63 ஆண்டுகளாக நெஞ்சைக் குடையும் ஒரு செல்லக் குடை


-மாதவி.

புலம்பெயர்ந்து வாழும் எமக்கு குடை என்றதும் மழைதான் ஞாபகம் வரும். தாயகத்தில் என்றால் வெய்யிலுக்கும் குடைபிடிப்பதால், வெய்யிலும் ஞாபகம் வரும்.
அதிகமான குடைகள் வெயிலுக்கு அதன் கறுப்புத் துணி வெளிறிப்போய் இருக்கும். மழை நேரங்களில் என்றால் புயல் காற்றுக்கு கம்பிகள் உடைந்தும் இருக்கும்.பாடசாலையில் படிக்கும் காலத்தில் ஆசிரியர்கள் குடையுடன் வருவார்கள், இன்று கைத்தொலை பேசி எப்படி எங்கு சென்றாலும், எடுத்து செல்வோமோ,அதுபோல அன்று குடைகளை எடுத்து செல்வார்கள்.

மழைக்காலம், ஆரம்பிக்கும் போதும், வெய்யில் காலம் ஆரம்பிக்கும் போதும் தெருவால் குடை திருத்துபவர்கள், கூவிக்கொண்டு செல்வார்கள். அவர்களை அழைத்து, வீட்டு முற்றத்தில் இருக்கவிட்டு, கம்பி உடைந்த குடை, சீலை கிழிந்த குடை இவற்றை எல்லாம், திருத்திக் கொடுப்பார்கள். கொஞ்ச நேரத்தில் குடை இளம் குமரிபோல் மிடுக்காக இருப்பாள்.குடை கட்டுபவன் கட்டி முடிந்ததும், குடையை விரித்து, சுருக்கி காட்டுவான். அவன் முகத்திலும், குடையிலும், ஒரு பெருமிதம் தெரியும். பொட்டுக்குள்ளால் இன்னும் ஒரு குடைவிரியும்.அயலவர்கள் எல்லாம் உடைந்த குடைகளுடன் படையெடுப்பதும் நடக்கும்.

இப்ப தேடினாலும் குடைகட்டுபவனை கண்வெளிச்சத்திலும் காணோம். இப்ப எல்லாம் குடை உடைந்தால் கிழிந்தால், நேர குப்பைத்தொட்டிக்கு சென்றுவிடும். கடை வீதியிலும் குறைந்த விலையில் குறுகிய காலப்பாவிப்புக்கு மலிவாக குடைகள் கிடைக்கும்.

ஏன் இப்போ போகும் போது ஒரு குடை யுடனும்,வரும்போது ஒரு குடை யுடனும் வருபவர்கள் இன்று அதிகம். ஒன்று வைத்த இடத்தில் மறந்து விடுவார்கள், அல்லது குடை முறிந்தால் புதுக்குடையுடன் வருவார்கள். நான் பெரிதும் குடை பாவிப்பது குறைவு. எனக்கு மறதி அதிகம். பாடசாலையில் படிக்கும் காலத்தில் எவரும் இந்த கட்டுரை எழுதாமல் விட்டு இருக்க மாட்டார்கள். அப்படி இருந்தால் துணிந்து சொல்லலாம் அவர்கள் அன்று பாடசாலைப்பக்கம் போகவில்லை என்று. அந்தக்கட்டுரை இதுதான்.

ஒரு குடையின் சுயசரிதை.

நான் இங்கிலாந்தில் பிறந்தேன்.நான் மான் மார்க் இனத்தை சேர்ந்தவள். என்னை விரித்தால் அழகான, கருமை நிறத்தில் பூவாய் விரிவேன். என்னைப்பார்த்து பெண்கள் குடைவெட்டு பாவாடை அணியக்கற்றுக்கொண்டனர். என்னை எடுத்துச் செல்லும் மனிதர்களின் அந்தஸ்த்தை, என் கறுப்பு தோலில் குத்தப்பட்டு இருக்கும் இலச்சசனையும், கைப்பிடியும், கைபிடியில் உள்ள படமும் தீர்மானிக்கும்.

என் கைபிடியில் எலிசபெத்மகாராணியின் படம் பொறித்து இருந்தது. என்னை இலங்கைக்கு அனுப்ப அழகாக பொதிகட்டி கப்பலில் அனுப்பினார்கள். இருந்த இடத்திலும், செல்லும் இடத்திலும் எங்கள் ராணியின் ஆட்சி என்றமையால் நான் பயமில்லாமல் சென்றேன்.

நீண்ட பயணத்தின் பின் கொழும்பு துறைமுகம் வந்தேன். அங்கிருந்து என்னை, குதிரை வண்டியில் நகருக்கு அழைத்து சென்றார்கள். பின் அங்கிருந்து ஒரு பெரும் வணிகர் என்னையும், இன்னும் பலரையும், யாழ்பாணம் அழைத்து சென்றார்கள்.

அங்கு ஒரு கடையில் என்னை விற்பனைக்கு வைத்தார்கள். என்னைத் தேடி வந்தவர்கள் பலர் ஆசிரியர்கள். அவர்களையும் முந்தியபடி ஒரு கட்டான இளைஞன் என்னை எடுத்து, பார்த்தார், என் கைகளில் உள்ள ராணியின் படத்தைக்கண்டதும், என்னை விரித்தும் பார்க்வில்லை அகத்தின் அழகு ராணி முகத்தில் தெரிந்ததோ என்னவோ. 22 இலங்கை ரூபாய் கொடுத்து என்னை வாங்கி சென்றார்.

அவர் கையில் இருக்கும் போது திடமான இளைஞனின் பரிசத்தில், நான் பரிசுப்பொருள் என்று உணர்ந்தேன். பரிசுடன் பருத்தித்துறை யில் ஒரு வீட்டு வாசலில் படலை திறக்கப்பட்டது.

எதிரில் வந்த பெண்ணின் நாணத்தில் அவர்கள் புதுமணத்தம்பதிகள் என உணர்ந்தேன். ராணிகைபிடி போட்ட என்னை அவர் தன் ராணிக்கு அன்பளிப்பாக கொடுத்தார்.
1957ம் ஆண்டு. இது நடந்தது, 63 ஆண்டுகள் ஓடிவிட்டன, ஆனால் அவர்கள் என்னை ராணி போல் கவனித்தார்கள், என் தோலில் சிறு கீறல்கள் கூட இல்லை. நான் அவர்கள் குடும்பத்திற்கே நிழல்கொடுத்தேன். பிள்ளைகளும் என்னை ராணி யாகவே வைத்து காத்தனர். என்னை ஒரு போதும் மறந்தில்லை. சாதரணமாக வேறு ஒருவர் கையில் என்றால் நான் மண்ணோடு மண்ணாகி இருப்பேன். ஆனால் நான் ஒருவரின் காதல் பரிசானமையால் இன்றும் அவள் மனதில் இன்பமாக குடைந்துகொண்டு செல்லக்குடையாக இருக்கிறேன். இது குடையின் சுயசரிதை, ஆனால் உண்மையான கதை.

குடைவழங்கிய காதலன்,( கணவன்) சிறீஸ்கந்தராஜா. பெற்ற காதலி (மனைவி) லோகநாயகி. 1957ம் ஆண்டு.
பி. குறிப்பு.
அம்மாவுக்குக் கல்யாணம் ஆனபோது (1957) அப்பா அம்மாவுக்கு இந்தக் குடையைப் பரிசாக வாங்கிக் கொடுத்தாராம். இப்போது இந்தக் குடைக்கு 63 வயதாகிறது, ஆச்சரியம்….
நானும் என் சகோதரனும் சிறு குழந்தைகளாக இருந்தபோது அம்மா எங்களை இந்த குடையின் கீழ் பள்ளிக்கு அழைத்துச் சென்றதாக அம்மா கூறினார். விலை மதிப்பற்ற பொக்கிஷம். யோ. சாந்தி. பருத்தித்துறை. 1.11.2023
நன்றி;:வெற்றிமணி மார்கழி.2023

422 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *