ஒரு நூல் வாசிக்கப்படாது அலுமாரியை அலங்கரிப்பது ஒரு நூலகத்தை எரிப்பதை விடக் கொடுமையானது!

-கௌசி யேர்மனி

தேடல் என்பது உலகப் பரப்பிலே விலங்குகள், ஆதி மனிதன் என்று தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. உணவு, உடை, உறையுள் என்று தேவைகள் தொடர்கின்ற போது அறிவுதான் அனைத்துக்கும் அடிப்படையாகக் காணப்படுகின்றது. அறிவுத் தேடலை விரிவுபடுத்த வாசிப்பு மனிதனுக்கு அவசியமாகின்றது.

பாடசாலைக்கல்வி போதும் என்பவர்களுக்குப் பாடசாலைக்கல்வியின் போதும் தேடல் அவசியம் என்னும் உண்மை தெரிய வேண்டும்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழும் ஆறே

முறையான ஆசிரியர்கள் கிடைக்காத பட்சத்தில் பாடவிதானத்திலே எமக்குரிய தெளிவைப் பெறுவதற்கு மேலதிக வாசிப்பு ஒவ்வொருவருக்கும் அவசியமாகின்றது.

அந்த வாசிப்புக்கு சிறந்த நூல்கள் பயனுடையதாக இருக்கின்றன. ஒரு நூல் எழுத முற்படுகின்ற போது எழுத்தாளன் ஏன் எழுதுகின்றோம், என்ன எழுதுகின்றோம், யாருக்கு எழுதுகின்றோம் என்ற 3 விடயங்களைக் கவனத்தில் வேண்டும். இந்த நூலை உலகத்துக்குத் தருகின்ற போது அதனால், இந்த உலகம் என்ன பயனை அடைகின்றது என்ற அறிவு எழுத்தாளனுக்கு அவசியம். வாசகர்கள் இதன் மூலம் என்ன கற்றுக் கொள்ளுகின்றார்கள், எந்த சமூகத்துக்கு இப்படைப்பு சென்றடைய வேண்டும் என்ற தெளிவை முன் வைத்தே கணனியைத் திறக்க வேண்டும். கைகள் தட்டச்சில் பதிய வேண்டும்.

நூல்கள் ஒரு மனிதனை முற்றிலும் மாற்றியமைக்கும். வரலாற்று நூல்கள் எம்மைச் செதுக்கும். தான் ஒரு விலங்கு என்பதை மறுப்பதற்கு மனித இனம் போராடிக் கொண்டிருக்கின்றது. அதற்கு வாசிப்பு அவசியமாகின்றது. நூல்கள் மூலமாக மூளை தகவல்களைச் சேகரிக்கின்றது. பெற்ற தகவல்களை மதிப்பீடு செய்கின்றது. உதாரணமாக சிக்காக்கோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய பின் ஒரு ஆங்கிலப் பெண்மணி தன்னைத் திருமணம் செய்யுமாறு கேட்டதான ஒரு செய்தியை வாசித்திருக்கின்றேன். ஆனால், அது தவறான செய்தி என்பதை இன்னுமொரு புத்தகம் காலக் கணிப்பீட்டுடன் கூறியது. நோபல் பரிசு பெற்ற அனடோல் பிரான்சுக்கும், அழகு நிறைந்த நாட்டியத் தாரகையான ஐசடோரா டங்கனுக்கும் இடையே 1923 இல் நடைபெற்ற சந்திப்பில் ஐசடோ பிரான்சிடம் என்னுடைய அழகையும் உங்களுடைய மூளையையும் கொண்ட ஒரு குழந்தையைக் கற்பனை செய்து பாருங்கள்|| என்றாராம். அதற்கு பிரான்ஸ் அதுசரி என்னுடைய அழகையும் உங்களுடைய மூளையையும் கொண்ட ஒரு குழந்தையைக் கற்பனை செய்து பாருங்கள்|| என்றாராம். இவ்வாறு பிரான்சுக்கும் ஐசடோக்கும் இடையிலே நடந்த மரபியல் தன்மையை மேம்படுத்துவது சம்மந்தமாக நடந்த உரையாடல் சுவாமி விவேகானந்தருக்கும் ஆங்கிலப் பெண்மனிக்கும் இடையிலான உரையாடலாக வரலாறு திரிக்கின்றது. இவ்வாறு வரலாறு உண்மையைப் பொய்யாக்கும் பொய்யை உண்மையாக்கும். இதற்கு அகன்ற ஆழமான வாசிப்பு எமக்குத் துணைவருகின்றது.

நல்ல அறிவார்ந்த நூல்களை வாசிப்பது மனிதனின் கருமையப் பதிவிலே மாற்றத்தைக் கொண்டு வருகின்றது. மனித மனங்களிலே மாற்றம் ஏற்படுகின்ற போது கருமையம் துப்பரவு செய்யப்படுகின்றது. ஆத்மா சீரமைக்கப்படுகின்றது. தன்னைச் சுற்றி நல்ல சிந்தனைகளே வளருகின்றன. ஆத்மா சந்ததி முழுவதிலும் நன்மையை உருவாக்குகின்றது. எனவே நூல்கள் மனங்களை துப்பரவு செய்யவும் சிந்திக்கவும் செய்யும் என்பது முற்றிலும் உண்மை. ஒரு நூலைப் படிக்கும் முன் வாசகன் எப்படியான மனநிலையில் இருப்பானோ அந்த நூலைப் படித்து முடித்த பின் வேறொரு கோணத்திலான மனநிலைக்கு அவன் மாறிவிடுவான். அவ்வாறான சக்தி சிறந்த நூல்களுக்கு இருக்கிறன. ஒரு சிந்தனையில் இருந்து வேறு ஒரு சிந்தனைக்கு வாசகனைக் கொண்டு செல்லும் புரட்சியை நூல்கள் செய்திருக்கின்றன.

ஆனால், வெளிவருகின்ற நூல் வெளியிடுவதற்கு முன் செவ்விதழ் ஆக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கின்றது. எங்களுடைய கண்களே எங்களால், நம்பமுடியாது. விரைவாகத் தட்டச்சில் விரல்கள் பதிகின்ற போது எழுத்துக்கள் மாறுபடலாம். எழுத்துப்பிழைகள் அறியாமலே வந்துவிடலாம். கருத்துப் பிழைகள் எடுத்துக் கொண்ட பொருளில் பிழைகள் எனத் தவறுகள் தாங்கி நூல்கள் வெளிவரக்கூடாது. அதனால், அந்தந்தத் துறையில் துறைபோனவர்களின் மூலமாக் செவ்விதழ் ஆக்கம் செய்யப்பட வேண்டும். இருவர் அல்லது மூவர் இப்பணியை மேற்கொள்ளும் போது நூலின் தரம் மேலும் உயர்வதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகும். அதனாலேயே அணிந்துரை என்னும் பகுதி நூல்களில் இடம்பிடிக்கின்றது.

வாசிப்பை நூல் வடிவிலும், மின்னூல் வடிவிலும் நாம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஆனாலும், கையிலே நூல்களை வைத்து வாசிப்பதற்கும் கணனியிலும், கைத்தொலைபேசியில் வாசிப்பதற்கும் இடையிலே பாரிய வேறுபாடு இருக்கின்றது. நூல்கள் வாசகர்களை நோக்கமாகக் கொண்டே வெளியீடு செய்யப்படுகின்றன. வாசகர்களின் ஆவலைத் தூண்டும் வகையிலே அதனுடைய அமைப்பு அமைந்திருந்தாலேயே வாசிக்கும் திறனும் வாசகர்களுக்கு அதிகரிக்கும்.

தற்போது நூல்கள் எழுதுபவர்கள் தொகையும் நூல்களின் தொகையும் அதிகரித்து விட்டன. ஆனால், தொகைக்கும் தகுதிக்கும் இடையிலே வாசகர்கள் போராட வேண்டிய சூழ்நிலை தற்போது காணப்படுகின்றது. எது யாருக்குத் தேவையோ அதனையே தேடிச் செல்லும் விலங்கு. பசு புல்லுத்தான் உண்ணும் இறைச்சியைத் உண்ணாhது. புலி இறைச்சிதான் உண்ணும் புல்லை உண்ணாhது. அதுபோல வாசகர்கள் தமக்கு எது தேவையோ அதைத் தேடியே செல்வார்கள். தமக்குப் பயன்படுகின்ற நேரத்திலே மட்டுமே பயன்படும் நூல்களைப் பெற்றுக் கொண்டு வாசிப்பார்கள். அப்போது தேடலுக்கு வெற்றி கிடைக்கின்றது. கண்டது கற்கப் பண்டிதனாவான் என்னும் பழமொழி உண்மைதான். ஆனாலும், கண்டது கற்பதற்குரிய வாழ்நாளை அதிகரிக்கக் கூடிய மாத்திரை இன்னும் கண்டுபிடிக்கப்படவி;ல்லை.

அதனால், நூல்கள் வெளியீட்டிற்கு வாசகர்கள் வரத் தயங்குகின்றார்கள். நூலாசிரியர்களை ஊக்குவிப்பதற்காக நூல்களை வாங்கி அந்த நூல் வாசிக்கப்படாது அலுமாரியில் அலங்கரிப்பது என்பது ஒரு நூலகத்தை எரிப்பதை விடக் கொடுமையான செயலாகும் என்றே நான் கருதுகின்றேன். நூல்களை வெளியீடு செய்பவர்கள் சிலர் முழுமை பெற்ற நூலை வெளியீடு மட்டும் செய்வார்கள். சிலர் அந்நூலாசிரியரை ஊக்குவிப்பதற்காகத் தம்மை இழந்து அந்நூலின் வெற்றிக்குச் செயலாற்றுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. எழுத்தாளரின் எழுத்தாற்றலை மட்டுமே பெற்று அந்நூல் உருவாக்கத்தில் இருந்து செலவு, வடிவமைப்பு, முழுவதையும் தாமாகப் பொறுப்பேற்று அந்நூலை வெளியீடு செய்கின்றார்கள். அந்த வகையிலே தற்போது ஜெர்மனியில் வெளிவந்த வெற்றிமணி வெளியீடான வைகல் என்ற நூலை நாம் உதாரணமாகக் கூறலாம். அந்த நூலின் தரம் தீர்மானிக்கப்பட்டு வெளியீடு செய்யப்படுகின்றது.

இவ்வாறே சங்க காலத்திலே பாண்டிய மன்னனின் அவையிலே நூல்கள் அரங்கேறுகின்ற போது பல புலவர்கள் மத்தியிலே வாசிக்கப்பட்டு அவர்களின் ஒப்பிதல் பெற்றதன் பின்புதான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. நூல்கள் அனல்வாதம் புனல் வாதம் செய்யப்பட்டன. நூல்களை நெருப்பினுள் போடுகின்ற போது எரியாது இருந்தால், அது சிறந்த நூல் என்றும் ஆற்றினுள் போடுகின்ற போது மேலெழுந்து எதிர்த்து வந்தால் அது சிறந்த நூல் என்றும் கருதப்பட்டது. இதற்காக அக்காலத்துப் புலவர்கள் மூலிகைகளைக் கையாண்டு தந்திரங்கள் செய்து வெற்றி பெற்றிருக்கின்றார்கள்;. சஞ்சீவி என்னும் மூலிகையானது தண்ணீரை எதிர்த்து வரும் தன்மையுடையது. அதனுடைய வேரினால் ஏடுகளைக் கட்டி நீரில் விடும் உத்திகளைக் கையாண்டிருக்கின்றார்கள். அதேபோல் மூலிகை மருந்தை ஏட்டுக்கட்டுகளில் பூசி எரிதனழில் இருந்து ஏடுகளை காப்பாற்றியிருக்கின்றார்கள். இது தகுதியி;லலாத நூல்கள் வெளிவராமலே நெருப்புக்குள் அஸ்தியாகிவிட வேண்டும் என்ற கடுந்தன்மை அக்காலத்தில் இருந்திருக்கின்றது. இக்காலம் போல் அக்காலத்திலும் தம்முடைய நூல்கள் வெளிவருவதற்குப் புலவர்கள் தந்திரங்கள் மேற்கொண்டிருக்கின்றனர் என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. இறையனார் அகப்பொருள் உரை முச்சங்கங்களில் நூல்கள் அரங்கேற்றியமை பற்றிச் சான்று கூறுகின்றது.

திருக்குறள் அரங்கேற்றும் போது ஒளவையார் பரிந்துரை செய்யப்பட்டதாகவும் சிவன் எழுதிய

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே

என்னும் பாடலை நக்கீரர் எதிர் வாதம் செய்ததாகவும் சொல்லப்படுகின்றது. இவ்வாறு ஆய்வுக்குட்பட்டு வெளிவருகின்ற நூல்கள் வாசகர்களின் நேரத்தைப் பொன்னாக்கும், அறிவை விருத்தி செய்யும் மனத்துக்கு நல் மருந்தாகும்.

சில நூல்கள் கொல்லன் பட்டறை இரும்பில் பட்ட நீர்த்துளி போல காணாமல் போய்விடும். சில புத்தகங்கள் தாமரை இலை மேல் உள்ள நீர் போல நூலகத்தை மட்டும் அலங்கரிக்கும். சில புத்தகங்கள் மட்டுமே சிப்பிக்குள் விழுந்த முத்து போல பலருடைய பாவனைக்கு உரியதாகும் என்று வாரியார் சொல்கிறார். எனவே வெளிவருகின்ற நூல்கள் சிப்பிக்குள் முத்துப் போல் இருக்க வேண்டும். வாசகர்களின் தாகத்தையும் அறிவையும் மேம்படுத்த வேண்டும்.

764 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *