உவப்பாய் இருக்கவில்லை. சட்டிக்குத் தப்பி, பல்லி ஒன்று அடுப்பில் விழுந்த கதையாய் அவள் வாழ்வு சின்னாபின்னமாக்கப்படுகிறது. இருந்தாலும் தன்னுடைய தீவிரமான முயற்சியால் அவள் தனக்குத் தேவையான, முடிந்தளவு கல்வியையும் தொழிலையும் தேர்ந்தெடுக்க முடிகிறது.

படித்த பெண்ணாக இருப்பினும் எமது சமூகக் கட்டுமானத்தை முதுகில் சுமந்தே புலம் பெயர்வதால், அவளுக்கு சுதந்திரமாக தனக்கு நேர்ந்து கொண்டிருந்த அவல வாழ்வில் இருந்து வெளியே வர முடியவில்லை. ஆனாலும் ஒரு எல்லையில் அவளால் அந்த வாழ்விலிருந்து தப்பி ஓடி, காவல் துறையிடம் தஞ்சம் புக முடிகிறது. தனியாக புலம் பெயர் நாடுகளுக்கு வரும் பெண்கள் முகம் கொடுக்கும் முக்கியமான சவால்களில் ஒன்று உணர்வு ரீதியாகப் பாதிக்கப்படுவது தான். இதே போல தன் எண்பதாவது பிறந்த தினத்தில், ஒரு வயோதிபத் தாய் தன் உள்ளக்கிடைக்கையை தன் பிறந்த நாள் உரையின் ஊடாக வெளிப்படுத்துகிறார்.தாயகத்தில் இருந்த போது சாதீயத்தால் பாதிக்கப்பட்டு, மனப்பிறழ்வால் வாழ்வை இழந்து நிற்கும் தன் மூத்த மகனை எண்ணி அழுகின்ற ஒரு தாயை இங்கு நாம் காண முடிகிறது.

உணர்வுகளின் அழுத்தத்தில் தத்தளிக்கும் ஒரு தாயின் மனநிலையைப் போல்,பல்வேறு விதமான வீட்டு வன்முறைகள் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன. இவ்வாறு சிந்தனைகளைக் கிளறி விட்டு வாசகர்களை சிந்திக்கத் தூண்டி, சமூக மாற்றத்தை வேண்டி நிற்கும் இச்சிறுகதைகள் தி ஜானகி ராமன், குப்பிளான் சண்முகம் போன்றவர்களின் சிறுகதைகளோடு ஒப்பீடு செய்து பார்க்க முடிகிறது. கே.எஸ்.சுதாகர் தொடர்ந்தும் இதே போல் இலக்கியத்தோடு இயங்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.வெற்றிமணி பத்திரிகையில் நீண்காலமாக இவரது படைபஇபுகள் வெளிவருவதும்,பால்வண்ணம் நூலின் அட்டைப்படம் வெற்றிமணி ஆசிரியரின் கைவண்ணம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

623 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *