எனக்குத் தொலைந்து போகப் பிடிக்கும்.
- தீபா ஸ்ரீதரன்.தாய்வான்
எப்பொழுதெல்லாம் தொலைந்துவிடத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் மலைகளுக்குச் சென்றுவிடுவேன். மலைகளின் கம்பீரம்,காலத்தின் இழுவையைப் பொருட்படுத்தாத அவற்றின் பொறுமை, அவை அரவணைத்துக்கொண்ட அத்தனை ஜீவராசிகளின் அசைவுகளையும், சப்தங்களையும் உள்வாங்கிக்கொண்டு அவை காக்கும் மௌனம் என்று பல உணர்வுகளைக் கடத்தும் அற்புதம் மலைகள்.
எனக்குத் தொலைந்து போகப் பிடிக்கும். சில நேரங்களில் எங்காவது சென்று தொலைந்து போவேன். அது ஒரு அந்நிய மனநிலையைக் கொடுக்கும், சற்று நேரம் அமைதி, சற்று நேரம் பதட்டம், பின் ஒரு தேடல், ஆசுவாசம் என்று கலவையான மனநிலை அது.அப்படியல்லாமல், ஒரு விஷயத்தில் நம்மை ஆழமாக ஈடுபடுத்திக ;கொள்ளும்போதும் நாம் தொலைந்து விடுவோம். அதற்கான முயற்சியையும் நான் செய்து கொண்டேயிருப்பேன். சமையல், இசைக்கருவி, வரைதல், ஓவியம் தீட்டுதல், எழுதுதல் என்று. இவற்றிலெல்லாம் நான் சற்று நேரம் தொலைந்தாலும், முழுமையான ஒரு தொலைதல் எனக்கு நிகழ்ந்ததில்லை.
அப்படி என்னை நான் முற்றிலும் தொலைப்பது குழந்தைகளுடன் விளையாடும்போது, ஒருவருடன் ஆழமாக உரையாடும்போது, மற்றும் மலையேறும்போது. ஒருவருடனான ஆழமான உரையாடல் என்பது ஒரு பேரலல் உலகத்தில் நடப்பது போன்ற உணர்வு. நம் புலன்களல்லாத ஒன்றின் வழியாக இந்த பிரபஞ்சத்தை உணர்வது. ஒரு அந்தரங்கத்தின் புரிதல், ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து ஒன்றைத் தரிசிக்கும் முயற்சி. அப்படிப்பட்ட ஒரு உரையாடலுக்கு, பெரிதாகக் காரணங்களோ, கேள்விகளோ,வாக்குறுதிகளோ, நம்பிக்கைகளோ வேண்டியிருப்பதில்லை.
நேர்மை மட்டுமே போதுமானதாகயிருக்கிறது. அது ஒரு வாழ்க்கையை வாழ்வது போன்றது. பெரிதாக அர்த்தங்கள் வேண்டியிருப்பதில்லை, ஆனால் அதை நேர்மையாக அணுகும்போது கிடைக்கும் தருணங்களின் அழகியல். மலையேறுவதும் கிட்டத்தட்ட அது போன்ற ஒரு ஆழமான உரையாடல்தான் எனக்கு. மலர்கள், பட்டாம்பூச்சிகள், முகமறியாத பறவைகளின் பேச்சொலிகள், ஏதோ ஒரு மூலிகையை உரசி வந்த காற்று, விதவிதமான இலைகள் என்று ஒரு அந்தரங்கத்தின் புரிதல் அது.
நேற்று சுமார் மூன்றரை மணிநேர மலையேற்றம், 11 கிலோமீட்டர். ஆறு மலைகள் ஏறி இறங்கினேன். சர்வ நிவாரணம். தொலைந்துபோக நினைப்பவர்களுக்கு ஒரு ஆலொசனை மலைகளில் தொலைந்து பாருங்கள் அங்கே தொலைவதற்குப் பெரிதாக மெனக்கெடல்கள் வேண்டியிருப்பதில்லை. காலத்தைப் பின்னிழுத்து குழந்தைப் பருவத்திற்குப் போக வேண்டியதில்லை. ஒரு அந்நியராக நம்மைப் பாவித்துக் கொள்ளத் தேவையில்லை கூர் நினைவுகளைக் கூட மழுங்கடித்துக் கொள்ளத் தேவையில்லை மலையில் அடிமீது அடிவைத்து ஏறும்போது தொலைந்துபோகும் மூச்சைப்போல அது தன்னிச்சையாய் நிழந்துவிடுகிறது.அதன் உச்சியைச் சென்றடையும்போது கண்ணில் படர்ந்துவிரியும் காட்சியில் தொலைத்த நம்மைவிட்டுவிட்டு வேறெதையோ எடுத்துக்கொண்டு கீழிறங்க விடுகிறது.
இப்படித் தொலைவதில் ஒரு சுகமான சவுகரியமுண்டு. மீண்டும் என்றாவது ஒருநாள் நம்மை மீட்டெடுக்கத் தோன்றினால் தொலைத்த இடத்திற்கே செல்லத் தேவையிருப்பதில்லை வேறு ஏதோ ஒரு தொலைதூர தேசத்தின்
மலை உச்சியை அடைந்தாலும் அங்கே பத்திரமாக நம்மை நமக்கு மீட்டுக்கொடுக்கும் ஒரு மலைக்குன்றின் தீப ஒளியைப்போல எங்கும் நிறைந்து சர்வ வல்லமை பொருந்தியதாக இருக்கின்றன மலைகள். மலைகளுடன், தீபா ஸ்ரீதரன்.
665 total views, 2 views today