நான் செத்த நாள்
உண்மைக் கதை உரைத்தவர் புஸ்பா. கேட்டு எழுதியவர் மூர்த்தி மாஸ்ரர்.
இன்று 20.10.2023. 36 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் தான் அது நடந்தது. 20.10.87 நான் செத்துப் போகத் தொடங்கிய நாள். நான் செத்துப் போகத் தொடங்கிய இடம் சுண்டுக்குளி பெண்கள் பாடசாலை. நான் செத்துப் போகத் தொடங்கிய நேரம் சுமார் 20.00 மணி
ஐயோ ஆமி வந்துட்டான் ஓடுங்கோ! ஓடுங்கோ! சத்தம் கேட்டது.ஆட்கள் காணிகளுக்கு ஊடாக விழுந்து அடித்து ஓடும் சத்தம் கேட்டது. எங்கே ஓடுவது? தெரியாமல் ஓடினோம். இரவு தொடங்கிய நேரம் அது. மழை இருட்டும் சேர்ந்து கும்மிருடாக மாறி இருந்தது. சில காணிகளை கடந்து அந்த சந்தன மாதா கோவிலைத் தாண்டி ஓடினோம். செல் குண்டுகள் பறக்கும் சத்தம் வெடிக்கும் சத்தம் வெளிச்சம் கக்கிய அகோரம் எதுவும் எம்மைத் தடுக்கவில்லை.
கோவிலைத் தாண்டி இருந்த பெரிய கட்டிடம்.அது சுண்டுக்குளி மகளிர் பாடசாலை. அங்கு தான் ஓடினோம். நாங்கள் ஒவ்வொரு வகுப்பறைகளுக்கு உள்ளும் புகுந்து கொண்டோம். அறை நிறைந்து இருந்தது. நிலத்தில் அமர்ந்து கொண்டோம். யாரும் எமக்கு கட்டளை போடவில்லை.ஆனால் நாங்கள் அமைதியாக இருந்தோம்.
திடீரென்று பாரிய சத்தம் கேட்டது. எமது அறைக்கு முன்பு இருந்த மரத்தில் வீழ்ந்து வெடித்தது ஒரு குண்டு. எமது அறைக்குள் எம்மத்தியில் வீழுந்து வெடித்தது அடுத்த குண்டு. ஒரே புகை நாற்றம். யாரையும் காணவில்லை. ஒன்றும் தெரியவில்லை. ஆனால் நான் அப்போது உயிருடன் இருந்தேன். என் அருகில் இருந்தவர்கள் யார் என்று தெரியாது. என்ன ஆனார்கள் என்றும் தெரியாது. இரத்தம் ஓடியது எனது பாவாடை நனைந்தது. கை கால்கள் நனைந்தன இரத்தத்தால்.
அடுத்த அறைகளில் இருந்தவர்களின் அழுகுரல் சத்தம் கேட்டது. ஆனால் நான் இருந்த அறையில் இருந்தவர்களின் எந்த சத்தமும் கேட்கவில்லை. நானும் சத்தம் போடவில்லை. அழவும் இல்லை. எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. உணர்ச்சி எதுவுமில்லை. மரக்கட்டையாக இருந்தேன்.
அப்படித்தான் மற்றவர்களும் இருந்து இருப்பார்கள். யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டது. ரோச் லைட் வெளிச்சம் நூந்து நூந்து எரிந்து எம்மை நோக்கி வந்து கொண்டிருந்தது. லைற் வெளிச்சத்தில் என் அருகே பக்கத்து வீட்டு லீலா அக்கா.
அவரின் கணவர் வெளிநாட்டிலிருந்து அன்று தான் வந்தவர். சாவகச்சேரி வரை வர முடிந்த அவர் அங்கிருந்து ஒரு சைக்கிளை இரவலாக எடுத்துக்கொண்டு சுமார் ஒரு மணியளவில் வீடு வந்து சேர்ந்தார். நீண்ட காலம் பிரிந்து இருந்த அவரது இரு பெண் பிள்ளைகளையும் அவரது மனைவியையும் கண்டு ஆசைதீரக் கதைத்து முடிக்கவில்லை. எங்களுடன் அவரும் சேர்ந்து ஓட வேண்டி இருந்தது. லீலா அக்கா இரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சின்றி கிடந்தார். நான் முதலில் கண்டது அதைத்தான். அவரைத்தான். நீண்ட காலமாக பிரிந்திருந்த கணவரின் கையில் தனது இரு மகள்களையும் ஒப்படைத்து விட்டு, மீண்டும் வரவே முடியாத இடத்திற்கு அவர் சென்று விடுவதற்காக, இவ்வளவு காலமும் கணவருக்காகக் காத்திருந்திருக்கிறார். என்பதை அன்று நான் உணரவில்லை. அதன் பின்னர் அதை நினைத்து நினைத்து மனதால் அழுது கொண்டே இருக்கிறேன். அந்த அழுகைக்கும் இன்று 36 வயதாகி விட்டது.
எனது மருமகள் பாமா அவளது கையில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டு இருந்தது. குண்டுத் துண்டுகள் அவளது கையை துளைத்து மறுபக்கம் சென்று விட்டது. இரத்தம் வடிந்த படியே அவள் அரை மயக்கத்தில் மிகுந்த பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள். விவேகானந்தன் 9 வயதே நிறைந்த அவன் தனது தாயின் மடியில் ,எனது ராதா அக்காவின் மடியில் இருந்தபோது, உடலையும் தலையையும் துளைத்து சென்ற குண்டுத் துண்டுகள் அவனது உயிரையும் எடுத்து விட்டது என்பது அந்த நேரம் எனக்கு தெரியவில்லை. மறுநாள் அவனது உடலை அவர்கள் வீட்டில் வாங்கு கட்டிலின் மேல் கிடத்தி வைத்திருந்தார்கள். ராதா அக்காவும் தலையில் காயத்துடன் தலை சாய்த்து கிடந்தார்.
வைத்தியசாலைக்கு எல்லாரையும் அள்ளி எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள் போராளிகள்.அந்த அவல இடத்திற்கு உடனே போராளிகள் வந்து சேர்ந்த படியால் அவர்கள் மூலம் பலரது உயிரை காப்பாற்ற கூடியதாக இருந்தது. மேலும் சிலரை வைத்தியர்களால் கூடக் காப்பாற்ற முடியாமல் போனது.
போராளிகளை குறிவைத்து, கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, சுண்டிக்குளி பெண்கள் பாடசாலையை நோக்கி குண்டு வீசியதாக தங்கள் கதையை பின்னர் வெற்றி கரமாக முடித்தது, இந்திய இராணுவம். ஆனால் குண்டு வீழ்ந்த பின்னரே அதுவும் எங்களை காப்பாற்றவே போராளிகள் அங்கு வந்தார்கள்.
ராசா அண்ணர் (அதிபர் தர்மலிங்கம்) மற்றும் அவரது தந்தையான அதிபர் கந்தையா மாஸ்ரர் ஆகிய இருவருமே அந்த ஊர் மக்களை ஆமியிடம் இருந்து காப்பாற்றுவதற்காக வெளியேறுமாறு கூறி உதவி செய்ய ஓடி வந்தவர்கள். வைத்தியசாலைக்கு தூக்கிச் செல்லப்பட்ட இருவரும் உயிரற்ற உடல்களாக மீண்டும் அவர்களது வீட்டிற்கு தூக்கி வரப்பட்டார்கள். எங்கள் முன் வீட்டு 3 வயதுக் குழந்தை வருணன். அள்ளி எடுத்துச் செல்லப்பட்ட இவர்களில் ஒருவனாக இருந்தான். வைத்தியசாலையில் இருந்து மீண்டும் கொண்டுவரப்பட்டு அவனது உடல் அவர்கள் வீட்டில் ஒப்படைக்கப்பட்டது. எனது மகள் முறையான சித்திரா நெத்தியில் காயத்துடன் என்னருகே மயங்கி கிடந்தாள்.
கையை நீட்டி அவளது கரத்தைப் பிடித்து இழுத்துப் பார்த்தேன். என்னால் முடியவில்லை. அவள் இறந்து விட்டாள் என்று நினைத்தேன். அழுகை வரவில்லை. கிடைக்கும் வெளிச்சத்தில் மற்றவர்களை என் கண்கள் ஒவ்வொன்றாக தேடிக் கொண்டு இருந்தன.
மறுநாள் அதாவது 21ம் திகதி யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் மீண்டும் இந்திய ராணுவத்தினர் புகுந்து கண்மூடித்தனமாக பலரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தது. அன்று மற்றவர்களும் இறந்து விட்டார்கள் என்று நான் நினைத்தேன். அன்று மழை பெய்து கொண்டிருந்தது. எங்கள் வீட்டிலும் அயல் வீடுகளிலும் உயிரற்ற உடல்கள். கிடுகு வேலி ஓட்டைகளூடாக மாறி மாறி போய் வந்து கொண்டு இருந்தேன். இரத்தம் வடிந்த உடுப்பு மழையில் நனைந்த ஈரம் என்னை எதுவும் செய்யவில்லை அன்று. அன்று அழுகை வரவில்லை. இன்று அழ முடியவில்லை. 36 வருடங்கள் ஓடி விட்டனவே.
878 total views, 2 views today