புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளும் எதிர்காலமும்.

-கவிதா லட்சுமி நோர்வே.
தமிழர்களின் புலப்பெயர்வு வாழ்வு ஐந்து தசாப்தங்களைக் கடந்துதிருக்கிறது. பெரும்பான்மையினர் போர் அழுத்தங்களாற் புலம் பெயர்ந்தவர்கள். தமிழ் உணர்வும், தம் நிலம் சார்ந்த பற்றும் இவர்களுடைய வாழ்வில் பல அமைப்புகளைக் கட்டியெழுப்புதலுக்கான உந்துதலாகவும், அடிப்படையாகவும் இருந்திருக்கின்றன.

புலத்தில் வாழும் தம் சந்ததிகளுக்கு தமது மொழி, கலை, கலாசாரம் போன்றவற்றைக் கடத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட அமைப்புகள், கல்விக்கூடங்கள், கலைக்ககூடங்கள் இன்றும் நடைமுறையில் இருக்கின்றன. இவ்வமைப்புகளிற் பணியாற்றியவர்கள் அனைவரும் புலம்பெயர்ந்து வாழும் முதற் சந்ததியினர் தாம். அன்றைய சூழ்நிலையாலும் தேவைகளினாலும் அமைப்புகள் தன்னார்வ அமைப்புகளாகச் செயற்பட்டன.

மூத்த சந்ததியினர் போல இளைய சந்ததியினர்கள் அமைப்புகளிள் ஈடுபாடு காட்டாமல் இருப்பது என்பது எதிர்காலத்தில் அமைப்புகள் இயங்காமல் போவதற்குரிய சாத்தியங்களையே அதிகம் கொண்டிருக்கின்றன. தமது சந்ததிகள் உயர்ந்த வேலைத்தளங்களிற் பணிபுரியும் அளவு சிறந்த கல்வித்தகைமைகளைப் கொடுத்து பெருமிதப்படும்படி வளர்த்து இருந்தாலும், தமது தமிழ் அமைப்புகளின் வீழ்ச்சி சார்ந்த கவலை மூத்த சந்ததியினரிடம் மேலோங்கியே இருக்கின்றது.

புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகம், தம்மைப் பற்றிய புரிதலையும், சமூகம் சார்ந்து தன்னலமற்ற சிந்தனையையும் வளர்த்துக் கொண்டால் மட்டுமே அமைப்புளை அடுத்த சந்ததியினரை நோக்கி நகர்த்த முடியும். இளம் தலைமுறையினர் அமைப்புகளிடம் இன்னும் வந்து சேராத நிலையில், முதற் தலைமுறையினரின் கைளில் மட்டுமே அமைப்புகளின் வளர்ச்சியும், எதிர்காலமும் இருக்கின்றது.
……………………
தமிழ் அமைப்புகள் சார்ந்து இளம் சந்ததியினரின் நிலைப்பாடு
……………………
🔸 மொழியுணர்வும் பண்பாட்டுணர்வும் முதற்சந்ததிகளின் அளவிற்கு அடுத்த சந்ததிகளிடம் இல்லாமை.
🔸 சிறந்த கல்வித் தகமைகளைப் பெற்றுக்கொடுத்து சுயசிந்தனை மிக்க மனிதர்களாக வளர்த்த சந்ததிகளிடம், தமது மொழி, கலை, கலாசாரம் சார்ந்த ஆழ்ந்த அறிதலைக் கொடுப்பதற்கு மாறாக உணர்வு சார்ந்து மட்டுமே அவர்களை வழிப்படுத்தியமை.
🔸 தமிழ் அமைப்புகள் மூலம் கிடைக்கும் பதவிகள், பெயர்கள், சமூக அந்தஸ்துகள் இளைய சமூகத்திற்கு ஈர்ப்புடையதாக இல்லாமை. அவர்களுக்கு அவை தேவையற்றதாக இருக்கின்றன.
🔸 வாழ்வாதாரங்கள், நிலமைகள், பொருளாதார வசதிகள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த போதும், அமைப்புகள் அனைத்தும் முழுமையாகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாக மட்டுமே தொடரும் நிலை.
🔸 அமைப்புகளை நிர்வகிக்கும் முதல் தலைமுறையினர், இளைய தலைமுறையினரை உள்வாங்கும் முறை அறியாது இருத்தல். அவர்களிடம் நிர்வாக அலுவல்களையும் அதிகாரங்களையும் கையளிக்கும் அணுகுமுறையைக் கொண்டிராதிருத்தல்.
🔸 முதற்சந்ததிகளிடம் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளும் அதைக் கையாளும் முறைகளின்பால் இளைய தலைமுறையினருக்கு இருக்கும் ஒவ்வாமையும் எதிர்நிலைப்பாடும்.
……………………………
தமிழ் அமைப்புகள் சார்ந்து மூத்த சந்ததியினரின் நிலைப்பாடு
……………………………..
🔸 தமிழ் உணர்வும், பண்பாடுகளும் காக்கப்பட வேண்டும் என்ற முனைப்பு.
🔸 நிலம் சார்ந்தும், மொழி சார்ந்தும் றொமான்டிசைஸ் – பண்ணப்பட்ட (யதார்த்தமற்ற) மனநிலையில் அமைப்புகளை நடாத்த முயல்வது.
🔸 அமைப்புகள் மூலம் கிடைக்கப் பெறும் சமூக அந்தஸ்து, பெயர், பதவிகள், அடையாளம் போன்றவைகளின்பால் உள்ள மோகம்.
🔸 தமிழ் உணர்வின் அதீதமும், மொழி அறிவின் போதாமையும்.

🔸 ஒரு நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் பதவி வகிப்பின், அது பல வகையிலான ஊழலுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. தமிழ் அமைப்புகளிளோ பதவிவகிப்புகள் தசாப்தங்களைக்கடந்து கொண்டிருக்கும் நிலை.
🔸 பதவிக்கு வருபவர்களை திறன்நிலை வைத்து தெரிவு செய்யாமல், உணர்வுநிலை (தேசியம், ஊர், நட்பு, பாடசாலை) மட்டுமான அளவுகோள்களை வைத்து தெரிவு செய்தல்.
🔸 அமைப்புகளில் இணைந்து கொண்ட இளைஞர்களின் பின்னால் நின்று தமது பிடியில், தமது சிந்தனைப் போக்கில் அவர்களையும் இயக்க முயல்வது.
🔸 அமைப்புகளில் இருந்து வெளிவரும் பட்சத்தில் அவர்களுடைய அடையாளம் அழிந்து போகும் என்ற அச்ச நிலையைக் கொண்டிருப்பது.
🔸 ஜனநாயகத்தின் பலவீனங்களைப் பயன்படுத்தி சர்வாதிகார தன்மைகளை நடைமுறைப்படுத்தல்.
🔸 வெளியேற்றல், அச்சுறுத்தல், அவமானப்படுத்தல், கலாச்சாரத்தினூடு தத்தமது அதிகாரங்களைத் தக்கவைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுதல்
🔸 புலம்பெயர்ந்த நாடுகளிற் பெருஞ்சமூகத்தில் உள்ள வேறு பொழுதுபோக்கு அம்சங்களோடு ஒன்ற முடியாத மனநிலை.
🔸 தமது அடையாளங்களைத் தமிழ் சமூகத்திற்கு அப்பால், வெளியே எட்டமுடியாத நிலைமை
🔸 தமிழ் உணர்வின் அதீதமும், பெருஞ்சமூக மொழி, சட்ட அறிவின் போதாமையும்.

பல துறைகளிலும் முதுநிலைப்பட்டம் பெற்ற (தலைமைத்துவம்,பொருளாதாரம், ஒருங்கிணைப்பாளர், நிர்வாகிகள்) இளயோர் தமிழ் சமூகத்திடம் இருக்கின்றனர். இன்னும் ஒரு தசாப்த காலத்தில் மூத்த சந்ததிகள் அமைப்புகளைத் தொடரும் நிலை இருக்காது என்பதே யதார்த்தம். இன்று காணப்படும் முரண்பாட்டு நிலைகள் இருக்கும்போதே இளம் சமூகத்தினரிடம் நிர்வாகப் பொறுப்புகளை கையளிக்கும் வழிமுறைகளைக் கண்டுகொள்ள வேண்டும்.

நிர்வாகத்துறைகளில் கல்விப்புலமை பெற்ற தமிழ் இளையோர் கையில் நிர்வாகப் பொறுப்புகள் கொடுக்கப்பட வேண்டும். மேலும் மூத்த சந்ததியினர் வழிநடத்தல் என்ற பெயரில் பின்னால் நின்று இயக்காமல் இருத்தல் முக்கியமானது. முழுமையாகவே நிர்வாகங்கள் அடுத்த சந்ததிகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதே தீர்வாக இருக்க முடியும்.

827 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *